நீங்கள் ’காதல் கவிதை’ படைக்கும் கவிஞரா?
“ஆம்” என்றால், மெத்த மகிழ்ச்சி. உங்கள் வரவைத்தான் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.
சுற்றி வளைக்காமல் பிரச்சினையை முன் வைக்கிறேன்.
மாம்பழக் கன்னங்களும், மது ஊறிப் பளபளக்கும் உதடுகளும், கோங்கமலர்க் கொங்கைகளும் கொண்ட கவர்ச்சிப் பெண்களைப் பார்க்கும்போதுதான் உங்களுக்குக் காதல் கவிதை பிறக்கிறது என்று நான் சொன்னால், அதை நீங்கள் ஏற்பீர்களா, மறுப்பீர்களா?
உங்களால் மறுக்க முடியாது. ஏனென்றால், இதற்கு ஏராள உதாரணங்களை என்னால் தர முடியும். ஆபாசம் கலவாத சில காதல் கவிதைகள் மட்டும் இங்கே.
* * * * *
‘என் இதயத்தின் நீரெல்லாம்
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிடத் துடிக்குதடி’
இது சத்தியசீலன் ராஜேந்திரன் என்ற கவிஞர் யாத்தது[‘கிறுக்கல்கள்’]!
இதய அறைகளில் குருதி இருப்பது நமக்குத் தெரியும். இதயத்தில் நீர் இருப்பதாகவும், அது உறைந்துவிட்டதாகவும் இந்த ஆள் உளறியிருக்கிறார். 'கிறுக்கல்கள்'னு தலைப்புக் கொடுத்து எழுதும் இவர் ஒரு கிறுக்கன்தான். இம்மாதிரிக்கவிதைகளைத் தொடர்ந்து படித்தால் நாமும் கிறுக்கர்கள் ஆவோம்!
* * * * *
‘நீ உன் பாதம் கழுவிய
நீரைக் கொடுக்கிறாயா?…
அழகின் கடவுளுக்கு
அபிஷேகம் செய்ய வேண்டும்’
இங்கே, கடவுளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா?
ஓர் அழகியின் பாதம் கழுவிய நீர் கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் அளவுக்குப் புனிதம் ஆகிவிட்டதாம். என்ன அநியாயம்!
அழகியின் சிறுநீரைப் புனிதமாக்கியும் இவர்கள் கவிதை எழுதுவார்களோ?!
* * * * *
‘பூக்கள் கூட
உன்னைப்போல் வெண்மை இல்லையே.
உன்னைப் போல் பெண்ணைப்
பூமி பார்த்ததில்லையே![‘தமிழ், காதல் கவிதைகள் உலகம்’]
இந்தக் கவிஞருடைய ‘இவளை’ப் பார்க்கணும்னா தேவருலகம் போகவேண்டும்! போனால் திரும்பி வருவோமா?
* * * * *
மே ற்கண்ட கவிதைகளை வழங்கியவர்கள் பிரபலம் ஆகத் துடிக்கும் கவிஞர்கள்.
மிக மிக மிகப் பிரபலம் ஆன ஒரு [சிறந்த]கவிஞரின் கவிதை கீழே...........
‘அன்பே
!
அந்த
நதிக்கரையில்
உன்
கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன்
!
அது
கைக்குட்டையா?
இல்லை,
காதல்
தேவதை
தன்
ஒரு சிறகை
உதிர்த்து
விட்டுப்
போய்
விட்டதா’
யாரென்று
தெரிகிறதா?
கவிப்பேரரசு
வைரமுத்து!
அழகியாக இருக்கிற ஒரு பெண்ணின் கைக்குட்டை தேவதையில் சிறகாகத் தெரிகிறது கவிஞருக்கு. பெண் அவலட்சணமாக இருந்தால்?!
* * * * *
ஓ கவிஞரே ,
காதல் முலாம் பூசப்பட்ட காம போதையில், எதார்த்த வாழ்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத உங்கள் கவிதைகளைப் படித்துவிட்டு, இளைஞர்கள் கெட்டுச் சீரழிந்து போகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை.
உலக அளவில், 98% பெண்கள் தாங்கள் அழகிகள் அல்ல என்று சொல்கிறார்களாம்[www.dove.us/compain-for-real-beauty.aspx].
உங்களைப் போன்ற காதல் கவிஞர்களின் கண்கொண்டு ஆராய்ந்து கணக்கெடுத்தால், நம் நாட்டுப் பெண்களில் பல ஆயிரங்களில் ஒருவர் மட்டுமே அழகியாகத் தேர்வு பெறுவார்.
எஞ்சியுள்ள பெண்கள் உங்களுடைய கவிதைகளைப் படித்துவிட்டு, ‘நாம் அழகியாக இல்லையே’ என்று ஏங்குவார்கள்; மனம் வாடுவார்கள்; வருந்துவார்கள்!.
ஆகவே கவிஞரே!.... கவிஞர்களே!
இனியேனும்....
நம் பெண்களை, மண்ணில் நடமாடுபவர்களாகவே நினைத்துக் கவிதை புனையுங்கள். அவர்களை ஒரு போதும் ‘தேவதைகள்’ ஆக்காதீர்கள்.
======================================================================================================