வெள்ளி, 6 மே, 2022

பட்டினப் பிரவேசமும் ஒரு பகுத்தறிவாளனின் உபதேசங்களும்!!!

ருமை ஆதீனத்தின் பல்லக்குப் பவனிக்குத் தமிழ்நாடு அரசு[மாவட்ட ஆட்சியர் மூலமாக] தடை விதித்திருக்கிறது. இதை மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உட்படப் பல ஆன்மிகப் பெரும்பேரருளாளர்கள் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

'மனிதரை மனிதர்கள் சுமக்கக் கூடாது' என்று சுயமரியாதைக்காரர்கள் எழுப்பிய எதிர்ப்பு முழக்கங்களை மதித்து அரசு இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிகிறது.

பல்லக்கில் பவனி[பட்டினப் பிரவேசம்] வரவிருக்கும் தருமை ஆதீனம் மனித உருவில் நடமாடுபவரே தவிர, அவர் கடவுளின் அவதாரம் என்பதைப் போராட்டக்காரர்களும் தமிழ்நாடு அரசும் மறந்துவிட்டதே இந்தத் தவறு நேர்ந்ததற்கான காரணம் ஆகும்.

எப்போதும் அருவமாக இருப்பதையே விரும்புகிற கடவுள் ஆதீனங்களின் உருவில் மக்களுக்குத் தரிசனம் தந்து அருள்பாலிக்கிறார் என்பது தீர்க்கத்தரிசிகள் மட்டுமே அறிந்த உண்மை.

எனவே,

இவரை[இவரைப் போன்றவர்களையும்தான்]ப் பல்லக்கில் சுமந்து பவனி வருவது மட்டும் போதாது. கள்ளழகரைப் போல, ஆற்றில் இறக்கிக் அழுக்குப்போகப் புனித நீராட்டி ஆடல் பாடல் நிகழ்த்திக் கொண்டாடவும் வேண்டும்.

மடாலயத்தையே கோயிலாக்கி, புனித நீரால் ஆதீனத்தைக் குளிப்பாட்டி,  வேத ஆகம மந்திரங்களை ஓதிக்கொண்டே 'பால் அபிஷேம்', 'பழ அபிஷேம்', 'சந்தன அபிஷேகம்', 'மஞ்சள் அபிஷேகம்' எல்லாம் செய்து சிறப்பித்தால் காண்போருக்குக் கோடிப் புண்ணியம் சேரும்.

ஊஞ்சலில் உட்கார வைத்தோ, கால் நீட்டிப் படுக்க வைத்தோ தாலாட்டுப் பாடி  துயில்விக்கவும்  செய்யலாம். 

தருமை ஆதீனத்தின் பல்லக்கைத் தாமே தூக்கிச் சுமக்க இருப்பதாகச் சூளுரைத்த 'பாஜக' தலைவர் அண்ணாமலை அவர்களையும்கூட, தருமை ஆதீனத்தின் பல்லக்கை ஒட்டி ஒரு 'குட்டிப் பல்லக்கில்' அமர வைத்துப் பவனி[பட்டினப் பிரவேசம்] வரலாம்.

இவற்றையெல்லாம் செய்து முடித்தால், அண்ணாமலை அவர்கள் நடுவணரசிடம் 'போட்டுக் கொடுத்து', மு.க. ஸ்டாலின் அரசுக்கு வேட்டு வைக்காமலிருப்பார்.

மன்னார்குடி ஜீயர், மதுரை ஆதீனம் போன்றவர்கள், மிரட்டல் விடுக்காமல் ஸ்டாலினுக்கு அருளாசி வழங்குவார்கள்.

ஆகவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று நம்புகிறோம்.

==========================================================================