பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 7 பிப்ரவரி, 2022

'முதலிரவுப் பாடம்'... கற்றுத்தருகிறார் ஆசிரியை [எபனேசர்] எலிசபெத்!

 

[எபனேசர் எலிசபெத்]

"பெற்றோர் இதைப் பற்றி பேசுவதே இல்லை; கல்வி முறையும் உடல் பாகங்கள் மற்றும் அதன் தேவைகளைக் கற்றுத்தர வெட்கப்பட்டதன் விளைவு, இந்தப் பாடத்தைக் கற்க எம் தலைமுறையினர் சன்னி லியோன் மற்றும் சகிலா அக்காவின் வகுப்பறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று" 
என்று அங்கலாய்ப்பவர், மேலே காட்சிதரும்[புகைப்படம்] 'எலிசபெத்' அவர்கள்.

"அந்தரங்க உறவு குறித்த பாடத்தை இளைய தலைமுறையினருக்கு முறையாகக் கற்றுத்தராததன் பின்விளைவுதான் உலகில் அதிகம் ஆபாச வீடியோக்கள் பார்க்கும் நாடுகளில் என் நாடும் என் நாட்டு மக்களும் முதலிடம் பிடித்திருப்பது" என்று வேதனைப்படவும் செய்கிறார் இவர்.

'முதலிரவில் முதல் உடலுறவு பற்றி ஆண்களே வெளிப்படையாகப் பேசத் தயங்குகிற காலச் சூழலில், ஓர் இளம் வயதுப் பெண்ணான இவர்[எலிசபெத்] பேச முனைந்தது வரவேற்கத்தக்கதும், பெரிதும் போற்றத்தக்கதுமான செயலாகும்.

வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் ஆசிரியையான இவர் கற்பிக்கும் 'முதலிரவுப் பாடம்' முதல்தரமானது என்றும் சொல்லலாம்.

இவர், 'கோரா'[quora.com] தளத்தில், இது தொடர்பான ஒரு கேள்விக்கு அளித்துள்ள பதிலை இங்கே பதிவு செய்கிறேன்.

#"முதலிரவின் முதல் உடலுறவுத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?"

முதலிரவை எதிர்கொள்ளவிருக்கும் பெண்களுக்குச் சில சந்தேகங்கள் இருக்கும். அவற்றில் சில.....

'என் மார்பு அவ்வளவு அழகாக இல்லையே, இது என் கணவருக்குப் பிடிக்குமா?

'என் உடல் பாகங்களில் தழும்புகள் இருக்கின்றனவே, இவை அவருக்கு என் மீதான ஆசையைக் குறைக்குமா?'

இவ்வாறு, திருமணமான பெண்கள் எளிதில் விடை காண முடியாத கேள்விகளைச் சுமந்துதான் முதலிரவை எதிர்கொள்கிறார்கள்.

பெண்களின் நிலை இதுவென்றால், ஆண்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுவேதான்.

'இதைச் சரிவரச் செய்யவில்லை என்றால் என்னவள் என்னை ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன் என்று நினைத்துவிடுவாளோ?'

'எல்லாம் சரியாகச் செய்வேனா?... இல்லை, சொதப்பிடுவேனா?'

'தோற்றுவிட்டால், இவனால் முடிந்தது இவ்வளவுதானா என்று இளக்காரமாகப் பார்ப்பாளா?'

இவை போன்றவை ஆணுக்குள்ள கவலைகள்.

ஆக, முதலிரவு என்பது இருவருக்குமே பயமுறுத்தும் இரவுதான்.

அந்தப் பயத்தை எதிர்கொள்ளுவது எப்படி என்பதைப் பற்றிய ஒரு பாடத்தைக் கையில் எடுத்துப் பதில் எழுவதில் எனக்கு மகிழ்ச்சியே .

பாடத்தைத் தொடர்கிறேன்.

*கணவன் மனைவி என்றான பிறகு, இனி எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலில் உணருங்கள். 

*மனம் விட்டு பேசுங்கள். உங்கள் ஆசைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் ஒருவர் மற்றவரிடம் தயங்காமல் சொல்ல வேண்டும்.

*நீங்கள் படத்தில் பார்த்த கதாநாயகிகள், கதாநாயகன்கள் போன்று உங்கள் துணை இருக்கமாட்டார் என்பதை மனதில் ஆழமாகப் பதித்திடுங்கள்.

*அழகோ கவர்ச்சியோ, கூடக்குறைய இருந்தாலும்  ஒருவரையொருவர் மனப்பூர்வமாக ஏற்கும் மனப்பக்குவமும், அன்புள்ளமும் இருவருக்கும் தேவை.

*"நான் உன்கூடவேதான் இருக்கிறேன்; எப்போதும் இருப்பேன். பயப்படாதே. இன்றைக்குத் தோற்றால் நாளைக்கு ஜெயிக்கலாம். நீ வெற்றிபெறும்வரை நான் உனக்கு உதவுவேன்" என்னும் ஆறுதல் மொழியை இருவரும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் போதும்.

அப்புறம், அதீத எதிர்பார்ப்புகளை  ஓரம் கட்டுங்கள்.

முதல் இரவிலேயே எல்லாம் என்பது சரியில்லை.

'அந்தரங்க உறவு' என்பது ஒரு 'ஓட்டப் பந்தயம்' அல்ல; ஒரு நெடிய வாழ்க்கைப் பயணம். அடுத்தடுத்து வரும் இரவுகளில் படிப்படியாக முன்னேறலாம்.

மனைவியிடம் முதல் இரவில் தோற்றுவிடக் கூடாதென்பதற்காக விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணிடம் இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு முதலிரவைச் சந்திக்க நினைப்பது முட்டாள்தனம். இன்றைய தலைமுறையினர் செய்யும் தவறே இதுதான்.

முதல் இரவின் வெற்றி என்பது முதலில் நடக்கும் ஒரே ஒரு இரவில் பெற்றுவிடுவது அல்ல; பல இரவுகளின் கூட்டு முயற்சியில் மட்டுமே கிட்டக்கூடியது அது.

அந்த வெற்றியின் பயனை உங்கள் குழந்தையை இரு கைகளில் ஏந்துவீர்களே அப்போது முழுமையாக அனுபவிப்பீர்கள்.

வாழ்த்துகள்.

==========================================================================

*****'எபனேசர் எலிசபெத்' அவர்களைத் தொடர்புகொள்ளும் வாய்ப்பு அமையாததால், அவரின் அனுமதியின்றிக் கட்டுரையைச் சுருக்கி, வடிவத்தைச் செம்மைப்படுத்தியிருக்கிறேன்.

அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி; 'கோரா'வுக்கும்தான்.