'ஹிஜாப்' அணிவது, வெகு சூடான விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், "இதை அணிவோர் முகத்தையும் மூடிக்கொள்கிறார்களே, சில நேரங்களில் அணிபவர் ஆணா, பெண்ணா என்று அறிய இயலாத நிலையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இது உதவுவதாக இருக்குமே" என்று சொல்ல நினைக்கும் சமரச மனப்பான்மை கொண்டவர்களும்கூட வாய் திறப்பதில்லை.
நீதி மன்றத்தின் பரிசீலனையில் உள்ளது இது என்பதோடு, 'இது மதச் சிறுபான்மையினர் பிரச்சினை; நாம் தலையிடுதல் கூடாது' என்னும் எச்சரிக்கை உணர்வும் முக்கியக் காரணமாக உள்ளது.
இந்நிலையில்.....
இஸ்லாமியரின் பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடுகள் ஆகியன பற்றியும் தன் கருத்துகளை இப்பதிவில் முன்வைத்துள்ளார். விரும்பினால் அவற்றையும் வாசித்தறியலாம்.
நன்றி!
பதிவு:
#ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.
முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். எனவே, முகத்தையும் மறைத்துக்கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.
ஆண்கள்கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவர்களது சுய ரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்ட வேண்டும்.
மேலும், முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும்கூடத் தவறு செய்யும்போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.
பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள்கூட பெண்களைப் போல் முகம் மறைத்துப் பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.
எனவேதான், முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.
நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.
கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபடக் கைகள் வெளியே தெரிவது மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். இதனால்தான் மணிக்கட்டுவரை கைகளை மறைத்துக்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது.#
முகம் அறியாத நண்பருக்கு நம் நன்றி!
==========================================================================