சனி, 24 செப்டம்பர், 2022

உள்ளம் கவர் 'கள்வ[ன்]ர்' ஜக்கி வாசுதேவ்!!!

ஜக்கி வாசுதேவ் பற்றிப் பதிவு எழுதி மாதங்கள் கழிந்துவிட்டன. அவரை நினைவுகூரும் வகையில் ஒரு காணொலியும், ஒரு கட்டுரையும்..... உங்களின் ஆய்வுக்கும்தான்!


Quora வின் கேள்வியும்[ஜக்கி நல்லவரா, கெட்டவரா?]  Ramaiya P பதிலும்:
 

'ஓஷோவைப் பற்றி ஆழமாகப் படித்த அத்தனை பேருக்கும் தெரியும் சத்குரு அவரைத்தான் காப்பியடித்துப் பேசுகிறார் என்பது. காரணம், ஓசோ சில இடங்களில் தவறாக இரண்டு சம்பந்தமில்லாத கதைகளை இணைத்து பேசியிருப்பார். அதேபோன்ற கதைகளை இவர் அப்படியே காப்பி அடித்துப் பேசி உள்ளார். கேட்டால், தான் இதுநாள்வரை ஓஷோவுடைய எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை என்று பொய் உரைப்பார்.

CAB பற்றிக் கேட்டபொழுது, தான் அதைப்பற்றிச் சரியாகப் படிக்கவில்லை என்று சொல்லி,  அரை மணி நேரம் போல அரசாங்கத்திற்கு ஒத்து ஊதி உள்ளார். சரியாகப் படிக்காத விஷயத்தில் ஒரு அரசாங்கத்தை ஆதரித்துப் பேச வேண்டிய அவசியம் என்ன….? அப்படி அவரை அவசரப் படுத்தியது யார்? மேலும், அதில் வெளிநாடுகளில் இந்துக்களைத் ரொம்பவே துன்புறுத்துகிறார்கள் என்று பச்சாதாபம் கொள்ளும் இவர், தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மக்களுக்குச் சாதகமாக அரசாங்கத்தை எதிர்த்துப் பேசவில்லை. மாறாக, நிறுவனங்களை மூடினால் பிரச்சினை வரும் என்று பேசியுள்ளார். வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் தேடித் தெரிந்துகொள்கின்ற இவர் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தப் பாதிப்பும் காதில் விழாமல்போவது ஆச்சரியம்தானே?

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் தமிழ் மக்களை ஆதரிக்கத் தெரிந்த இவருக்கு அதைத் தேவையில்லாத வகையில் நடைமுறைப்படுத்திய மத்திய அரசை எதிர்த்துப் பேசத் தைரியம் இல்லை.

குழந்தைகளுக்கு வழங்கும் கல்வியைப் பற்றி வானளாவப் பேசுபவர் தேசியக் கல்வித் திட்டத்தைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. இதில் மட்டுமல்ல எதிலுமே பிஜேபிக்கு எதிராக எதையுமே செய்யமாட்டார்.

அரசாங்கத்தைப் பாராட்டுவதில் துடிப்புடன் செயல்படும் இவரது ட்விட்டர் அக்கவுண்ட், மத்திய அரசுக்கு எதிரான மக்களின் போராட்டங்களின்போது மட்டும் முடங்கிப் போய்விடுகிறது. இவர் ஒரு காரியவாதி என்பதில் என்ன சந்தேகம்?

பத்திரிக்கை நிருபர் ஒரு நேர்காணலில் இவரை ஜாக்கி என்றதும், கிறிஸ்தவ மதப் பாதிரியாரைப் போப் என்றும் கூப்பிடும் நீங்கள் ஏன் சத்குரு என்று என்னைக் கூப்பிடுகிறீர்கள் என்கின்றார். ஆக, இவர் இந்து மதத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்டவர்தான் தன்னை எதனுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்கிறார். எவ்வளவு பெரிய அப்பட்டமான பொய் இது? இவரை எப்படி யோகி என்றும் ஞானி என்றும் கூற இயலும்?

அறிவியல் ரீதியாக எது பேசினாலும் அது ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே எங்களது யோகிகள் கண்டுபிடித்து விட்டனர் என்பது போன்று பேச ஆரம்பிப்பார். நீருக்கு ஞாபக சக்தியும் உண்டு என்று இல்லாத கதையெல்லாம் சொன்னவர்தானே இவர்?!.

================================================================

https://ta.quora.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE