புதன், 7 செப்டம்பர், 2022

எது விதி? எளிதில் புரியவைக்கும் ஒரு நிகழ்வு!

'கார்கில்'.....

ஒட்டுமொத்த உடம்பையும் ஊடுருவித் தாக்கும்  குளிர் பரவிய பகுதி இது.

பாகிஸ்தான் வீரர்களை எதிர்த்து வீரதீரத்துடன் போரிட்டுக்கொண்டிருந்தார்கள் நம் இந்தியப் படை வீரர்கள்.

'யோகிந்தர் சிங் யாதவ்' அந்த வீரர்களில் ஒருவர்.

போர் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்தது.


ஒரு கட்டத்தில், நமக்கு நல்வாய்ப்பு இல்லாத நேரமோ என்னவோ எதிரி வீரர்களின் சரமாரியாகச் சீறிவந்த குண்டுகளால் தாக்கப்பட்டு, யோகிந்தர் சிங் யாதவுடன் இணைந்து போராடிய அத்தனை வீரர்களும் வீர மரணத்தைத் தழுவினார்கள்.

ஏற்கனவே காயம்பட்டிருந்த யோகிந்தர் சிங் யாதவின் மார்பை நோக்கியும் ஒரு குண்டு பாய்ந்து வந்தது. தன் வாழ்க்கையும் முடிந்துவிட்டதாக நினைத்துப் பின்னோக்கிச் சரிந்தார் யோகிந்தர். அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

சீறிவந்த குண்டு யோகிந்தரின் மார்பில் பட்டுத் தெறித்து வந்த திசை நோக்கிப் பறந்தது.

யோகிந்தர் வியப்பில் மூழ்கினார்; தன் மார்பைத் தொட்டார். அவரின் சட்டைப் பையிலிருந்த ஏதோ ஒன்று விரல்களில் தட்டுப்பட்டது.

பையில் கை நுழைத்து அந்தப் பொருளை எடுத்துப் பார்த்தார்.

ஐந்து ரூபாய் நாணயம்!

அந்தச் சாதாரண ஐந்து ரூபாய் நாணயம்தான் தன்னைக் காப்பாற்றியது என்பதை அறிந்து உற்சாகம் பெற்றதொடு, தன்னிடமிருந்த கையெறி குண்டு ஒன்றையும் எதிரிக் குழு மீது வீசினார் யோகிந்தர். குழுவிலிருந்த அத்தனை பேரும் எமலோகம் சென்றார்கள்['வியக்கவைக்கும் உண்மை நிகழ்வுகள்' - பொன். தாமோதரன்; மணிமேகலைப் பிரசுரம்].

                               *   *   *   *   *

இந்த நிகழ்வில் கவனிக்கத்தக்கது.....

சட்டைப் பையில் ஒரு நாணயத்தைப் போட்டு வைத்தால் அது, எதிரியின் சீறிவரும் குண்டைச் சிதறடிக்கும் என்று சிந்தித்து, 'சிங்' அதைச் செய்யவில்லை.

திட்டமிட்டுச் செய்திருந்தாலும், பாய்ந்துவரும் குண்டு அந்தச் சின்னஞ்சிறிய நாணயத்தின் மீது பட்டுத் தெறிக்கும் என்று நம்புவதற்கும் வாய்ப்பே இல்லை.

அந்த நாணயத்தை எபோது பையில் போட்டார் என்பது அவருக்கே தெரியாது.

பையில் நாணயம் இருந்ததும், குண்டு சரியாக அதன் மீது பட்டதும் முழுக்க முழுக்க எதிர்பாராத நிகழ்வுகளே.

இதைத்தான் நம் ஆன்மிகவாதிகள் 'விதி' என்கிறார்கள்.

'விதி என்பது, ஒரு நிகழ்வு எபோது, எங்கே, எப்படி இடம்பெறுதல் வேண்டும் என்று முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது' என்றும், அதை 'நிர்ணயித்தவர் கடவுள்' என்றும் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

'அறிவால் அறியப்படுகிற இயற்கை[கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபஞ்சம்] தொடக்கம் முடிவு என்று இல்லாமல் எப்போதும் இருந்துகொண்டே இருப்பது[இருந்துகொண்டே இருப்பதை எவரும் படைக்க வேண்டிய அவசியம் இல்லை]. அதில் இடம்பெறுகிற நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துபவர் எவருமில்லை. அதனால், விதி என்று எதுவுமில்லை. எல்லாம் இயற்கை நிகழ்வுகளே. இந்த நிகழ்வுகளுக்கான காரணம், அல்லது காரணங்களைக் கண்டறிவது மனித அறிவுக்கு விடப்பட்ட சவால்' என்கிறார்கள் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள்.

இரண்டில் ஏற்கத்தக்க கோட்பாடு எது என்று முடிவு செய்வது அவரவர் மனப் பக்குவத்தைப் பொருத்தது!

===========================================================================