பக்கங்கள்

புதன், 10 ஆகஸ்ட், 2022

கேரளா 'கடவுளின் தேசம்' என்று பெயர் பெற்றது எப்படி?!

னதைக் கொள்ளை கொள்ளும் அடர் மரங்கள் நிறைந்த மலை அடுக்குகள். இயற்கை அழகுகளின் சேமிப்புக் கிடங்குகளான கிடு கிடு  பள்ளத்தாக்குகள்,  எங்கெங்கு காணினும் பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் தேயிலை & காப்பித் தோட்டங்கள்,  காணும் இடமெல்லாம் குளு குளு நீரோடைகள், வெண்பட்டைப் பாரம்பரிய ஆடையாகக் கொண்ட அழகுப் பெண்கள்['சிந்து நதியின்மிசை நிலவினிலே, சேர நன்னாட்டு இளம் பெண்களுடனே...' -பாரதியார்] என்று மலையாள தேசத்தை ஒரு சொர்க்க பூமியாகக் கடவுள் படைத்தார் என்ற நம்பிக்கையில்தான் அது 'கடவுளின் தேசம்' என்று சிலாகிக்கப்படுவதாகப் பலரும் நம்பினார்கள், அடியேன் உட்பட.

ஆனால், இது தொடர்பாக 'Quora' தளத்தில் இடம்பெற்றதொரு 'பெயர்க் காரணம்' முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

                                        *   *   *   *   *

கேள்வி:

கேரளாவிற்குக் 'கடவுளின் சொந்த ஊர்' என்று பெயர் எப்படி வந்தது?[கேரளம் ஏன் God's own country எனப்படுகிறது?]

//இளந் தலைமுறைக்கு இது தெரிந்திருக்காது. மூத்தவர்களும்கூட மறந்திருக்கக் கூடும்.

ஆகஸ்ட் 15,1947இல் திருவாங்கூர் இந்தியாவில் இணைந்து இருக்கவில்லை. அது தனி நாடாக இருக்கும் என்று 1947 ஜூனில் அந்தச் சமஸ்தானத்தின் திவான் அறிவித்தார். அறிவிக்கச் செய்தவர், மகாராஜா சித்திரைத் திருநாள் பாலராம வர்மா.

திருவாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைக்கப் பேச்சு வார்த்தைகள் நடந்தபோது அரசர் பலராம வர்மா சொன்னார்: “இது என்னுடைய ராஜ்யம் இல்லை. அனந்த பத்மநாபனுடையது. நான் வெறும் நிர்வாகி. அனந்தன் சொன்னால் உங்களிடம் ஒப்படைத்து விடுகிறேன்.”

சொன்னதோடு, ஒரு முழ நீளமும், ஒரு அங்குல அகலமும் உள்ள ஒரு பழைய ஓலையைக் காட்டினார். அது.....

1750ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அப்போதைய மகராஜா அநிழோம் திருநாள் மார்த்தாண்ட வர்மா[பல போர்கள் நடத்தி வெற்றிகளையும் செல்வத்தையும் குவித்தவர்] ஆலயத்தில் உறைந்த அனந்த பத்மநாபனுக்கு எழுதிக் கொடுத்த ஓலை அது.

அதில்.....

'அரண்மனைச் சதிகளை முறியடித்து அரியணை ஏறியதுவரை நடந்த போர்களில் பல உயிர்கள் மாய்ந்துவிட நேர்ந்ததை எண்ணி வருந்தி, கன்னியாகுமரி முதல் பரவூர்வரை உள்ள என் அரசையும் அதன் செல்வத்தையும் உனக்கே ஒப்புவிக்கிறேன்' என்று எழுதியிருந்தது(அதனால்தான் கேரளம், 'கடவுளின் தேசம்'[God’s own country] ஆனது).

'திருப்படி தானம்' என்னும் அந்த ஓலையைத் தன் குடும்பத்தினர், அமைச்சர்கள், அதிகாரிகள், ஆலயத்தில் பூஜை செய்வோர், பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் இறைவனை வழிபட்டு ஓலையை ஒப்படைத்தாராம் அரசர்.

அத்துடன் சாமியின் சந்நிதியின் முன்னுள்ள ஒத்தக்கல் மண்டபத்தின் படிக்கட்டில் தன்னுடைய மகுடம், குடை, விசிறிகள், அரச இலச்சினை, தன் வாள் ஆகியவற்றையும் அனந்தபத்மநாப சாமியிடம் சமர்ப்பித்தாராம்.

தன் பெயரிலுள்ள 'அரசர்' என்பதற்குப் பதிலாக, 'பத்மநாபதாசன்' என்ற பட்டத்தையும் சூடிக்கொண்டாராம். தனக்குப் பின் வரும் அரசர்களும் பத்மநாபனின் அடிமைகளாகத் தொடர்வார்கள் என்று உறுதியளிக்கவும் செய்தாராம். இன்றும் அரசகுல வாரிசுகள் தினமும் காலையில் பத்மநாபசாமி கோவிலுக்குச் சென்று இறைவன் சந்நிதியில் தனியாக நின்று ஆணை பெற்று வருகிற ‘ஏகாந்த தரிசனம்’ என்ற சடங்கு நடக்கிறது.//


* * * * *

கதை போல இருந்தாலும், மேற்கண்டது உண்மை நிகழ்வு என்றே நம்பத் தோன்றுகிறது.

வாழ்க கடவுளின் தேசம்! வளர்க அதன் அழகும் செழுமையும்!!

[ஆதாரக் கட்டுரையின் தொடர் அமைப்பில் சிறு சிறு மாற்றங்கள் செய்து, சற்றே சுருக்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது].

===============================================================================

நன்றி: 'வாட்ஸ்அப்'[Krishnaswamy Ramachandran

ஆதாரம்: Quora