வெள்ளி, 16 செப்டம்பர், 2022

'இந்தி'யர்களிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்ற 'இது' மட்டுமே வழி!!!

இந்தியாவின் மக்களவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்[MP] எண்ணிக்கை 543.

இவற்றில் பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெறும்[தேர்தல் மூலம்] கட்சிதான் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளும் அதிகாரத்தைப் பெற்றிட முடியும்

'இந்தி'யர்கள் அதிகம் வாழும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார், அரியானா ஆகிய மாநிலங்களில் பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களைப்[MP] பெற்றுவிடுவதோடு இந்தி கணிசமாகப் பேசப்படும் மாநிலங்களில் ஓரளவு உறுப்பினர்களையும் பெற்றாலே இந்திக்காரர்களால் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும்.

இந்நிலை நீடிக்கும்வரை இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் ஆதிக்கமும் நீடிக்கும். அவர்களின் ஆதிக்கம் நீடிக்கும்வரை இந்தியை ஆளும் மொழியாக[ஒரே நாடு ஒரே மொழி] ஆக்கும் அவர்களின் முயற்சி தொடரும். வெற்றியும் பெறுவார்கள் என்பது உறுதி[ரெயில்வே, தபால்துறை, அரசுடைமை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் போன்றவற்றில் இந்தியைத் திணித்துப் பாதி வெற்றியை ஈட்டிவிட்டார்கள்].

இவ்வகையிலான இந்திக்காரர்களின் ஆதிக்கப் போக்கைத் தடுத்து நிறுத்திட வழியே இல்லையா?

உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது. எப்படி? 

ஆட்சியைக் கைப்பற்ற 543 உறுப்பினர்களில் பாதிக்கும் மேலானவர்களின் ஆதரவு[272] தேவை என்பது இப்போதைய நிலை.

ஒரு கட்சி இந்த 272ஐப் பெறுவதில் சில மாற்றங்கள் செய்யப்படுவதன் மூலம் வழி காணலாம்.

இந்தக் குறைந்தபட்ச 272 உறுப்பினர்கள் குறிப்பிட்ட சில மாநிலங்களிலிருந்து[மேற்குறிப்பிட்ட ராஜஸ்தான் முதலானவை] தேர்வானாவர்கள் என்றில்லாமல், அனைத்து மாநிலங்களிலிருந்தும் உறுப்பினர்களைப் பெற்றிருப்பது கட்டாயம் ஆக்கப்படுதல் வேண்டும். [குழு அமைத்து ஆராய்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்கலாம். ஒரு மாநிலத்தின் மொத்த உறுப்பினர்கள்(MP) 20 என்றால், மத்தியில் ஆளவிருக்கும் கட்சிக்குக் குறைந்தபட்சம் 2 பேர் தேவை என்பது போல]. 

இப்படிக் கட்டாயப்படுத்திவிட்டால், 'இந்தி'யர்கள், மேலே குறிப்பிட்டவாறு, தங்களின் தாய்மொழியான இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து மட்டுமே 272 உறுப்பினர்களைப் பெற்று நடுவணரசைக் கைப்பற்றிக் கொட்டமடிப்பது தடுக்கப்படும்.

அனைத்து மாநிலங்களிலும் ஓரளவுக்கேனும் அந்தந்த மாநில மக்களின்[குறிப்பாக, இந்தி அல்லாத மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்] ஆதரவையும் பெற்றிருந்தால் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியும்.

எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த முறைப்படி பெரும்பான்மை பெற இயலவில்லை என்றால்.....

கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றாகும்[இது தனி ஆய்வுக்குரியது. எவ்வகையிலேனும், 'இந்தி'யர்களின் சர்வாதிகார ஆட்சி தொடராமல் தடுக்கப்படுதல் வேண்டும் என்பதே நம் விருப்பம்].

இதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுதல் உடனடித் தேவை. இது எளிதான செயலல்ல. எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து மிகக் கடுமையாகப் போராடினால் மட்டுமே சாத்தியமாகும்.

மேற்கண்ட வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படவில்லை என்றால்.....

'ஒரே நாடு; ஒரே கலாச்சாரம்; ஒரே மொழி' என்ற இந்தி வெறியர்களின் நீண்ட நாள் கனவு, அமித்ஷாவின் பேராதரவுடன் வெகு விரைவில் நனவாகும் என்பதை இந்திய நாட்டின் ஒற்றுமையில் அக்கறை கொண்டவர்கள் கவனத்தில் கொள்வார்களாக!

*****வன்முறைக்குக் கிஞ்சித்தும் வழிவகுக்காத அகிம்சை வழி இது என்பது கருத்தில் கொள்ளத்தக்கது!

===========================================================================