அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 23 மார்ச், 2022

நிறையாத வயிறுகளும் நிறைவேறாத காதல்களும்!

 "மலர்....." -அழைத்தான் பக்கவாட்டு இருக்கையிலிருந்த இளங்குமரன்.

"சொல்லுங்க குமரன்" -கணினியை நோட்டமிட்டவாறே சொன்னாள் மலர்.

"டீ குடிச்சிட்டு வருவோம், வா" என்றான் அவன். 

"எனக்குத் தேனீர் குடிக்கிற பழக்கம் இல்லைன்னு உங்களுக்குத் தெரியும்தானே?"

"இன்னிக்கி ஒரு நாள் மட்டும்... எனக்காக."

"உங்களுக்காகவா?....." -சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்த மலர், பக்கவாட்டில் பார்த்தாள். புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தான் இளங்குமரன். 

அவள் எழுந்தாள்.

இருவரும் இணைந்து நடந்தார்கள்.

சிற்றுண்டிச்சாலையை அடைந்ததும் அருகருகே இருந்த இருக்கைகளில் அமர்ந்தார்கள். 

பணியாளரிடம் சொல்லி இரண்டு தேனீர் வரவழைத்தான் அவன்.

"என்கிட்டே ரகசியமா ஏதோ சொல்ல நினைக்கிறீங்க. அதைப் புரிஞ்சிட்டுத்தான் நீங்க கூப்பிட்டவுடன் கேள்வி கேட்காம கிளம்பி வந்தேன். சொல்லுங்க குமரன்." - மலரின் முகத்தில் மெலிதான புன்னகையும் சந்தேக ரேகைகளும் இழையோடின.

"வந்து மலர்... அது வந்து..."

"விசயத்துக்கு வாங்க."

"உன்னை நான் காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்."

அவனின் இந்த விருப்பத்தை ஏற்கனவே அனுமானித்திருந்த மலரின் முகத்தில் சலனம் ஏதுமில்லை. உணர்ச்சியற்ற தொனியில் பேசத் தொடங்கினாள். "என் அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலிகள். பரம்பரைக் கூலிகள்னும் சொல்லலாம்....."

குறுக்கிட்டான் இளங்குமரன், "அதெல்லாம் எனக்குப் பொருட்டல்ல மலர். ஆறு மாசப் பழக்கத்தில் உன்னை முழுசாப் புரிஞ்சிட்டிருக்கேன். நீ சம்மதிச்சா....."

'நான் சொல்லுறதை முழுசா கேட்டுக்குங்க" என்று இடைமறித்த மலர், தொடர்ந்து பேசினாள்: "எங்க பரம்பரையே விவசாயக் கூலிகள்னு சொன்னேன் இல்லையா? இன்னும் சொல்லுறேன். படிப்பறிவில்லாத என் அப்பாவும் அம்மாவும், ஊர் சுத்திப் பார்க்குறது,  சினிமா போறது, ஆசைப்பட்டபடி எல்லாம் உடை உடுத்துறதுன்னு சராசரி மனுசங்களுக்கான எந்தவொரு சந்தோசத்தையும் அனுபவிச்சதில்ல.  சரியாச் சாப்பிட்டும் சாப்பிடாமையும் வந்த வருமானத்தை மிச்சப்படுத்தி என்னைப் படிக்க வைச்சாங்க....."

குரலில் லேசான பதற்றம் தொற்றிக்கொள்ளவே, சற்று நேரம் பேசுவதை நிறுத்திய அவள், "நான் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாசம் ஆகுது. இந்த ஆறு மாசமாத்தான்  என்னைப் பெத்தவங்க வயிறு நிறையவும் வாய்க்கு ருசியாகவும் சாப்பிடுறாங்க. இனியும் அது தொடரணும். கவுரவமா உடை உடுத்தணும்; தினமும் தொலைக்காட்சி பார்க்கணும்; நல்ல சினிமாப் படம் வந்தா போய்ப் பார்க்கணும்; வருசத்தில் ஒரு தடவையாவது சுற்றுலாப் போகணும்" என்றாள்;  கோப்பையிலிருந்த தேனீரை உறிஞ்சிச் சுவைக்க ஆரம்பித்தாள்.

அவள் பருகி முடிக்கும்வரை காத்திருந்த இளங்குமரன் சொன்னான்: "இதுக்கெல்லாம் நம் திருமணம் ஒரு தடையாக இருக்காது மலர்."

"இருக்காதுன்னு இப்போ நீங்க சொல்லுறீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு கணவனாகவும் இப்படி உங்களால சொல்ல முடியுமா குமரன்? முடியுமோ முடியாதோ, சிக்கலில் மாட்டிக்க நான் விரும்பல. எனக்கு இப்போ இருபத்தி நாலு வயசு ஆகுது. இத்தனை வருசமும் என்னைப் பெத்தவங்க எனக்காகவே வாழ்ந்திருக்காங்க. இருபத்தி நாலு வருசம் இல்லேன்னாலும், ஒரு நாலு வருசமாவது அவங்களுக்காக மட்டுமே நான் வாழ விரும்புறேன். அதனால....."

-சொல்லி நிறுத்தி, இளங்குமரனின் முகத்தை உற்றுநோக்கியவாறு சொன்னாள் மலர்: "நாலு வருசம் போகட்டும். அப்போ உங்களுக்குக் கல்யாணம் ஆகாம இருந்தா, 'நான் உன்னைக் காதல் கல்யாணம் செய்துக்க விரும்புறேன். உனக்குச் சம்மதமா'ன்னு கேளுங்க, பதில் சொல்லுறேன்."

சட்டென அவள் மீதான தன் பார்வையைத் திசை திருப்பினான் இளங்குமரன்; தேனீருக்குக்கான பணத்தைக் கொடுக்கக் கல்லாவை நோக்கி நடந்தான்.

அவனுக்காகக் காத்திராமல் விரைந்து நடந்து தன் இருக்கையை அடைந்தாள் மலர்!

==========================================================================