இங்கு வாழ்வோர் அத்தனைப் பேரும் மனிதர்கள்தான். இவர்களில் 'மனிதப் பாசம்' உள்ளவர்கள் எத்தனைப் பேர்?
இவர்கள் பெரும்பாலானவர்களாக இருந்து, பிள்ளைப்பாசம் உள்ளவர்களாகவும் இருந்திருந்தால் சிறார் விபச்சாரம் முளைவிட்டிருக்குமா? நாளும் பொழுதுமாக வளர்ந்துகொண்டிருக்குமா? கற்பனை செய்ய இயலாத அளவுக்குப் பால்மணம் மாறாத சிறுமிகள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் அக்கிரமம் தொடர்ந்துகொண்டிருக்குமா?
கேள்வி கேட்கத் தெரிகிறது நமக்கு. பதில் தெரிவதில்லை. நம்மால் முடிந்தது சில சொட்டுக் கண்ணீரை அவர்களுக்குக் காணிக்கையாக்கிச் சில நிமிடத் துக்கம் அனுசரிப்பது மட்டுமே.
வாசிப்பைத் தொடருங்கள்.
'சிறார் விபச்சாரம்':
*தாய்லாந்தில் 12 வயதிற்குட்பட்டோரின் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் எண்ணிக்கை 6 லட்சம். 18 வயதிற்குட்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடி என்று வைத்தாலும் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்போர் அதில் 10 விழுக்காடு[%]. குழந்தை விபச்சாரத்தின் சொர்க்கமான தாய்லாந்தில் 3 லட்சம் குழந்தைகளுக்கு எயிட்ஸ்!
*ஆர்மைன் என்ற தாய்லாந்து சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்படும்போது அவளுக்கு வயது 12; பருவத்திற்குக்கூட வரவில்லை. கடற்கரையோர உணவு விடுதியில் நல்ல வேலை வாங்கித் தருகிறோம் என்று பொய் சொல்லி அவளது ஏழைப் பெற்றோரை ஏமாற்றி விபச்சாரத்திற்குப் பெயர் போன புக்கேட் நகரில் கொண்டுவந்து விற்றுவிட்டார்கள் விபச்சாரத் தரகர்கள். “ஒரு இரவிற்குக் குறைந்தது 3 பேர். எல்லோரும் அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், ஐரோப்பியர்கள் தான்"என்கிறாள் ஆர்மைன். இரண்டு ஆண்டுகள் இந்த நகரத்தில் உழன்ற பின் அவளை மீட்டெடுத்தது காவல் துறை. ஆனால் அதற்குள் ஆர்மைன் எயிட்ஸ் நோயாளியாக ஆகிவிட்டாள்.
*புண்ணிய பூமியாம் இந்தியாவில் 4 லட்சம் சிறுவர் சிறுமிகள், பிலிபைன்ஸ் 60,000 பேர், பிரேசிலில் 2.5 லட்சம் பேர் என்று லட்சக்கணக்கில் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
*அநேகமாக எல்லா ஏழை நாடுகளும், முன்னால் சோசலிச நாடுகளும் ஐரோப்பிய அமெரிக்க காம வெறியர்களுக்கு விருந்துபடைக்கும் மையங்களாகவே உள்ளன.
*வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து விபச்சாரத்தில் தள்ளபட்ட டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணின் போட்டியை பீஇபீ.சி தொலைக்காட்சி ஒளிபரப்பியது. "அவர்கள் என்னை அடித்தார்கள்; சூடுவைத்தார்கள்; பட்டினி போட்டார்கள். 5 நாட்களுக்கு மேல் என்னால் தாக்குபிடிக்க முடியவில்லை. கடைசியில் என் தன்மானத்தையும் கன்னித் தன்மையையும் வெறும் 25 டாலருக்கு இழந்தேன் என்று கண்களில் நீர் வழியக் கூறினாள் அந்தப் பெண்.
*நேபாளத்திலிருந்து சிறுமிகளும், பெண்களுமாக ஆண்டுக்கு 7,000 பேர் பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிக்கு இறக்குமதியாகிறார்களே, எப்படி?
நேபாளத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ஒரு 14 வயதுச் சிறுமியை பம்பாய் விபச்சார விடுதி ஒன்றில் வைத்து 3 வாரம் சித்திரவதை செய்தார்கள். அவள் எதிர்த்து நின்றாள். பிறகு ஓர் இருட்டறையில் அவளை ஓரு நல்ல பாம்புடன் சேர்த்து அடைத்தார்கள். அச்சத்தில் உறைந்து போனாள். இரண்டு நாட்கள் கழிந்தன. முன்றாம் நாள் இணங்கினாள்.
*"ருமேனியாவுக்குப் போனேன். கேட்பாரில்லாத பெண்கள் யாரென்று தேடினேன். அவர்களை விலை பேசி வாங்கினேன். பிறகு அவர்களை அழைத்து வந்து பெல்ஜியத்தில் விற்றுவிட்டேன். பிறகு அவர்கள் பல கைமாறினார்கள். எனினும், கேட்பதற்கு ஒரு நாதியும் கிடையாது. தொழில் ரொம்பச் சுலபம், ஒரு கிலோ ரொட்டியை விற்பது போலத்தான்” என்று தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தான் ஒரு கங்கேரிய விபச்சாரத் தரகன்.
*பாலுறவு என்றால் என்னவென்றே தெரியாத, அதற்குரிய பருவமும் வராத சிறுவர்களும், சிறுமிகளும் விபச்சாரத்திற்கு உட்படுத்துவதன் சமூக விளைவுகள் என்ன?
சில ஆண்டுகள் இத்தகைய பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டபின் ஒருவேளை அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்? வாழ்க்கை மதிப்பீடுகள் என்னவாக இருக்கும்?
“திரும்பவும் எங்கள் நாட்டுக்குப் போய் என்ன செய்வது? குடும்பத்தோடு பட்டினி கிடப்பதா? ஆணாயிருந்தால் எவனையாவது கொலை செய்துவிட்டுப் பணம் திருடியிருப்பேன். பெண் என்பதால் விபச்சாரி ஆகிவிட்டேன்” என்றாள் பம்பாய் விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட ஒரு நேபாளப்பெண்.
*மாஸ்கோ, பம்பாய் விபச்சார விடுதிகளிலிருந்து தமிழ் நாட்டுக்கு மீட்டுக் கொண்டவரப்பட்ட பெண்களில் சிலர் திரும்பவும் அங்கேயே சென்று விட விரும்பினர். காரணம் .....
“இந்த நகரத்திற்கு அந்த நரகமே மேல்" என்பது தான் அவர்களது பதில்.
*கடத்தப்படும் சிறுவர்கள் சிலர் ஓரினச் சேர்க்கைத் தொழிலுக்குத் தள்ளப்படுகிறார்கள். சிறுமிகள், ரூ.75 ஆயிரத்துக்கு பாலியல் தொழில் நடத்துவோருக்கு 4 மாத ஒப்பந்தத்தில் விற்கப்படுகிறார்கள். பாலியல் தொழில் நடத்துவோர் சிறுமிகள் மூலம் ரூ.4 லட்சம்வரை சம்பாதிக்கிறார்கள்.
*ஆந்திரத்தில் இருந்து ஒராண்டுக்கு முன் புனேவுக்கு கடத்தப்பட்ட 11 வயது சிறுமி பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானார். அவர் கடைசியில் எய்ட்ஸ் நோயால் அண்மையில் இறந்துவிட்டார்” என்றார் ஆந்திரத்தின் ஆள் கடத்தல் தடுப்பு மைய அதிகாரி ஒருவர்.
*கர்நாடகத்தில் 2007ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலுக்காக வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. இவர்களில் 25 சதவிகிதம் பேர் 18 வயதுக்குக் குறைவான பெண்கள் மற்றும் ஆண்கள்.
நன்றி:
https://devapriyaji.wordpress.com/2009/11/27/881/