'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று பேசுவதை, இவர் உட்பட 'பாஜக' கட்சிக்காரர்கள் அண்மைக்கால வழக்கமாக்கியிருக்கிறார்கள்.
'நாடாளுமன்றத்திற்கோ, மாநிலச் சட்டமன்றங்களுக்கோ இடைத் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்த்து, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓரே ஒரு காலக்கட்டத்தில் நடத்தி முடித்தல்' என்பதைத்தான் இவர்கள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்று ஆளாளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் இப்படிச் சொல்வது நமக்கு ஒரு பொருட்டல்ல; ''ஒரே நாடு[இந்தியா]' என்று சொல்வதுதான் நம் நெஞ்சை உறுத்துகிறது.
'ஐந்தாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்படும்' என்று சொன்னாலே, அந்தத் தேர்தல் இடம்பெறுவது இந்த நாட்டில்தான் என்பது சொல்லாமலே புரிகிற ஒன்று.
எனவே, 'ஒரே நாடு' என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஒரு நாட்டுக்குள்[இந்தியா] இருபது முப்பது என்று பல இந்திய நாடுகளா உள்ளன?
இருக்கிற ஒரு இந்திய நாட்டுக்குத் தேர்தல் நடத்தாமல், வேறு சில/பல நாடுகளுக்கும் சேர்த்தா இங்கு தேர்தல் நடத்துகிறோம்?
இல்லையே!
'உங்க குடும்பத்தைப் பத்தி ஏதும் சொல்லுங்க"ன்னு ஒருத்தர் கேட்டா, "எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்"னு ஆரம்பிச்சு, சொல்ல நினைப்பதைச் சொல்லாமல், "என்னுடையது ஒரே குடும்பம்"னு சொல்லித் தொடங்குவது எப்படியோ அப்படித்தான், "ஒரே நாடு[இந்தியா]..." என்பதும்.
இனியும், இவர்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி, 'இந்த நாடு[இந்தியா] எதிர்காலத்தில் ஒரே நாடாக இருக்கும் வாய்ப்பு இல்லாமல் போகுமோ' என்னும் அவநம்பிக்கையை நம் மக்கள் மனங்களில் விதைக்க வேண்டாம் என்பது நம் வேண்டுகோள்.
"இந்தியாவில் இனி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்படும்" என்று சொல்வதே போதுமானது. தேவையற்ற சொல்லாடல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை!
==========================================================================