'உலக அளவில், ஓர் ஆண்டில் பாம்புக் கடியால் இறப்பவர்கள் 1,50,000; இந்தியா 50,000; தமிழ்நாடு 10,000. உயிர் பிழைத்தாலும் பலருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்க இயலவில்லை.'
ஆக, உலகிலேயே பாம்புக் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்குப் பல ஆயிரம்பேர் பாம்புக் கடிக்கு ஆளாகி 5,00,00க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்பதற்கும், அந்த எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கினர் தமிழ்நாட்டில் உள்ளனர் என்பதற்கும் பல ஆதாரங்கள் உள்ளன.
இது விசயத்தில் தமிழர்கள் முன்னிலை வகிப்பதற்கான காரணம் என்ன?
இங்கு முட்டாள்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பதே.
இந்த நச்சுப் பாம்புக்கு இங்கே தரப்படும் மரியாத கொஞ்சநஞ்சமல்ல.
இவருக்கு, 'நாகேஸ்வரர்' என்று இன்னொரு பெயர் உண்டு. சென்னை குன்றத்தூரில் குடிகொண்டு பக்தர்களிடம் குறை கேட்கிறார்.
'ஆதிசேஷர்' என்றால் உலகில் அறியாதார் எவருமிலர்.
கோடகநல்லூரில், 'காளத்தீசுவரர்' என்னும் திருநாமம் பெற்று, நாடிவரும் பக்தர்களின் துயர் களைகிறார்.
'நாகராஜர்' என்பது இவருக்கான 'செல்லப் பெயர்'.
இந்தப் பாம்புக்கு, 'பாம்புரேஸ்வரர்' என்றொரு பெயரும் உண்டு. 'திருப்பாம்புரம்' என்னும் ஊரில் தங்கியிருந்து தரிசனம் வழங்குகிறார்.
இப்படிப் பலான பெயர்களில் குறிப்பிட்டு வழிபட்டு நிறைவு பெறாத பக்திமான்கள், விண்ணில் உலாவும் கோள்களையும் பாம்புகள் ஆக்கிவிட்டார்கள்[ராகு கேது-சர்ப்பக் கிரகங்கள்].
இவர்களின் இந்த மூடத்தனங்களை, அழியாமல் கட்டிக் காத்ததில்... காப்பதில் சிவபெருமான் தன் தலையிலும் கழுத்திலும் இவற்றை மாலையாக்கிக் கையில் கங்கணம் ஆக்கிக்கொண்டது, விஷ்ணுபகவான் பஞ்சணை ஆக்கியது போன்ற கட்டுக்கதைகளுக்கு மட்டுமல்ல, ஆன்மிகத்துக்கென்று இடம் ஒதுக்கி, ஆபாசப் புராணக் கதைகளை வாரி வழங்கும் ஊடகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு.
எது எப்படியோ, அண்டவெளியில் கடவுள் எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று அறிவியலாளர்கள் நாளும் தேடிக்கொண்டிருக்கிற இந்த அறிவியல் யுகத்தில், நச்சுப் பாம்பை நாகதேவனாக்கி வழிபடும் முட்டாள்கள் உள்ளவரை, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தப் புண்ணிய பாரதமும் அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் பின்தங்கியே இருக்கும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை!
===========================================================================