புதன், 5 அக்டோபர், 2022

"மங்களம் உண்டாகட்டும்"... சோகத்தில் உதித்த சிரிப்புக் கதை!

நகைச்சுவைப் பதிவு எழுதி மாதங்கள் கழிந்துபோனது நினைவுக்கு வரவே, அதற்கான 'கரு' குறித்து ஆழ்ந்து சிந்திக்கலானேன். மணிக்கணக்கிலான முயற்சி படுதோல்வியில்[கற்பனை வறட்சி!] முடிந்தது.

மிக மிக மிகப் பல ஆண்டுகளாகப் பத்திரிகைகளில் கதை படிக்கும் பழக்கம் எனக்கு உண்டு என்பதால், அடி மனதில் குப்பை மேடாய்க் குவிந்துகிடக்கும் பழைய கதைகளைக் கிளறிச் சிரிப்பூட்டும் கதைக் கருக்களைத் தேடினேன். முண்டியடித்து முன்வந்து நின்றவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து[களவாடி]] எனக்கான நடையில் கதையாக்கியுள்ளேன்.

வாசித்து, வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்து மனதுக்குள் நன்றி சொல்வீர்கள் என்பது என் நம்பிக்கை!

திவீரராமப் பட்டினம் ஒரு வளர்ந்துவரும் கிராமம்.

அங்கு வருகைபுரிந்த சாமியார் பரஞ்சோதி ஊரின் மேற்கே இருந்த மாகாளியம்மன் கோயில் ஆலமரத்தடியில் நான்கு நாட்களாக மோனத் தவத்தில் மூழ்கிக்கிடந்தார். அதை, ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் சொல்ல, ஊர் மக்கள் அவரை அணுகி வாழ்த்துப் பெற்றுத் திரும்புவது நாள்தோறும் நிகழ்ந்துகொண்டிருந்தது.


அன்றைய தினத்தில் சென்னியப்பன் தன் மனைவி செங்கமலத்துடனும் கணவனை இழந்திருந்த மகள் மங்களத்துடனும் சாமியாரிடம் வாழ்த்துப் பெற விரும்பி அதிகாலையில் புறப்பட்டுச் சென்றார்.

விடிந்தும் விடியாத அந்த நேரத்திலும் சாமியார் தியானத்திலிருந்தார். ஊர் மக்களில் வேறு யாரும் வந்திருக்கவில்லை. 

"சாமி... கும்பிடுறேனுங்க" என்றார் சென்னியப்பன், சற்றே உரத்த குரலில்.

கண்விழித்தார் சாமியார்; முகத்தில் அருட்புன்னகை பரவியது.

"இவள் என் மகள். முதலில் இவளை வாழ்த்துங்கள்" என்று சென்னியப்பன் சொல்ல, மங்களமும் சாமியாரின் முன்னால் மண்டியிட்டுத் தலை தாழ்த்தி, இரு கரம் குவித்து வணங்கினாள்.

அபயக்கரம் காட்டிய சாமியார் பரஞ்சோதி, "மங்களம்[மங்கலம் என்பதன் திரிபுச் சொல்லே மங்களம்] உண்டாகட்டும்" என்றார்.

அடுத்த நொடியில், பதற்றத்துடன் சாமியாரின் எதிரில் வந்து நின்ற மங்களத்தின் தாய் செங்கமலம், "சாமி, இவள் அடிக்கடி உண்டாயிடுறாள். கருக்கலைப்பு செஞ்சி செஞ்சி உடம்பு ரொம்பவும் பலவீனம் ஆயிடிச்சி. அதனால, 'மங்களம் உண்டாக வேண்டாம்'னு ஆசீர்வாதம் பண்ணுங்க" என்றாள்.

கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார் சாமியார் பரஞ்சோதி. அதிலிருந்து விடுபட அவருக்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது!

===========================================================================