பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 3 ஆகஸ்ட், 2022

குற்றமற்ற மனிதர்களும் கொட்டமடிக்கும் கடவுளும்!!!

காற்று, நீர், நெருப்பு, மண், அண்டவெளியிலுள்ள கோள்கள், நட்சத்திரங்கள், மண்ணுலகிலுள்ள உயிர்கள் என்று அனைத்துமே அணுக்களால் ஆனவை என்கிறது அறிவியல்.

அவ்வணுக்கள் ஒரே மாதிரியானவை அல்ல; கணக்கிலடங்காத வகையின ஆகும்.

இவை மிக மிக மிகப் பல வகையினவாக இருப்பதால்தான், இவற்றால் உருவாக்கப்படுகிற பொருள்களும் உயிர்களும்[மனிதர்கள் உட்பட] விதம் விதமானவையாக உள்ளன. 

பொருள்களின் ஆக்கத்திற்கு மட்டுமல்லாது, அவற்றின் எண்ணிக்கைக்கும் கோடானுகோடிக் கணக்கிலான அணுக்களின் சேர்க்கை காரணமாக உள்ளது.

பொருள்களின் வடிவம் மட்டுமல்லாது, அவற்றின் தன்மை, நிறம் முதலானவற்றிற்கான மூலக்கூறுகளும் அணுக்களில் உள்ளடங்கியுள்ளன. அவை இணைந்து பொருளாகும்போது அப்பொருள்களின் வாயிலாக அவை வெளிப்படுகின்றன.

பொருள்கள் என்றில்லை, மனிதர்களிடம் உள்ள பாசம், பற்று, கோபம், தாபம், அன்பு, சூதுவாது, பொறாமை என்று அத்தனைக் குணங்களும் அவர்கள் அணுக்களிடமிருந்து பெற்றவைதான். அதாவது, மேற்கண்ட குணங்கள் அவ்வளவும் வகை வகையான அணுக்களில் உள்ளடங்கி இருப்பவையே.

எனவே, மேற்கண்ட குணங்கள் காரணமாக, மனிதர்கள் செய்யும் நற்செயல்கள், தவறுகள், குற்றங்கள் என்று அத்தனைக்கும் மூல காரணமானவை அணுக்களே என்பது உறுதியாகிறது.

இந்நிலையில், நல்லனவும் கெட்டனவுமாகிய குணங்களை அணுக்கள் பெற்றது எப்படி என்னும் கேள்வி தவிர்க்க இயலாதது ஆகும்.

அறிவியல் ரீதியாகச் சிந்தித்தால், இன்றளவும் இக்கேள்விக்கு விடை கண்டறியப்படவில்லை என்பதால் "தெரியவில்லை" என்பதே அறிஞர்களின் பதிலாக உள்ளது.

ஆன்மிகவாதிகளோ, அணுக்கள் தாமாகத் தோன்றுவதோ இயங்குவதோ சாத்தியமில்லை. அவற்றைத் தோற்றுவித்து இயக்குபவர் கடவுளே என்கிறார்கள்.

இந்நிலையில், மனிதர்களை உருவாக்கி இயக்கும் அணுக்களைச் சாட நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக, அவர்களை மிகக் குறைந்த அளவில் நன்மையும், மிக அதிக அளவில் தீங்குகளையும் செய்யத் தூண்டி, வேடிக்கை பார்த்துக் குதூகளிக்கிற கடவுளை மிகக் கடுமையாகச் சாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ஒழிக கடவுள்! முற்றிலுமாய் அழிந்திடுக கடவுள் நம்பிக்கையால் விளைந்த மூடநம்பிக்கைகள்!!