செவ்வாய், 15 நவம்பர், 2022

கூடவே கூடாது 'பிறந்த நாள்' கூத்தடிப்பு!!!

‘பிறந்த நாள்’ கொண்டாடுவதென்பது இன்றெல்லாம் வெகு வேகமாகப் பரவிவரும் ஒரு வேண்டாத நாகரிகம்.


’பிறந்த நாள்’ என்பது என்ன?

நாம் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்பதை[அதாவது, நம் வயதை]த் தெரிந்துகொள்ள வைக்கும் நாள்.

தெரிந்துகொள்வதால் என்ன நன்மை?

எந்தவொரு நன்மையும் இல்லை; வயது கூடுகிறதே என்னும் கவலை மட்டுமே மிஞ்சும்[வயது குறித்தெல்லாம் சிந்திக்கத் தெரியாத சின்னஞ் சிறுசுகளுக்குப் பிறந்தநாள் விழா எடுத்தால் அதுகளுக்கு அது மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்] என்பது மறுக்க இயலாத உண்மை.

நம்மைக் கவலைக்குள்ளாக்கும் இந்தப் பிறந்த நாளை, ‘பிறந்த நாள் விழா என்னும் பெயரில் கொண்டாடவேறு செய்கிறோம். கொண்டாடுவதால், விழாவில் கலந்துகொள்கிறவர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்காகவும்; விருந்து உபசரிப்பால் அற்ப சுகம் தருவதாகவும் அமையலாம். கொண்டாடுபவருக்கு?

காலதேவன் ’சுருக்குக் கயிறு’ சுழற்றிக்கொண்டு வரும் கொடூரக் காட்சி மனக்கண்ணில் தோன்றி அவரை அச்சுறுத்தும்[கொண்டாடுபவர்கள், இது உண்மையா அல்லவா என்று தத்தம் உள்மனதிடம் வினவலாம்]; அதிக வயதானவராக இருந்தால் அந்த அச்சுறுத்தலின் கனபரிமாணம் அதிகமாகும்.

பிறந்த நாளை அவ்வப்போது நினைவில் கொள்வதில் தவறில்லை. அந்த நாள் நினைவுக்கு வரும்போதெல்லாம் வயது அதிகரிப்பது நினைவுக்கு வரும். அதன் விளைவாக, உடல் நலம் பேணுவதில் பெரிதும் அக்கறை செலுத்துதல் வேண்டும் என்னும் எச்சரிக்கை உணர்வு மேலோங்கும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றின் தேவையை உணர்ந்து, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளில் கவனம் செலுத்துவோம்.

ஆக,

பிறந்த நாள் கொண்டாட்டம் என்னும் பெயரில் ஒருவரைக் குளிப்பாட்டிப் புத்தாடை அணிவித்து அலங்கரித்துக் கேக் வெட்டச் செய்து, ‘ஹேப்பி பர்த் டே” சொல்லிக் கூத்தடிப்பது  உண்மையில், “இன்னும் இத்தனை ஆண்டுகளில் நீ ‘எமனுலகம்’ செல்ல இருக்கிறாய்” என்று பயமுறுத்துகிற மிகத் தப்பான செயலாகும்.

ஆகவே, மறந்தும் எவரும் எவருக்காகவும் பிறந்த நாள் கொண்டாடாதீர். ஏதேனும் ஒரு நாளைக் கொண்டாடித்தான் ஆக வேண்டும் என்றால்.....

உங்களுக்கு வேண்டாதவர் இறந்துபோனால் அந்த நாளைக் கோலாகலமாகக் கொண்டாடுங்கள்! ஹி... ஹி... ஹி!!!

===========================================================================