பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 26 ஜூலை, 2022

ஓடும் ரயிலை நிறுத்திய கம்பளிப் பூச்சிகள்!!![பகிர்வு]

யில்கள் மோதி இந்தியாவில் எத்தனையோ யானைகள் பலியாகியுள்ளன; எத்தனையோ பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் ஓடும் ரயிலில் மாட்டிச் சின்னாபின்னமாகியுள்ளன. இந்த விபத்தின்போது ரயிலில் இருப்பவர்களுக்குச் சத்தம் கேட்கலாம். மற்றபடி, ரயில் தடையில்லாமல் சென்றுகொண்டிருக்கும். இதற்குக் காரணம் ரயிலின் எடையும் மற்றும் அதன் வேகமுமாகும். ஆனால், இந்த ரயிலைப் புழுக்கள் ஒன்று சேர்ந்து நிறுத்தியுள்ள சம்பவம் நடந்ததுண்டு என்றால் நம்புவீர்களா?

நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது வரலாறு.

ரயிலை நிறுத்தியவை சிவப்புக் கம்பளிப் புழுக்கள்.(Red hairy caterpillar). இந்தப் புழுக்களின் உடலில் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் முடிகள் நிறைந்திருக்கும். ஒரு புழுவின் எடை கிராம்கூட இருக்காது; நீளம் சுமார் மூன்று அங்குலம் இருக்கும். 

இந்த இனத்தைச் சார்ந்த புழுக்கள் மிகவும் சுறுசுறுப்பானவை. வேகமாக ஓடும் சக்தியுடையவை. இந்தப் புழுக்கள் வேர்க்கடலைத் தோட்டத்திற்கு வரும். ஒன்று இரண்டு வந்தால் பரவாயில்லை; ஆயிரக்கணக்கில் வரும். வேர்க்கடலைச் செடியின் இலை, தழை என எல்லாவற்றையும் தின்று தீர்க்கும். அங்கு மருந்துக்குக்கூடச் செடியில் இலையைப் பார்க்க முடியாது. ஆடு, மாடு மேய்ந்தால்கூட ஆங்காங்கே பச்சை தெரியும். ஆனால், இந்த புழுக்களின் கோரப்பசிக்கு முழுத் தோட்டமும் பலியாகும். விவசாயிகளின் நிலை அதோகதிதான்.

கம்பளிப்புழு

பட மூலாதாரம்,ANDREW HIPPERSON / EYEEM / GETTY IMAGES

இந்தப் புழுக்கள் கூடு கட்டும் காலத்தில் ஆயிரக்கணக்கில் ஒரு இடத்தில் குவிந்து கிடக்கும். 

அப்படி ஒரு நாள் சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் பல ஆயிரக்கணக்கான சிவப்புக் கம்பளிப் புழுக்கள் குவிந்துகிடந்துள்ளன. மதுரையிலிருந்து சுமார் 600 பயணிகளுடன் வேகமாக வந்த பாண்டியன் விரைவு ரயில் இந்தப் புழுக்களின் மேல் ஏறியது. புழுக்கள் ரயிலின் சக்கரத்தில் நசுங்கிக் கூழ் போல் திரவ நிலையை அடைந்ததுள்ளன. இதனால் வழு வழு என அதிக வழுக்கும் தன்மை உடைய புழுவின் சகதி உருவாகியுள்ளது. 

இந்தச் சகதியில் ரயிலின் சக்கரங்கள் மாட்டிக்கொண்டன. இங்குச் சக்கரங்கள் சுழலுகின்றன. ஆனால், ரயிலால் நகர முடியவில்லை. சக்கரங்கள் நின்ற இடத்திலேயே சுற்றியவண்ணம் இருக்கின்றன. ரயிலால் இந்தப் புழுக்களின் கூட்டத்தைத் தாண்ட முடியவில்லை. 

இது நடந்து சுமார் 15 ஆண்டுகள் இருக்கும்.

நடுவழியில் ரயில் நின்றால் பழுது நீக்கப் பொறியாளர்களை அழைப்பது வழக்கம். ஆனால், இந்தத் தருணத்தில் பூச்சியியல் வல்லுநர்களை வரவழைத்து ஆலோசனை கேட்டுள்ளனர்! 

ரயிலின் போக்குவரத்தைச் சரி செய்ய முதலில் தண்டவாளத்திலிருந்த புழுக்களை அகற்றினர். பின்னர் சக்கரத்திலிருக்கும் இறந்த புழுக்களின் சகதியைக் காரதிரவம் கொண்டு கழுவிச் சுத்தப்படுத்தினர். பின்னர்தான் ரயில் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கியது.

==============================================================================================https://www.bbc.com/tamil/science-62170035