'இந்து, கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் என்று எல்லா மதங்களும் பெண்களுக்குள்ள ஒழுக்கமான ஆடையமைப்பை வலியுறுத்தியுள்ளன' என்று, இதிலுள்ள பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பது என் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
இதில், உரிய ஆதாரங்களுடன் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சில.....
*நபி(சல்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு முன்னரே, மோஸஸ் காலம் முதல்கொண்டே முகத்தை மூடி, முக்காடிட்டு ஆடை அணியும் வழமை இருந்துள்ளது. முக்காட்டை நீக்குவது பெண்ணை இழிவுபடுத்துவதின் அடையாளமாக இருந்தது.
*'முக்காடிட்டுக் கொள்வது நல்ல பெண்களின் அடையாளம்' என்று பைபிள்[பழைய ஏற்பாடு] சொல்கிறது.
*புதிய ஏற்பாடு ஹிஜாபை இஸ்லாத்தைவிடவும் வலியுறுத்தி, ஒரு பெண் தனது தலையை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றது.
*இந்து மதமும்கூட, பெண்கள் தங்களின் உடல் அழகைக் காட்டக்கூடாது என்று வலியுறுத்துகிறது['பெண்ணே உடல் அழகைக் காட்டாதே; குனிந்த பார்வையுடன் இரு; உன்னுடைய கண்களைத் தாழ்வாக்கிக் கொள். அண்ணாந்து பார்க்காதே! அது உன் பாதத்தை நோக்கியதாக இருக்கட்டும். பிறர் எவரும் உன் வெளித் தோற்றத்தைப் பார்க்கா வண்ணம் திரையிட்டுக் கொள்!'(ரிக் வேதம், நூல் 08, வேத வரி 33, மந்திரம் 19, – ஒரு சமூக வலைத்தளத்திலிருந்து இந்த ஆதாரத்தைப் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது].
*பௌத்தத்தில், 'அடிப்படையில் ஒரு பெண் தனது கரண்டைக் காலுக்கு மேல் உயரும் விதத்தில் ஆடை அணியக் கூடாது. அதே வேளையில், முகத்துக்குக் கீழே[முகத்துக்கு மேலே மூடணும்னு சொல்லலையே?] கழுத்துப் பகுதிகள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆக, இஸ்லாம் உட்பட உலகின் முக்கியமான மதங்கள்[இந்து, கிறித்தவம், பௌத்தம்] எல்லாம் பெண்கள் தலை முதல் பாதம்வரை மறைக்கும் வகையில் ஆடை உடுத்துவதை வலியுறுத்துகின்றன என்பது இப்பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது.
உலகின் முன்னணி மதங்களே 'பர்தா'வை வலியுறுத்தியிருப்பதால் நம்மைப் போன்ற சாமானியர்கள் இதை விமர்சிப்பது பயனற்றது என்றாகிறது.
எனினும், ஒர் ஐயம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
முஸ்லீம் மதத்தையோ, மேட்டுக்குடிகளையோ சார்ந்த ஆடவர்கள் வெளியே சென்று உழைத்துப் பொருளீட்டுகிறார்கள். முழு உடம்பையும் போர்த்த கோலத்தில் முஸ்லீம் பெண்களும் அலுவலகம் சென்று சம்பாதிக்க முடியும். மேட்டுக்குடிப் பெண்களுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால்.....
காடுமேடுகளிலும் வயல்வெளிகளிலும் கூலிக்கு உழைக்கும் பாட்டாளி வர்க்கப் பெண்கள்[கைம்பெண்கள், பெற்றோரை இழந்த பெண் பிள்ளைகள், அனாதைப் பெண்கள், ஏழைப் பெண்கள் என்றிப்படி] ஒட்டுமொத்த உடம்பையும் ஆடையால் மூடிக்கொண்டு வேலைக்குச் செல்வது சாத்தியம் இல்லையே.
"இவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு யார் பொறுப்பேற்பது?"
==========================================================================