பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

அணுக்களிடம் 'கோரிக்கை' வைக்கலாம்! சாதனை நிகழ்த்தலாம்!!

கடவுள்  'இருக்கிறார்' என்று அறிவியல் துறை இன்றளவும் நிரூபிக்கவில்லை; 'அணுக்கள்' இருப்பதை 100% உறுதிப்படுத்தியிருக்கிறது.

அணுக்களால் ஆனது மனிதர்களாகிய நம் உடம்பு.

[பல்வேறு குழுக்களாக இணைந்து?] உடலின் அனைத்து உறுப்புகளையும் இயக்குபவை இந்த அணுக்களே.

அணுக்களுக்குச் சிந்திக்கும் திறன் இல்லையாயினும், இவற்றின்(மரபணுவும் பிற அணுக்களும்) இணைப்பு நமக்குச்  சிந்திக்கும் அறிவைத் தந்திருக்கிறது.

அந்தச் சிந்திக்கும் அறிவுதான் 'நம்மைப் படைத்தவர் யார்?', 'ஆளுபவர் யார்?' என்றெல்லாம் ஆராய்ந்தறியத் தூண்டுகிறது.

எத்தனை ஆராய்ந்தும், இன்றளவும் கடவுள் என்று ஒருவர் இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை[அவர் மனித மனங்களில் திணிக்கப்பட்ட ஒரு பிம்பம் மட்டுமே].

ஆனாலும், 'மனித உடம்பு உருவாகக் காரணம் அணுக்களே[அணுக்கள் உருவாகக் காரணம் யார் என்பது இன்னும் விடை கண்டறியப்படாத கேள்வி]; அதை இயக்குபவையும் அவையே' என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடவுள் என்னும் பிம்பத்தை வழிபட்டதால் மனிதன் பெற்ற பலன் ஏதுமில்லை[மதவாதிகளும் ஆன்மிகப் பரப்புரையாளர்களும் இதை ஏற்கமாட்டார்கள். ஏற்றால், அவர்களின், காலங்காலமாகக் கட்டிக் காக்கப்பட்ட கவுரவம் பறிபோகும். பக்தர்கள் வாய் திறக்க மாட்டார்கள். கடவுள் தண்டிப்பார் என்னும் பயம் காரணம்].

எனவே, கடவுளைத் துதிபாடும் வழக்கத்தை விட்டொழித்து, நமக்கு எல்லாமும் ஆக இருக்கிற அணுக்களை மனதில் பதித்து....

"நான் தேவைக்கு மேல் ஆசையை வளர்த்துக்கொள்கிறேன். ஆசையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அணுக்களே உதவுங்கள்."

"கண்ட கண்ட நோய்களால் தாக்கப்படுகிறேன். தாங்கும் சக்தியை அதிகரிக்க நீங்கள் ஒத்துழையுங்கள்."

"யாருக்கும் எந்தவொரு உயிருக்கும் தீங்கு செய்யாமல், இயன்றவரை உதவி செய்து வாழ்ந்து முடிப்பது என் ஆசை. அந்த ஆசைக்கு வலிமை சேர்ப்பது உங்களின் கடமை என்பதை மறவாதீர்கள்."

"மரண பயம் மனித குலத்துக்கு மட்டுமே உரித்தானதாக உள்ளது. அதைக் குறைத்திட நீங்கள் உதவிட வேண்டும்." 

மேற்கண்ட இவையும், இவை போன்ற இன்றியமையாத தேவைகளையும், கண் மூடி அமர்ந்த கோலத்தில்[இதுவும் ஒருவகைத் தியானம்தான்]  அணுக்களிடம் கோரிக்கையாகச் சமர்ப்பித்தால், அணுக்களின் இணைப்பால் சிந்திக்கும் அறிவைப் பெற்றது போலவே கோரிக்கைக்கான பலன்களைப் பெறுவதும் (ஓரளவுக்கேனும்) சாத்தியம் ஆகலாம்.

தன்னம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதால், காலப்போக்கில் பயன் விளையலாம் என்பது ஒருவித நம்பிக்கையே.

இதற்கென்று அதிகாலையிலோ, துயில்கொள்ளத் தொடங்கும் வேளையிலோ சிறிது நேரம் ஒதுக்கலாம்.

எனவே, நாள்தோறும் நம்மை ஆளும் அணுக்களை மனதில் இருத்திக் கோரிக்கைகளை முன்வைத்துத் தியானம் செய்து பயன் பெறுவோமாக! 

==========================================================================

ஆர்வம் காரணமாக எழுதிய இப்பதிவில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதைப் பின்னர் அறிய முடிந்தது.

இப்போதைக்கு அவற்றைச் சரி செய்யும் அளவுக்குப் போதிய அறிவியலறிவு எனக்கு இல்லை.

இதை வாசிப்போர்க்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதும் இல்லை என்பதால் இதை நீக்கிவிடுவதைத்(delete)த் தவிர்த்துள்ளேன்.

பொறுத்தருள்க.