அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 15 மார்ச், 2022

பெண்மணிகளும் 'பொன் அணி'களும் ஒன்றல்ல!

மனிதன் விலங்காக வாழ்ந்தவன். விலங்குகள் இன்றளவும் அம்மணமாகத் திரிவதுபோல், இவனும் அன்று அம்மணமாகத் திரிந்தவன்தான்.

ஆடைன்றித் திரிந்த காலங்களில், ஆண், இயற்கைச் சூழலுக்கு ஏற்பக் காம உணர்ச்சிக்கு ஆளான நேரங்களில் மட்டுமே  பெண்ணுடன் புணர்ச்சி செய்தான்; கண்ட கண்ட நேரங்களில் எல்லாம் உடலுறவில் ஈடுபடவில்லை.

மனிதன் ஆறறிவாளனாக ஆகும்வரை இந்நிலையே நீடித்தது. 

முழுமையான விலங்கு நிலையிலிருந்து விடுபட்டு, சற்றே சிந்தித்து வாழும் நிலை உருவானபோது, இரவு பகல் என்றில்லாமல், எப்போது வேண்டுமானாலும் உணர்ச்சி தூண்டப்படுவதைத் தவிர்க்க, அந்தரங்க உறுப்புகளை மறைக்க ஆரம்பித்தான். அப்போதைக்கு இலைதழைகளும், விலங்குகளின் தோல்களும்  அதற்குப் பயன்பட்டன. 

பின்னர், இவன் பருத்தி முதலான பொருள்களைக் கொண்டு ஆடை தயாரித்து உடுத்தலானான். இதற்கான முக்கியக் காரணம் மாறிக்கொண்டே இருந்த தட்பவெப்பம்தான். 

உடம்பைப் பாதுகாக்க ஆடை உடுத்துவதான இந்தப் பழக்கம் பின்னர் ஒரு நாகரிகமாகவும் ஆகிப்போனது.

இந்த நாகரிகம்.....

அரைகுறை ஆடையுடன் பெண்ணைப் படம்பிடித்து வலைத்தளங்களில் பரப்புதல், ஆபாசமாக உடை உடுத்தச் செய்து திரைப்படத்தில் நடிக்கச் செய்தல் என்றெல்லாம் கொச்சைப்படுத்தப்பட்டது. இதனால், பாதுகாப்பற்ற சூழலில் உள்ள பெண்களைக் கடத்தி வன்புணர்வு செய்தல் அடிக்கடி நிகழ்ந்தது.

இந்த அநாகரிகமானதும், ஆபத்தானதுமான சமூகச் சூழலில், பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்ல நேரிடும்போது, முழு உடம்பையும் மறைக்கும் வகையில் ஆடை ஆணிதல் வேண்டும் என்று வழிப்படுத்தப்பட்டார்கள். இது பாராட்டத்தக்க வழிமுறை அல்ல என்றே தோன்றுகிறது.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பலவீனமானவர்கள் என்று கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், இந்த அறிவியல் யுகத்தில் நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது.

தற்காப்புக்கென்று பல கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெண்கள் காவல்துறையில் சிறப்பாகப் பணி செய்து தாங்கள் ஆண்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்து எதிரிகளுடன் போரிடும் அளவுக்கு நெஞ்சுரம் கொண்டவர்களாக விளங்குகிறார்கள். எனவே.....

கவர்ச்சிக்காக அல்லாமல், மரியாதைக்குரிய வகையில் ஆடை உடுத்தும் முறையையும், தற்காப்புப் கலையையும் கற்றுத் தருவதோடு, அவர்கள் கைவசம் சிறு கத்தியுடன்[காந்தியடிகள் சொன்னது] வெளியே செல்வதை வழக்கப்படுத்தலாம்.

மறைத்து வைத்துப் பாதுகாப்பதற்குப் பெண்கள் பொன்னால் ஆன நகைகளைப் போன்றவர்கள் அல்ல; ஆண்களுக்குச் சமமாக வாழ்வதற்கான முழு உரிமையைப் பெற்றவர்கள் என்பதை எவரும் மறத்தல் கூடாது..... கூடவே கூடாது.