அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 4 மே, 2022

சுமப்பதற்கு மட்டுமல்ல இழுப்பதற்கும் தடை தேவை!

'யிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் இந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு காலமானார்.

அதைத் தொடர்ந்து, ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ஆதீனகர்த்தராகப் பதவியேற்று ஞானபீடத்தில் அமர்ந்தார். 

அன்றைய தினமே மனிதனை மனிதர்களே  தூக்கிச் சென்று 'வீதி உலா' வரும் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமர்ந்து வீதி உலாவந்தார். அந்தப் பல்லக்கை அதற்காக ஆதீனத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் சுமந்து வந்தார்கள்[இடையில் நிறுத்தப்பட்டுவிட்ட இந்த வழக்கத்தை இவர் புதுப்பித்திருக்கிறார் என்பது அறியத்தக்கது]. 

இது தொடர்பான பழைய நிகழ்வுகளை விவரித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்தியபோது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்பட்டு, பிறகு அது நிறுத்தப்பட்டுவிட்டது என்ற தகவலையும் குறிப்பிட்டதோடு தம்முடைய எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார். 

மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்பதாலும், இந்த நிலையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்பதாலும் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தைப் பல்லக்கில் அமர வைத்துத் தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்து மயிலாடுதுறைக் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.'

-இது செய்தி[https://tamil.oneindia.com/news/tamilnadu/mayiladuthurai-rdo-ban-dharmapuram-adheenam-pattina-pravesam-taking-pallaku-456860.html?story=3  Monday, May 2, 2022].

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை மனப்பூர்வமாய் வரவேற்கத்தக்கதாகும்.

"உயிரைக்கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீனத்திற்குப் பட்டினப்பிரவேசத்தை நடத்துவேன்" என்று மதுரை ஆதீனம் கூறியிருக்கிறார்.

இவர் குறிப்பிடுவது பக்தர்களின் உயிரை. அவர்களைத் தூண்டிவிட்டுப் போராடத் தூண்டுவது இவரின் நோக்கமாக இருக்கக்கூடும்.
மனிதரை மனிதர்கள் சப்பரத்தில் சுமப்பது போலவே விழாக் காலங்களில், சாமி சிலைகளைத் தேரில் வைத்து இழுத்துச்செல்லும்போது, பூஜை செய்யும் அர்ச்சகர்களையும் தேரில் இடம்பெறச் செய்வது வழக்கத்தில் உள்ளது.

இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்பது  உடனடித் தேவையாகும்.

அர்ச்சகர்கள் தரையில் நின்று தீபாராதனை காட்டினால் சாமிகளெல்லாம் கோபித்துக்கொள்ளுமா?

சாமிகளுக்குச் சமமாகத் தேரேறிப் பவனிவரும் வாய்ப்பை இவர்கள் பெற்றது எப்படி?

இத்தனை காலமும் இவர்களால் நாம் அடிமடையர்கள் ஆக்கப்பட்டது போதாதா?

மனிதர்களைச் சப்பரத்தில் அமர்த்தி மனிதர்கள் சுமப்பது இழிவானது என்றால், மனிதர்களைத் தேரில் இருத்தி இழுத்துச் செல்வதும்  சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்தானே?

இதெல்லாம் பாரம்பரியம், அதாவது, காலங்காலமாகப் பின்பற்றப்படுவது என்று சொல்லி அரசின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட முயல்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

கணவன் இறந்தவுடன் அவளைக் கைம்பெண் ஆக்கியதோடு அவனோடு சேர்த்து எரியவிட்டவர்கள் இவர்கள்தான். குழந்தைத் திருமணங்களை வழக்கப்படுத்தும் அக்கிரமங்களைச் செய்தவர்களும் இவர்கள்தான். இப்படி எத்தனையோ மூடத்தனங்களைப் பாரம்பரியம் என்னும் பெயரில் அழியவிடாமல் தடுத்துவருகிறார்கள்.

ஆகவே, இவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், அர்ச்சகர்களைத் தேரில் வைத்து இழுத்துச் செல்லும் நடைமுறைக்கும் அரசு தடைவிதிக்க வேண்டும்.

==========================================================================