செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

பிரதமர் மோடிஜியின் சீரிய சிந்தனைக்கு.....

கீழ்க்காணவிருக்கும் அவல நிகழ்வு ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தின் சிகார் நகரக் கோயிலில் நிகழ்ந்துள்ளது.

'கியாரஸ்' என்னும் புனித தினத்தை ஒட்டி, சாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார்கள் பக்தர்கள்.

அதிகாலை 04.30 மணியளவில் நடை திறக்கப்பட்டது.

ஒட்டுமொத்தப் பக்தர் கூட்டமும் சாமியைத் தரிசித்து ஜென்ம சாபல்யம் பெறுவதற்காக முண்டியடித்துக்கொண்டு பாய்ந்தபோது. வயதானதொரு மூதாட்டி தரையில் தள்ளப்பட்டார். அவரின் பின்னால் நின்ற இரண்டு பெண்களும் விழுந்தார்கள். பக்தகோடிகளின் கால்களில் மிதிபட்டு மூன்று பேரும் உயிரிழந்தார்கள். பலருக்குக் காயம்.

இப்படிப் பக்தர்கள் பக்தர்களாலேயே மிதித்துக் கொல்லப்படுவது கோயில்களில் அடிக்கடி இடம்பெறும் நிகழ்வாக உள்ளது.

பக்தர்களிடையே ஏன் இந்த அவசரம்?

காத்திருந்த அத்தனை பேருக்கும் தரிசனம் தராமல் சாமி ஓடி ஒளிந்துகொள்ளுமா?

அந்தக் கோயிலில் இருக்கும் சாமி உலகில் வேறு எங்கும் இருக்கும்தானே. சாவகாசமாக அங்கு சென்று தரிசித்துக் கோரிக்கை வைக்கலாம். இது ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை?

சக பக்தர்களைத் தங்களின் கால்களால் மிதித்துக் கொல்லும் கொலை பாதகச் செயலைச் செய்துவிட்டுச் சாமி தரிசனம் செய்து புண்ணியம் தேட நினைக்கிறார்களே, கிடைப்பது புண்ணியமா, பாவமா?

இவர்களெல்லாம் பக்தர்களா, படு பாதகர்களா?

கிஞ்சித்தும் சிந்திக்கும் அறிவே இல்லையா?

இவ்வாறான கேள்விகளைப் பக்தர்களிடம் இந்தச் சிறியேனைப் போன்ற சாமானியர்கள் கேட்பதால் எந்தவொரு பயனும் விளையப்போவதில்லை என்பதால் இந்தியப் பிரதமர் அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகிறோம்.

பிரதமர் அவர்களே,

சிகார் நகரக் கோயிலில், நெரிசலில் மிதிபட்டு இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்திருக்கிறீர்கள். அது தங்களின் மனிதாபிமானத்தைக் காட்டுகிறது.

இது தேவைதான் எனினும், இம்மாதிரி அனுதாபம் தெரிவித்தல் இனியும் இத்தகைய அவலங்கள் நிகழாமல் தடுக்குமா?

நிச்சயமாக இல்லை.

இது தங்களுக்கும் தெரியும்.

அனுதாபம் தெரிவிப்பதோடு, பிரதமர் என்ற வகையில், சாமி தரிசனத்துக்காக நாள் கணக்கில் காத்திருந்து வாழ்நாளை வீணடிக்கும் பக்தர்களிடம் மேற்கண்ட கேள்விகளை நீங்கள் கேட்பீர்களேயானால்[ஊடகங்கள் அதைப் பரப்புரை செய்யும்] பலன் கிட்டும் என்பது நிச்சயம்.

இப்படிக் கேள்விகள் கேட்டுப் பக்தர்களைத் திருத்துவதோடு, கோயில் நிகழ்வுகளையும் மாற்றி அமைப்பதும் மிக அவசியம் ஆகும்.

விடியற்காலையில்தான் நடை திறக்கிறார்கள். அதுவரை அதைச் சாத்தி வைப்பது ஏன்?

நாளெல்லாம் பக்தர்கள் தங்களின் குறை சொல்லிப் புலம்புவதைக் கேட்டுக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்துபோன சாமிக்கு ஓய்வு அளிப்பதற்காகவா? 

நிச்சயமாக இல்லை.

அனைத்தையும் படைத்த கடவுள்தான் அனைத்துக் கோயில்களிலும் வேறு வேறு உருவில் குடிகொண்டிருக்கிறார் என்கிறார்கள். அவரைப் பொருத்தவரை 'இது நல்ல நாள்', 'இது கெட்ட நாள்', 'இது நல்ல நேரம்', 'இது கெட்ட நேரம்' என்ற வேறுபாடுகள் கிடையாது. 

ஆகவே, நடை சாத்தும் வழக்கத்தைக் கைவிட்டு, எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் சந்நிதியைத் திறந்து வைத்தல் வேண்டும். அதன் மூலம், இடர்ப்பாடு இல்லாமல் பக்தர்களால் சாமியைத் தரிசிக்க முடியும்.

இது நடைமுறை ஆக்கப்பட்டு எல்லா நேரமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது சாத்தியப்படுமானால்.....

சாமி தரிசனத்துக்காக வரிசையில் கால்கடுக்க நின்று நின்று நின்று நேரத்தை வீணடிப்பதும், பக்தர்களைப் பக்தர்களே உயிர்ப்பலி கொடுக்கும் கொடூரமும் தவிர்க்கப்படும் என்பதைத் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதில் பக்தன் என்றில்லாமல், ஒரு மனிதாபிமானி என்ற வகையில் என் கடமையைச் செய்தவன் ஆகிறேன்.

நன்றி பிரதமர் அவர்களே!


=========================================================================