'நாடு முன்னேற ரூபாய்த் தாள்களில் லட்சுமி, விநாயகர் ஆகிய கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும்' என்று டெல்லி முதல்வர் அரவிந்து கெஜ்ரிவால் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்பது செய்தி.
நாடு முன்னேற, சரியான கொள்கையும் உழைப்பும் இருந்தால் போதாது; மேற்கண்ட கடவுள்களைத் தினசரி வழிபடுவது அவசியம். ரூபாய்த் தாள்களில் அவர்களின் படங்களை அச்சிடுவது[குறைந்த பட்சம் கந்தலாகிப்போன ஒரு பத்து ரூபாய்த் தாளாவது தினமும் நம் பார்வையில் படுவது உறுதி] அதற்கு ஏற்ற வழிமுறையாக அமையும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும்.
ஒரு பக்கம் காந்தி படத்தையும் மறுபக்கம் மேற்கண்ட சாமிகளின் படங்களையும் அச்சிடலாம் என்கிறார் கெஜ்ரி.
கொஞ்சம் யோசித்திருந்தால், நாடு முன்னேற ஒரு தியாகியாக வாழ்ந்து மரித்த காந்தியின் ஆசி அவ்வளவு முக்கியமில்லை என்பதும், சாமிகளுக்குச் சமமான இடம் அவருக்கு வழங்கப்படக் கூடாது என்பதும் அவருக்குப் புரிந்திருக்கும். காந்தி படத்துக்குப் பதிலாக[ஒரு பக்கத்தில்] லட்சுமிதேவியின் படத்தையும், மறு பக்கத்தில் விநாயகப் பெருமான் படத்தையும் அச்சிடலாம் என்ற அரிய யோசனையும் அவரின் மூளையில் உதித்திருக்கும்.
மேலும், நம் சிந்தனையில் உதித்த சில திட்டங்கள்:
ரூபாய்த் தாளின் இரு பக்கங்களிலும் உள்ள எழுத்துகளின் வடிவத்தை மிகவும் சிறியதாக்கினால்[மக்கள் ஆளுக்கொரு லென்ஸ் வைத்திருப்பது கட்டாயம் என்று சட்டம் பிறப்பித்துவிடலாம்] அங்கே அளவில் பெரிதான சாமிகளின் படங்களை அச்சிடலாம்.
அல்லது,
ரூபாய்த் தாளின் அளவை[Size]ப் பெரிதாக்கி, ஒரு பக்கத்தில் மட்டும் எழுத்துகளை இடம்பெறச் செய்து, மறுபக்கம் முழுதும் சாமிகளுக்கு ஒதுக்கலாம்.
அல்லது,
தாளின் இரு முழுப் பக்கங்களிலும்[ஒரு பக்கம் லட்சுமியும் அடுத்த பக்க விநாயகரும்] அவர்களின் உருவம் பதித்து அவற்றின் மேல், சாமி படங்களைப் பெரிதும் மறைக்காத வகையில் எழுத்துகளை அச்சிடுவது சாலச் சிறந்த செயல்பாடாகும்.
மேற்கண்ட இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல சக்தி வாய்ந்த சாமிகளையும் மக்கள் மதித்துப் போற்றி வழிபடுகிறார்கள். அவர்களின் மனம் கோணாதிருக்க, ரூபாய்த் தாள்களில் அவர்களுக்கு இடம் வழங்குவதற்கான வழிவகைகள் பற்றியும் கெஜ்ரிவால் அவர்களும், பிரதமர் மோடி அவர்களும் ஆராய்ந்து முடிவெடுத்தல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்!