திங்கள், 21 நவம்பர், 2022

‘ஓநாய் முக நோய்’[Hypertrichosis [அ] werewolf syndrome]... இது, 50 பேருக்கான அதிசய நோய்!!!

Hypertrichosis என்பது ஒருவகை நோய். இந்த நோய் பெரும்பாலும் புராண உயிரினமான ஓநாயின் தோற்றத்தை ஏற்படுத்துவதால், ‘இதனை ஓநாய் நோய்க் குறைபாடு’ (werewolf syndrome) என்றும் அழைக்கின்றனர்.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான ’லலித் படிதார்’ என்னும் இளைஞர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தப் பாதிப்பானது பூமியின் இடைக்காலத்தில் இருந்து வெறும் 50 பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.

லலித் படிதாரின் முகம் முழுவதும் பரவி உள்ள முடிகள் புராண உயிரினமான ஓநாயின் தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இது இருவகைப்படும். முதல்வகை, உடல் பாகம் முழுவதும் அதிகமான முடி வளர்வது. இரண்டாவது வகை, சில குறிப்பிட்ட இடங்களைத் தவிர்த்து மற்றப் பாகங்களில் அதிகமான முடி வளர்வது.

’லலித் படிதார்’ இந்த நோய்ப் பாதிப்பு குறித்துப் பேசுகையில், “நான் மிகவும் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை ஒரு விவசாயி. சிறு குழந்தையாக இருக்கும்போது இந்தப் பாதிப்பு குறித்து எதுவும் தெரியாது. சிறிது வளர்ந்த பிறகு நான் மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் மாறுப்பட்டவன் என்று உணர்ந்தேன்.....

பள்ளிகளில் என்னைச் சகமாணவர்கள் “குரங்கு... குரங்கு” என்று கூவிக் கிண்டல் செய்வார்கள். குழந்தைகளோ நான் கடித்து விடுவேன் என்று பயந்து ஓடுவார்கள். சிலர் என்னைப் பயங்கர விலங்கு என்று நினைத்துக் கல்லால் அடித்துத் துரத்திய நாட்களும் உண்டு.....

நான் இதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். என் வாழ்க்கையை நான் ஒருபோதும் விட்டுத்தரப்போவது இல்லை. நான் தொடர்ந்து முன்னேறுவேன்; சாதனைகள் நிகழ்த்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.

லலித் படிதாரரின் தன்னம்பிக்கையைப் போற்றுகிற அதே நேரத்தில்.....

உலக அளவில் 50 பேர்களுக்கு[ஆண்கள், பெண்கள், குழந்தைகள்]மட்டுமே என்று ஒரு விபரீத நோயை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையைக் கடும் சோதனைக்கும், பெரும் வேதனைக்கும் உள்ளாக்கியது இயற்கையா, கருணை வடிவான கடவுளா என்று கேட்கத் தோன்றுகிறது.

இயற்கை என்றால் அதை நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கடவுள் என்றால்.....

“இத்தனைக் கொடூர மனம் படைத்த அவன் கெட்டழியும் நாளும் வருமா?”

========================================================================