நம் இருதயமானது துடிப்பதை நிறுத்தியபின் 30 வினாடிகளில் மூளையின் இயக்கமும் நின்றுபோகிறது; அதாவது, இதயம் இறந்த 30 நொடிகளில் மூளையும் இறந்துவிடுகிறது[இதயம் செயல்படும்போது மூளை செயல்படாமல் போனால் அதை முளைச் சாவு என்கிறது மருத்துவத்துறை].
இதை மனதில் பதித்து மேற்கொண்டு படியுங்கள்.
* * * * *
இறப்பு நிகழ்ந்துகொண்டிருந்த அந்த இறுதிக் கணங்களில்[30 நொடிகளில்]மூளையில் இருந்து எதிர்பாராத வகையில் 'மின் அலைகள்' வெளியாயின. அந்த அலைகளை மருத்துவ விஞ்ஞானிகள் பதிவு செய்தார்கள்.
வாழ்வின் பழைய நினைவுகள்தான் அவ்வாறு அலைகளாக வெளியாயின என்கிறார்கள் அவர்கள்.
இது அவர்கள் திட்டமிட்டுச் செய்த பதிவு அல்ல; தற்செயலாக நிகழ்ந்தது என்று சொல்கிறார்கள்.
இதன் மூலம், ஒரு மனிதன் மரணத்தைத் தழுவுகிற அந்த இறுதிக் கணங்களில் கடந்த கால அனுபவங்கள் அவனின் நினைவுக்கு வருகின்றன என்பது உறுதியாகிறதாம்[ஆதாரம்: ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங் நியூரோ சயின்ஸ் இதழ்].
ஆனால், கடந்த கால வாழ்க்கையில் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அனுபவங்களாகத்தன் அவை இருத்தல் வேண்டும் என்பது நிச்சயமில்லை; நம்மைப் பெரும் துன்பத்தில் உழலச் செய்தனவாகவும் இருக்கலாம். அது, சம்பந்தப்பட்ட நபர் கடந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கை முறையைப் பொருத்ததாக இருக்கலாம் என்கிறார்கள்.
மேற்கண்ட ஆய்வு முடிவு 2013ஆம் ஆண்டில் எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலமாகவும் உறுதிப்படுத்தப்பட்டதாம்[மூளையிலிருந்து மின் அலை வெளியாதல்]. இந்த ஆய்வை நிகழ்த்தியவர்கள், 'ஸெம்மர்' போன்ற மருத்துவ அறிஞர்கள்.
'இதை உறுதி செய்ய மேலும் பல ஆய்வுகள் நிகழ்த்தப்படுதல் வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
* * * * *
இந்த ஆய்வின் முடிவின் மூலம் நாம் பெறத்தக்க 'படிப்பினை' என்னவென்றால்.....
தினசரி உறங்கச் செல்வதற்கு முன்பு, கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கடந்த காலத்தில் நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான அனுபவங்களை மட்டும் அசைபோடுதல் வேண்டும். இதன் பயனாக மருத்துவ அறிஞர்கள் சொல்வதுபோல், நாம் மரணத்தைத் தழுவும் இறுதி நேரமான அந்த 30 நொடிகளில் நாம் அனுபவித்த இன்பமயமான அனுபவங்களே மூளையில் அலைகளாக வெளிப்படும் என்பதே.
இதனால், நமக்கு மரணம் சம்பவிக்கும்போது அதை மிக்க மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும் என்பதை அடியேன் மிக்க மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
முக்கியக் குறிப்பு:
தலைப்பிலுள்ள 'அந்த' என்னும் சொல்லுக்குத் தாங்கள் 'பலான' அர்த்தம் பண்ணி ஏமாந்திருந்தால் தங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்! ஹி... ஹி... ஹி!!!
====================================================================================