கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ். முன்னாள் இஸ்லாமியரான இவர், கடவுள் மறுப்பு கொள்கையைக் கொண்டவர். அனீஸ் முகநூல் பக்கத்தில், கடவுள் மறுப்புக் கொள்கை தொடர்பாக ஏராளமான கருத்துகளை `Ex Muslim’ என்னும் அடைமொழியுடன் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில் இஸ்லாம், கிறிஸ்துவம் ஆகிய மதங்கள் குறித்து விமர்சித்துப் பதிவு போட்டுள்ளார், இதற்கு ஆதரவு, எதிர்ப்பு என்று கலவையான விமர்சனங்கள் எழுந்தன. குனியமுத்தூர் உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் இதுகுறித்துக் காவல்துறையில் புகார் அளித்தார். அதனடிப்படையில், மதங்களுக்கு இடையே பகை உணர்வைத் தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அனீஸைக் கைது செய்தனர். அனீஸின் கைதுக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.
இவரைப் பற்றிக் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக, தேடுபொறியில் EX MUSLIM Aneesh என்று பதிவு செய்து தேடியதில், EX MUSLIM என்னும் பெயரில் இறைமறுப்பாளர்களாக[நாத்திகர்] மாறிய இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதை அறிய முடிந்தது.
இதனிடையே, அனீஸின் ஜாமீன் மனு கோவை முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சக்திவேல், “மனுதாரர் கடவுள் மறுப்பாளர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, தனது கருத்துகளை வெளியிட அவருக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் அது இருக்கக் கூடாது.....
மனுதாரர், மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையோ, ஒற்றுமையையோ சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் உணரவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார். அனீஸ் தினமும் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது[Source Vikatan]
அனீஸ், தான் சார்ந்த அந்த மதத்திலிருந்து வெளியேறியது மட்டுமின்றி, கடவுள் மறுப்புப் பணியீலும் ஈடுபட்டிருப்பது மிக அரிதான நிகழ்வாகும்.