வெள்ளி, 23 செப்டம்பர், 2022

'ஹிஜாப்' அணிதலும் பின்விளைவுகளும்!!!

இன்றையைக் காலைச் செய்தியின்படி, 'ஈரான் 'ஹிஜாப்' கலவரம் காரணமாக 31உயிர்கள் பலியிடப்பட்டுள்ளன'.***


ஈரான் பெண்கள், ஹிஜாப் கட்டாயப்படுத்தப்படுவதை எதிர்த்து உயிரிழப்பையும் பொருட்படுத்தாமல் ஏன் போராடுகிறார்கள்? இது தொடர்பாக, 'மாஷா அமினி'யைக் காவல்துறை அடித்துக் கொன்றது மட்டும்தான் காரணமா? வேறு காரணங்களும் உள்ளனவா?

எந்தவொரு ஊடகமும் ஆராய்ந்து கண்டறிந்த காரணங்களைப் பட்டியலிட்டு உலகோர்க்கு அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

அவை, இஸ்லாமியரின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சியிருக்கலாம்.

100% இஸ்லாம் பெண்களின் நலனை மட்டும் கருத்தில்கொண்டு, ஹிஜாப் அணிதலின் பின்விளைவுகள் குறித்த என் எண்ணங்கள் சிலவற்றைப் பதிவு செய்கிறேன்.

ஒன்று: பல்வேறு இனம், மதம் சார்ந்த மக்கள் பெரும் திரளாகக் கூட்டியிருக்கும் நேரங்களில், சமூக விரோதிகளாலோ, மத வெறியர்களாலோ கலவரங்கள் மூளுமேயானால், இஸ்லாமியரின் பரம வைரிகளால், ஹிஜாப் அணிந்த இஸ்லாம் பெண்கள் வெகு எளிதாக அடையாளம் காணப்பட்டு, அவர்கள் கடத்தப்படுவதும், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் நிகழும்[மீசையை மழித்துத் தாடியுடன் இருக்கும் இஸ்லாம் ஆடவர் எளிதாக அடையாளம் கண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படலாம் என்பது போல]'.

இரண்டு: கலவரம் மூளுகையில், திருநீறு வைத்த இந்து ஆடவர் அந்தச் சின்னத்தையும், பெண்கள் தங்களின் நெற்றிக் குங்குமத்தையும் அழித்துவிடுவது[முக்கியச் சின்னங்கள்] எளிது. ஹிஜாப் அடையாளத்தையும், குறிப்பாகக் கறுப்பு அங்கியையும்[பர்தா] அகற்றுவது அத்தனை எளிதல்ல; எளிதாயினும், அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதற்காகப் பிறகு தண்டிக்கப்படலாம்.

[இதன் மூலம் பாரம்பரியமாகக் கடைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும்படி நாம் சொல்லவில்லை. கால வெள்ளத்தில் ஒரு சமயம் அத்தியாவசியம் என்று கருதப்பட்டது பின்னொரு காலக்கட்டத்தில் அதுவே அவசியமற்றது என்று தூக்கி எறியப்பட்டதுண்டு].

மூன்று: ஒரு பெண் எத்தனை அழகானவளாக இருந்தாலும், மார்பகம், தொடை போன்ற அதீதக் கவர்ச்சியுள்ள உறுப்புகளைத் தவிர பிற உறுப்புகள் மறைக்கப்படாதபோது, அவற்றால் ஆடவரின் காம உணர்வு எழுச்சி பெறுவதற்கான வாய்ப்பு 99% இல்லை என்றே சொல்லலாம்.  எத்தனைதான் மூடி மறைத்தாலும் பெண்ணொருத்தியைப் பார்த்தவுடனே காமக் கொந்தளிப்புக்கு உள்ளாகும் பலவீனர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களைப் பொருத்தவரை ஹிஜாப் அணிந்த பெண்ணும் அணியாத பெண்ணும் ஒன்றுதான்.

நான்கு: பொதுவிடங்களில், இவர்களை மற்ற மதத்துப் பெண்கள் பார்க்கும்போது,  'நம் மதம் இது. அவர்கள் இஸ்லாமியர்' என்று உணர்வதால், நாம் அனைவரும் ஓரினம்[பெண்ணினம்]என்றெண்ணி ஒட்டி உறவாடும் மனிதப் பண்புக்கு ஊறு நேர்கிறது.

ஐந்து: கோடையில், வீட்டிலிருந்து வெளியேறி நாள் முழுக்கப் பணி நிமித்தம் அலைய நேர்வதால்[பணிக்குச் செல்லும் சிறுபான்மைப் பெண்கள்]  உடல் நலம் பாதிக்கிறது.

ஆறு: இந்நாள்வரை, இஸ்லாம் பெண்கள் தாம் விரும்பியவாறு தொழில்நுட்ப, அறிவியல் கல்வியைப் பெறாமல்போனதற்கும், வேலை வாய்ப்புகளைப் பெறுவதில் மிக மிக மிகப் பின்தங்கியதற்கு, ஹிஜாப்[குறிப்பாகக் 'பர்தா'.. முழு உடலையும் மறைக்கும் அங்கி] முக்கியக் காரணமாக உள்ளது.

ஏழு: உலக அளவில் பெண்ணினம் ஆணுக்கு நிகரான உரிமைகளைப் பெற்று, முன்னேறிக்கொண்டிருக்க, இஸ்லாம் பெண்கள மட்டும் பெரும்பாலும் வீட்டோடு முடங்கிக் கிடப்பதற்கு ஹிஜாப் போன்ற கட்டுப்பாடுகளே காரணம்.

ஆக, ஆடைகளால் போர்த்து ஒரு பெண்ணைப் பாதுகாப்பதைக் காட்டிலும், சிறுமியாய் இருக்கும்போதிருந்தே, உலக நடப்பை முழுமையாக அறியச் செய்வதும், தற்காப்புக் கலைகளைக் கற்றுத் தருவதும் அவள் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வதற்கான ஆகச் சிறந்த வழிகள் ஆகும்!

மிக மிக மிக முக்கியக் குறிப்பு!

ஹிஜாப் அல்லா[ஹ்] வின் உத்தரவு என்று சொல்லப்படும்வரை மேலே இடம்பெற்றுள்ள கருத்துகளை அறிவதால் எந்தவொரு பயனும் இல்லை என்பதை அறிந்திடுக.

===========================================================================

*** Updated: Friday, September 23, 2022, 8:29 [IST] தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து நாடுமுழுவதும் ஹிஜாபை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சுமார் 50 நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. 31 பேர் பலி. இச்சூழலில் ஹிஜாப் அணிவது மற்றும் இஸ்லாமிய மத நெறிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதைக் கண்காணிக்கும் 'கலாச்சார காவல்துறை' மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.https://tamil.oneindia.com/news/international/the-us-has-announced-economic-sanctions-as-protests-against-the-hijab-continue-in-iran-477097.html