நம் முன்னே நான்கு பொருள்கள் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். நான்கும் தலா ஒரு கிலோ எடை உடையவை; அதாவது, நான்கின் எடையும் சம அளவிலானது.
இந்த நான்கினையும் ஒன்றுசேர்த்து நிறுத்தால் அவற்றின் மொத்த எடை 4 கிலோ. அதாவது.....
1+1+1+1=4.
இது மிக எளிய ஒரு கணக்கு. இம்மாதிரியான கணக்கில் தவறு நேர வாய்ப்பே இல்லை.
ஆனால், அணுக்கள் விசயத்தில் இந்தக் கணக்கு ஏற்புடையதாக இல்லை.
அங்கே 1+1+1+1 என்பதன் கூட்டுத் தொகை 4 என்று இல்லாமல் 1+1+1+1=3.97ஆகக்கூட இருக்கலாமாம்.
அது ஏன்?
இங்கு நான்கு அணுக்களின் எடை '4' ஆக இல்லாமல் 3.97ஆக[வேறு எதுவாகவும் இருக்கலாம்] இருக்கக் காரணம், 'தனித்தனியே பிரிந்திருந்தபோது இருந்த எடை, அணுக்கள் ஒன்றாகச் சேரும்போது குறைந்துபோவதுதான். குறைந்துபோன அவற்றின் எடை[இங்கு 0.03] ஆற்றலாக[சக்தி] மாறுகிறது' என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
சூரியன், நட்சத்திரங்கள் என்று பிரபஞ்ச வெளியிலுள்ள அனைத்துமே அணுக்களின் சேர்க்கையால் உருவானவைதான். அவற்றின் சேர்க்கையின்போது குறைகிற எடையே அவற்றிற்கான சக்தியாகவும் மாறியிருக்கிறது[அவை ஒளிரவும் செய்கின்றன; எரிவதில்லை] என்பது அறியத்தக்கது[ஆதார நூல்: 'அணு அதிசயம்... அற்புதம்... அபாயம்'; ஆசிரியர்: என்.ராமதுரை; 'கிழக்கு' பதிப்பகம், சென்னை].
எடை குறைதல் காரணமாக, அணுக்களின் சேர்க்கையால் சக்தி பிறப்பது சாத்தியம் என்றால், அதே அணுக்களின் சேர்க்கையால், உயிர்கள் ஒன்று முதலான ஐந்தறிவைப் பெற்றதும், மனிதர்கள் கூடுதலாக ஆறாவது அறிவைப் பெற்றதும் சாத்தியமாயின என்றும் சொல்லலாம். அறிவியல் ரீதியாக அது உறுதிப்படுத்தப்படும் நாளும் வரும்.
===========================================================================