பக்கங்கள்

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

கருணை மிகு கடவுள்களும் முதுகு சொறிதலும்!!!

னிதர்கள் பல நூறு ஆண்டுகளாகக் கடவுளைப் பற்றிச் சிந்தித்தார்கள்; விவாதித்தார்கள்.

கடவுள் 'உண்டு' என்றார்கள்; இல்லை என்றவர்களை அடக்கி ஒடுக்கினார்கள்; சிதைத்துச் சித்ரவதை செய்து கொன்றார்கள்.

'ஒருவர் போதும்' என்று மனநிறைவு கொள்ளாமல் பல நூறு கடவுள்களைக் கற்பித்தார்கள்; பல நூறு மதங்களை உருவாக்கி அவர்களின் புகழ் பரப்பினார்கள்.

"இவர் என் கடவுள். அவர் உன் கடவுள். இவர்களில் யார் கடவுள் வலியவர்?" என்று கேட்டு வாதம் புரிந்தார்கள்; அடித்துக்கொண்டார்கள்; வதைத்துக்கொண்டார்கள்; கலவரங்கள் விளைவித்தும் போர்கள் நடத்தியும் பல்லாயிரக் கணக்கில் செத்தொழிந்தார்கள்.

இன்றும் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடவுள்கள் இருப்பது உண்மையாயின்.....

அவர்கள் கருணை வடிவானவர்கள் என்பது மெய்தான் எனின்.....

"கடவுளராகிய நாங்கள் என்றென்றும் இருந்துகொண்டிருப்பவர்கள். எங்களால் படைக்கப்பட்ட அற்ப ஆயுள் கொண்ட மானுடர்கள் நீங்கள். இருக்கிற கொஞ்சம் அறிவை உங்களின் இன்ப வாழ்வுக்குப் பயன்படுத்தாமல் விவரிப்புக்கு அப்பாற்பட்ட பேராற்றலும், பேரறிவும் வாய்ந்த எங்களைப் பற்றிப் பேசிப் பேசி பேசி ஏன் வீணடிக்கிறீர்கள்? விண்ணைத் தொடும் பிரமாண்டமானதொரு மலையை ஒரு சிற்றெறும்பு தூக்கிச் சுமப்பது போன்றது உங்களின் செயல். இனியேனும், உயிர் உள்ளவரை உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளாமல் வாழப் பழகுங்கள்" என்னுமொரு அறிவுரையை ஏதேனும் ஒரு வழியில் மானுடர்களுக்கு அறியச் செய்திருத்தல் வேண்டும்.

கடவுள்கள் எனப்படுபவர்கள் ஏன் இதைச் செய்யவில்லை?

ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து சொறிந்து சொறிந்து சொல்லொணா இன்பம் துய்த்துக்கொண்டிருக்கிறார்களா?!


===========================================================================

மிக மிக முக்கியக் குறிப்பு:

'சொறிதல்' என்னும் சொல்லுக்குப் பதிலாக வேறொரு சொல் இடம்பெற்ற தொடரைப் பதிவு செய்திருந்தேன். பண்பாடு கருதி அது நீக்கப்பட்டது.