‘உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் 19/11/2022 அன்று மதியம் நடந்த ’காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசினார்’ என்பது செய்தி. இச்செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
அவர் என்ன பேசினார் என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும்.
அறியாதவர்களுக்காக அவர் உரையிலிருந்து என் கவனத்தை ஈர்த்த சில கருத்துரைகள்:
"தெற்கிலிருந்து வடக்குவரை நமது ஒருமைப்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ராமேஸ்வரத்தில் ராமரால் நிர்மாணிக்கப்பட்ட ஜோதி லிங்கமும், காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ஜோதி லிங்கமும் தமிழகத்திற்கும் காசிக்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்துகின்றன. தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி. அதற்குப் பழங்கதை ஒன்று உள்ளது. இந்துக் கடவுளான சிவபெருமானின் வாயிலிருந்து இரண்டு மொழிகள் வந்தன. அவற்றில் ஒன்று தமிழ்; மற்றொன்று சமஸ்கிருதம். அத்தகைய பழமை வாய்ந்த மொழி தமிழ்."
‘ஆதியநாத்’ அவர்கள், ஜோதிலிங்கம் பற்றி, கடவுள் என்று பக்தர்களால் நம்பப்படும் ‘ராமன்’ஐச் சம்பந்தப்படுத்திக் கதை சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே சொல்லப்பட்ட பழங்கதை இது. சொல்லிவிட்டுப்போகட்டும்.
தமிழரல்லாத ஆதியநாத் தமிழினத்தைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து, “சிவபெருமான்’ எனப்படும் கடவுளின் வாயிலிருந்து தமிழ் வந்ததாக[சமசுக்கிருதத்துடன்]இன்னொரு கதையும் கூறியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.
அமெரிக்காவில் விரைவில் வரவிருக்கும் தேர்தலில், அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் ‘ஜோ பைடன்’கூட அங்கு வாழும் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, “நீங்கள் வணங்கும் சிவபெருமானே தமிழின் மறு வடிவம்தான். அவர் பேசும் தமிழைக் கர்த்தா, அல்லா[ஹ்] உட்பட உலகிலுள்ள கடவுள்கள் பலரும் விரும்பிப் படித்தார்கள்; மேலும் பலர் படித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று பேசித் தமிழர்களின் மனங்களைக் கிளுகிளுக்க வைத்து வாக்குகளைப் பெற முயற்சி செய்யலாம்[தமிழைப் புகழ்ந்தால் தமிழர்கள் மயங்குவார்கள். அத்தனை இளிச்சவாயர்கள்].
ஆனால், தேனினும் இனிய தமிழ், அன்னைத் தமிழ், தெய்வத் தமிழ் என்றெல்லாம் தங்களின் தாய்மொழியைத் தாங்களே புகழ்ந்தது போதாது என்று இன்றையத் தமிழ்த் தலைமுறையினர் நினைக்கிறார்கள்.
’தமிழில் அறிவியல் வளர்ந்திருக்கிறதா? அது நாட்டின் ஆட்சிமொழியாக உள்ளதா? அதைப் படித்தால் வேலை கிடைக்குமா?’ என்றெல்லாம் அவர்கள் கேள்விகள் கேட்டுச் சிந்திக்கிறார்கள்.
எனவே, ஆதியநாத், பிரதமர் மோடி போன்றவர்களுக்கும் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....
தலைவர்களே, ”இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்கக் கோடி கோடியாய்ப் பணம் செலவழித்திருக்கிறோம்[தமிழுக்கு வெகு அற்பம்]. அதே அளவுத் தொகையைத் தமிழின் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவோம். இனிப் பாரபட்சமின்றி, அவற்றிற்குச் சமமாகத் தமிழையும் போற்றி வளர்ப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்வோம். இனியும் தாமதம் செய்யாமல் தமிழையும் இந்த நாட்டின் ஆட்சிமொழி ஆக்குவோம்” என்றிப்படிப் பேசினால் தமிழர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதோடு வாக்குகளையும் கொள்ளையடிக்கலாம்.
ஆனால், இப்படியெல்லாம் நீங்கள் பேசமாட்டீர்கள்; பேசுவதைச் செயல்படுத்தமாட்டீர்கள் என்பது எங்களுக்கு அத்துபடியாய்த் தெரியும்.
ஆகவே தலைவர்களே, இனியும் பொய்யான பழங்கதைகளைச் சொல்லித் தமிழர்களான எங்களை முட்டாள்களாக்கும் முயற்சியைத் தயவு செய்து கைவிடுங்கள்.
செய்வீர்களா?
===========================================================================