சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தாராம்.
அப்போது.....
"விநாயகர் சதுர்த்தி மட்டுமின்றி, பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற அனைத்துத் திருவிழாக்களுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டியது அனைவரது கடமையாக இருக்கிறது.....
நடைமுறை இதுவாக இருக்கையில், முதல்வராக இருப்பவர் அனைத்துப் பண்டிகைகளுக்கும்[பெரும்பான்மையோரால் கொண்டாடப்படுவதால்] வாழ்த்துக் கூறுவதுதான் முறையாக இருக்கும். எனவே, முதல்வர் எந்தப் பாகுபாடும் இல்லாமல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்" என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லியிருக்கலாம். அவ்வாறில்லாமல், "பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படுகின்ற அனைத்துத் திருவிழாக்களுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டியது அனைவரது கடமையாக இருக்கிறது" என்றும் சொல்லியிருக்கிறார்.
இவர் சொல்வது சரியென்றால், இஸ்லாமியர், கிறித்தவர் போன்ற சிறுபான்மை மதத்தவர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லத் தேவையில்லை என்றாகிறதே?
முருகன் அவர்கள் கொஞ்சம் முன்யோசனையுடன் பேசியிருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
மேலும், "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மிகச் சீரழிந்துள்ளது. பெண்கள் நகை அணிந்துகொண்டு வெளியே செல்ல முடியவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.
பண்டிகை நாளும் அதுவுமாக[பிள்ளையாரின் பிறந்த நாள்; அதாவது, பார்வதி தேவி தன் மேனி அழுக்கை உருட்டி எடுத்து இந்தச் செல்லப் பிள்ளையாரை உருவாக்கிய நாள்] மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இடித்துரை வழங்கியிருக்கிறார் நடுவண் அமைச்சர் அவர்கள்[இந்து தமிழ், 31.08.2022].
* * * * *
முருகன் அவர்களே,
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துச் சொல்லாவிட்டாலும், சட்டம் ஒழுங்கு சரியில்லாவிட்டாலும் நாட்டிலுள்ள அத்தனை மதம் சார்ந்த சாமிகளுக்கான பண்டிகைகளுக்கும் மிச்சம் மீதி இல்லாமல் அத்தனை தலைவர்களும் வாழ்த்துச் சொல்வது வழக்கமாக உள்ளது.
எத்தனை "வாழ்க! வாழ்க! வாழ்க!" சொல்லியும், வாழ்த்துப்பெற்ற பக்திமான்களால் வழிபடப்படுகிற எந்தவொரு கடவுளும் பெண்கள் நகை அணிந்து வெளியே செல்லப் பாதுகாப்புத் தருவதில்லையே, ஏன் என்று கொஞ்சம் சிந்தித்தீர்களா?!
===========================================================================