புதன், 27 ஜூலை, 2022

விஞ்ஞானிகள் சொல்வதெல்லாம் உண்மையா?!

29.07.2022 நாளிட்ட 'குங்குமம்' வார இதழில், 'பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைக் கண்டறிந்தது போலவே.....' என்னும் தலைப்பில் ஓர் அறிவியல் கட்டுரை வெளியாகியுள்ளது.

'பிரபஞ்சத்தின் ஆரம்பத் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் 'நாசா' வெற்றி அடைந்திருக்கிறது. அது குறித்த புகைப்படம் ஒன்றையும் சமீபத்தில் அது வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் பேரண்டம் எப்படி இருந்திருக்கிறது என்பதை அது காட்டுகிறது[79000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட 'ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்'[The James Webb Space Telescope] என்னும் அதி சக்தி வாய்ந்த தொலை நோக்கியை நாசா பயன்படுத்தியதாம்].

[The James Webb Space Telescope]

நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் உட்பட நமக்குப் புரியாத பல விசயங்களை விளக்கிச் சொல்வதற்காக, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் உதவியை நாடியிருக்கிறது குங்குமம்.

அவர் தந்த விளக்கங்கள்[புகைப்படத்துடன் தொடர்பில்லாதவை தவிர்க்கப்பட்டுள்ளன]:

"..... பொதுவாகவே லென்ஸ்களின் வேலை என்ன? நாம் காணும் காட்சியைப் பெரிதாக்கிக் காட்டுவது அல்லது, துல்லியமாகக் காட்டுவது. தொலை நோக்கிகளின் வேலையும் அதுவே.

அதே மாதிரியான ஒரு லென்ஸ் கருவிதான் 'ஜேம்ஸ் வெப்' தொலை நோக்கியிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லென்ஸ் 431 அடி குவிய நீளம் கொண்டது.

1300 கோடி ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல முடிந்த நம்மால் இதே மாதிரி எதிர்காலத்தை நோக்கியும் செல்ல முடியுமா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுந்திருக்கிறது.

நிச்சயம் முடியாது. காரணம்.....

எப்படி நடந்து முடிந்த ஒரு நிகழ்வைப் புகைப்படங்களாகக் கேமராவில் கேப்ச்சர் செய்து வைக்கிறோமோ அதே டெக்னாலஜிதான் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த விஷயங்கள்[நிகழ்வுகள்&காட்சிகள்?] அங்கே அப்படியே இருக்கின்றன....."

விஞ்ஞானி மயில்சாமி அவர்களின் விளக்கவுரையை வாசித்து வந்த என்னால், அடிக்கோடிட்ட மேற்கண்ட தொடரைக் கடந்து மேலே வாசிக்க இயலவில்லை. காரணம்.....

இந்த நிகழ்வு குறித்த சந்தேகம்.

பிரபஞ்சப் பொருள்களிலும் நிகழ்வுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன என்று சொன்னவர்கள் விஞ்ஞானிகளே.

அதாவது, பொருள்களில்[உயிர்கள் உட்பட] மாற்றங்கள் நிகழ்வது போலவே, பிரபஞ்ச நிகழ்வுகளிலும் காட்சிகளிலும் மாற்றங்கள் நிகழ்வது இயற்கை.

ஆக, மாற்றம் என்பது எங்கும் எதிலும் தவிர்க்க இயலாததாக இருக்கையில், 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த விஷயங்கள்[கட்டுரையில் இச்சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வுகள் அல்லது காட்சிகள் என்றே கருதலாமா?], அண்மைக் காலத்தில் 'ஜேம்ஸ் வெப்' மூலமாகப் படம் பிடிக்கப்படும்போதும் அங்கே அப்படியே மாறாமல் இருந்தது எப்படிச் சாத்தியமாயிற்று?

===========================================================================

மிக முக்கியக் குறிப்பு:

பள்ளிப் பருவத்தில் கொஞ்சம் அறிவியல் படித்ததோடு சரி. ஆர்வம் காரணமாகக் கண்ட கண்ட அறிவியல் கட்டுரைகளை இணையத்தில் வாசிப்பது பழக்கமாகிப்போனது. 

அவ்வகையில், குங்குமத்தில் இக்கட்டுரையை வாசித்தபோது இக்கேள்வி எழுந்தது. இதைப் பதிவுலக நண்பர்களுடன் பகிரவே இந்தப் பதிவு[போதிய அறிவியல் அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் இது குறித்து விரிவானதொரு பதிவு எழுதினால் அது பெரும் பயன் நல்குவதாக அமையும்].

வருகைக்கு நன்றி.