அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 3 மே, 2022

படுத்தும் பதின்மப் பருவம்[100% உண்மை நிகழ்வு]!!!

"நீயெல்லாம் அக்கா தங்கச்சியோடு பிறக்கலையா?" -ஒரு பெண்ணின் வேதனை கலந்த அதட்டலான குரல், அரை உறக்கத்திலிருந்த என்னை விழிப்படையச் செய்தது.

இரவு நேர, 'சென்னை-ஈரோடு' பயணிகள் ரயிலில் பயணத்தைத் தொடங்கியபோதே எதிர் இருக்கையில் இருந்த அந்த இளம் பெண்ணைக் கவனித்திருந்தேன். வயசாளிகளையும் பார்க்கத் தூண்டும் பேரழகியாக அவள் இருந்தாள். 

அவளுக்கு நேர் எதிரில், சன்னலோர இருக்கையிலிருந்த இளைஞனின் பக்கம் என் பார்வை திரும்பியது. அவளின் கேள்வி அவனுக்கானதுதான். முகம் திருப்பி, வெளியே மங்கிய இருளில் தெரியும் காட்சிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அவன். 

"அக்கா தங்கையோடு பிறக்கலையான்னு உன்கிட்டேதான் கேட்டேன்." -குரலின் தொனியை உயர்த்தி மீண்டும் அவனைப் பார்த்து அவள் கேட்டபோதுதான் வேடிக்கை பார்ப்பதுபோல் அவன் பாவனை செய்கிறான் என்பதை என்னால் அறிய முடிந்தது.

அவளின் புதுப்பிக்கப்பட்ட கேள்விக்கும் அவன் செவி சாய்த்ததாகத் தெரியவில்லை.

அவனின் அலட்சியம், அல்லது தான் ஏதும் அறியாதவன் என்று நம்ப வைப்பதற்கான பாசாங்கு அவளின் கோபத்தை அதிகரித்திருக்க வேண்டும். "உன்னையெல்லாம்..... " என்று சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிக்காமல், கீழே குனிந்து எதையோ தேடினாள் அவள். அது அவளின் கால் செருப்புகளில் ஒன்றாக இருக்கக்கூடும். 

நான் உட்பட அங்கிருந்த பயணிகள் அனைவரும் அவளின் செய்கையை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த நிலையில், அவளருகே அமர்ந்திருந்த முதியவர் அவளின் கையைப் பற்றி இழுத்து, "வேண்டாம்" என்பதுபோல் சைகை செய்தார்.

அவரின் முதுமைத் தோற்றம், அவளுக்கு அவர் தந்தை என்பதைவிடவும் தாத்தாவாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது.

செருப்படி கொடுக்கும் முயற்சியை அவள் கைவிட்டிருந்தாள். ஆனாலும், சுட்டெரிக்கும் பார்வையால் அவனை முறைத்துக்கொண்டுதான் இருந்தாள். அடுத்த அவளின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கையில்.....

'விறு'க்கென்று இருக்கையிலிருந்து எழுந்த அந்தப் பதின் பருவ இளைஞன், மின்னல் வேகத்தில் குனிந்து அவளின் பாதம் தொட்டுக் கும்பிட்டான்; காலம் தாழ்த்தாமல் சில வினாடிகளில் அங்கிருந்து நகர்ந்தான்.

ஓரிரு  நிமிடம் போல அங்கே மௌனம் நிலவியது.

"அம்மா, அவன் என்ன பண்ணினான்னு சொல்லு. பக்கத்துப் பெட்டியிலோ அடுதடுத்த பெட்டிகளிலோதான் இருப்பான். தேடிக் கண்டுபிடிச்சுடலாம். பத்து நிமிசத்தில் ஜோலார்ப்பேட்டை வந்துடும். போலீஸ் ஸ்டேசனில் அவனை ஒப்படைச்சுடலாம்" என்றார் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

"ஒன்னும் இல்லீங்க." -இது அந்தப் பதின்பருவப் பெண்ணின் பதில்.

நான் பெரியவரைக் கவனித்தேன். கண் மூடி, சலனம் ஏதுமின்றிக் காட்சியளித்தார்.

"இவனுகளை எல்லாம் சும்மா விடக்கூடாது. என்ன பண்ணினான்னு சொல்லுமா. ஆக வேண்டியதை நாங்க பார்த்துக்குறோம்" என்றார் இன்னொரு பயணி.

"இல்லீங்க... ஒன்னும் இல்லீங்க" என்பதே அவளின் பதிலாக இருந்தது.

ஜோலார்ப்பேட்டையில் ரயில் நின்றது.

நான் போக வேண்டிய ஊர் அந்த வட்டாரத்தில் இருந்ததால் இறங்கினேன்; ரயில் நிலையத்தின் வாயிலை நோக்கி நடக்கலானேன்.

சற்று முன்னர் ரயிலில் நடந்த அந்தச் சம்பவம் முற்றிலுமாய் என் மனதை ஆக்கிரமித்திருந்து.

முறையற்ற வகையில் ஓர் ஆண் தன்னைத் தொட்டாலோ உரசினாலோ, பார்வையால் எரித்துவிடுவது போல் முறைத்துக் பார்ப்பதும், "மரியாதை கெட்டுடும், செருப்பு பிஞ்சுடும்" என்பதாக எச்சரிக்கை செய்வதும் பெண்கள் கையாளும் சாத்வீகப் போர்முறை.

"நீயெல்லாம் அக்கா தங்கையோடு பிறக்கலையா?" என்று ஒருத்தி கேட்கிறாள் என்றால், அவனை அடிப்பதற்குச் செருப்பைத் தூக்குகிறாள் என்றால், கேட்கப்படுபவன் அவளிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

சற்று முன்னர் ரயிலில் நடந்த அசம்பாவிதத்தில் அந்த வாலிபனின் நடவடிக்கை அதுபோலத்தான்  இருந்திருக்க வேண்டும். 

அவளின் பார்வையை எதிர்கொள்ளும்போதெல்லாம், தன் இணைந்த  கை விரல்களையே அவளின் கன்னமாகப் பாவித்து அவன் 'இச்' கொடுத்திருக்கலாம்; விரசமாகச் சிரித்திருக்கலாம்;  அவளுடன் அந்தரங்க உறவில் ஈடுபடுவது போல் தன் அங்கங்களை அசைத்துச் சேட்டை செய்திருக்கலாம்.

ஒரு பருவப் பெண்ணாக அவனின் சேட்டைகளை அலட்சியப்படுத்த  இயலாத நிலையில்தான், தன் மன வேதனையை, "நீயெல்லாம் அக்கா தங்கையோடு பிறக்கலையா?" என்ற கேள்வியின் மூலம் அவள் வெளிப்படுத்தியிருக்கிறாள்.

தன் நடவடிக்கையால் பெண்ணுக்குள் நிகழும் உணர்ச்சிப் போராட்டங்களையோ, சுற்றுச் சுழலையோ பொருட்படுத்தாத இளவட்டங்களே இம்மாதிரித் தவறுகளைச் செய்கிறார்கள். 

இவ்வகை இளைஞர்களுள் மேற்கண்ட நிகழ்வில் சம்பந்தப்பட்ட இளைஞனும் ஒருவன். புத்திசாலித்தனமாய் அவளின் பாதம் தொட்டு மன்னிப்புக் கேட்டதால் தப்பித்தான்.

மன்னிப்புக் கேட்ட பிறகும் அவன் தண்டிக்கப்பட்டிருக்கலாம். அது தவிர்க்கப்பட்டது அந்தப் பெண்ணின் இரக்கக் குணத்தால்.

இந்தக் குணம் ஆண்களைக் காட்டிலும் பெண்களிடமே மிகுந்து காணப்படுகிறது.

குமரியோ கிழவியோ, இந்த உயரிய குணம் பெண்களின் குருதியில் இரண்டறக் கலந்துள்ளது என்றே சொல்லலாம்.

==========================================================================

https://kadavulinkadavul.blogspot.com/2022/05/100.html

***சில ஆண்டுகளுக்கு முன்பு நேரில் கண்ட இந்த நிகழ்வை, கூட்டலோ குறைத்தலோ இன்றி இயல்பான நடையில் பதிவு செய்திருக்கிறேன்.