எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

29.09.2022 உலக இதய தினம்! 'தூய மன தினம்' எப்போது?!

29.09.2022ஆம் நாள் 'உலக இதய தினம்' என்பதை இன்று[30.09.2022] சற்று முன்னர் 'BBC' செய்தி பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.

இதய[Heart] நலம் பேணுவது குறித்து 'பிபிசி' பயனுள்ளதொரு கட்டுரையை வெளியிட்டுள்ளது[https://www.bbc.com/tamil/science-63066655] இதய நோயாளிகள் மட்டுமல்லாமல் இதய நோய் அணுகாதிருக்க விரும்பும் அனைவரும் இதைப் படிப்பது மிகவும் பயன்பெறுவதாக அமையும்.

இணையத்தில் இதய நலம் பற்றிய வேறு சில கட்டுரைகளையும் தேடிக் கண்டறிந்து வாசித்ததில் இதயம் முழுக்க மகிழ்ச்சி பரவியதை உணர முடிந்தது.

இப்படி, உடலுறுப்புகளுக்கு மட்டுமல்லாமல், காதலர் தினம், அன்னையர் தினம், ஊனமுற்ற குழந்தைகள் தினம், முதியோர் தினம் என்று எது எதற்கெல்லாமோ ஒரு நாளை நிர்ணயித்து அவற்றைப் போற்றிக் கொண்டாடுகிறது உலகம்.

பாராட்டுக்குரிய செயல்தான்.

விதம் விதமான நோய்களாலும், வறுமையாலும், இயற்கைச் சீற்றங்களாலும் மனித குலம் பெரும் துன்பங்களுக்கு உள்ளாகிற அதே வேளையில், பொறாமை, சூதுவாது, வஞ்சகம், பழிவாங்கும் வன்மம் என்று மிகப் பல தீய எண்ணங்களாலும் வதைபட்டுக்கொண்டிருக்கிறது.

அத்தனை பேரும் உத்தமர்களாக வாழ்வது என்பது அத்தனை எளிதல்ல. எனினும்.....

ஆண்டுக்கு ஒரு முறையேனும் மனதிற்குள் கெட்ட எண்ணங்களை அண்டவிடாமல் வாழ்ந்து காட்டுவது, நாம் அத்தனை பேரும் இயன்றவரை நல்லவர்களாக வாழ்வதற்கு வழிகோலுவதாக அமையக்கூடும் என்பதால், 'உலகத் தூய மன தினம்' கொண்டாடுவது மிகவும் தேவையான ஒன்று என்று சொல்லத் தோன்றுகிறது.

தேவைதானா?

சிந்தியுங்களேன்!

===========================================================================