மோட்சம் கொடுப்பதாக ஒருவருக்குச் சமாதி கட்டிய சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னவில் நடந்துள்ளது.
3 சாதுக்கள்[சாமியார்கள்] ஒருவருக்கு முக்தி தருவதாகக் கூறியுள்ளனர். அவரும் சம்மதித்திருக்கிறார்.
இதையடுத்து, பள்ளம் தோண்டி அந்த நபரை உயிருடன் உட்கார வைத்து மேலே மூங்கில் கம்புகளை அடுக்கி, அதற்கு மேல் களிமண்ணைப் பரப்பி மூடியிருக்கிறார்கள் அந்த 3 பேரும்.
இந்தச் சம்பவம் 'உன்னவ்' மாவட்டப் போலீஸாருக்குத் தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அங்கிருந்த அந்தக் காவிகளிடம்(3 சாமியார்கள்) விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஓர் இடத்தில் பள்ளம் வெட்டி எதையோ மூடிவைத்தது போல் இருந்ததைக் கவனித்தார்கள். மூங்கில், களிமண் ஆகியவற்றை அகற்றிப் பார்த்தபோது, உள்ளே சாமியார்களால் உட்கார வைக்கப்பட்ட நபர் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபர் வெளியேற மறுத்த நிலையிலும்[அந்த அளவுக்குச் சாமியார்க் காலிகள் அவரை மூளைச் சலவை செய்திருக்கிறார்கள்] அந்தப் பள்ளத்திலிருந்து அவரை உயிருடன் மேலே கொண்டுவந்தார்கள்.
சமாதி நிலையை அடைய விரும்பிய நபர் மீது மட்டுமல்லாமல், 3 சாமியார் வேடம் தரித்திருந்த தறுதலைகள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
* * * * *
காவல்துறையினரின் கைது நடவடிக்கை நமக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. அதே வேளையில், நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் சில கேள்விகள் எழுவதையும் தவிர்க்க இயலவில்லை.
குழிக்குள் புதையுண்டு கிடந்தவர் மீட்டெடுக்கப்படாவிட்டால் அவர் உயிர் பிழைத்திருக்கமாட்டார் என்று நினைத்துத்தான் காவலர்கள் அவரை மீட்டார்கள். அதன் மூலம் ஒருவர் உயிரோடு சமாதியானால் அவர் மோட்சம் அடைவார் என்று சொல்வது கட்டுக்கதை என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் என்பது உறுதிப்படுகிறது.
காவலர்கள் மட்டுமல்லாது, அவர்களை இயக்குகிற உத்தரப்பிரதேச அரசுக்கும்[நடுவணரசுக்கும்கூட] இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்றே நம்பலாம்.
உயிரோடு சமாதி ஆகி மோட்சம் பெறலாம் என்பது பொய்யுரை... பச்சைப் புளுகு என்றால், 'மகா சமாதி' ஆவதும் அதைப் போன்றதுதான். இதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை.
உண்மை இதுவாக இருக்கும் நிலையில், சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் ஆடம்பர அலட்டல் சாமியார், கட்டிய பெண்டாட்டியை, 'உயிரோடு மகா சமாதியானார்' என்று சொல்லிக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானதோடு, அந்த ஆள் மீது வழக்குத் தொடுப்பப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது[தொடுத்தவர் பெண்ணின் தந்தை].
ஆனால், நீதிமன்ற வழக்குகளிருந்து விடுதலை ஆனது மட்டுமல்லாமல், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளிலிருந்தும் தப்பி, தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று சொல்லிக்கொண்டு, சொகுசுக் கார்களிலும், ஹெலிக்காப்டர்களிலும், விமானங்களிலும் உலகையே வலம் வந்துகொண்டிருக்கிறானே அவன், இது எப்படி என்பதே நம் கேள்வி.
நீங்களும் கேட்கலாம். விரும்பினால், அனைத்து நண்பர்களுடனும் உற்றார் உறவினருடனும் இக்கேள்வியைப் பகிருங்கள்.
இது எம் வேண்டுகோள்.
===========================================================================