வியாழன், 24 நவம்பர், 2022

நன்மனம் கொண்ட ‘நகரத்தார்’[செட்டியார்]க்குச் சீரிய சில பரிந்துரைகள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்திற்கு நாட்டுக்கோட்டை நகரத்தாரின்[செட்டியார்] பங்கு அதிகம். ஆசியாவிலேயே மிகவும் பிரம்மாண்டமான வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம், காமதேனு கற்பகவிருட்சம்,  பிச்சாண்டவர் வாகனம் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களும் நகைகளும் அண்ணாமலையார் கோவிலுக்குக் கொடுத்துள்ளார்கள்.


திருப்பணி செய்தல், குடமுழுக்குச் செய்தல் என்று பல நற்பணிகளைச் செய்திருக்கிறார்கள்.


திருவண்ணாமலை தேரடி வீதியில் 1872இல் தொடங்கிய அன்னச்சத்திரத்தை இன்றளவும் போற்றுதலுக்குரிய வகையில் வெகு சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்[உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் நாட் கோட் சத்திரம் என்று அழைக்கப்படுகின்ற நாட்டுக்கோட்டைச் சத்திரத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இப்படி இராமேஸ்வரம் முதல் காசிவரை பெரும்பாலான புனிதத் தலங்களில் நகரத்தார் அன்னதானம் செய்துவருகிறார்கள்].


காலங்காலமாக, மேற்கண்டவாறு தானதருமங்கள் செய்வதைப் பரம்பரைக் குணமாகக் கொண்ட இவர்களுக்கு, அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தினர், திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது கோயிலுக்குள் செல்ல அனுமதி அட்டை கொடுப்பதில்லையாம்.


அன்னச் சத்திரத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்ற சமயத்தில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இதைச் சொல்லி அவர்கள் பெரிதும் வருத்தப்பட்டிருக்கிறார்கள்[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nattukottai-nagarathar-request-1000-permit-card-visit-annamalai-during].


இந்த நல்லுள்ளம் கொண்டவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது.....


நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் அவரை மனப்பூர்வமாய் வழிபடுவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்; நீங்கள் கோயில்களுக்கு வழங்கிய வாகனங்களையெல்லாம்[பிற கோயில்களுக்கும் வழங்கியிருப்பதற்கான வாய்ப்பு உள்ளது] அண்ணாமலையார் போன்ற கடவுள்கள் பயன்படுத்துகிறார்களா? நகைகளை அணிந்து கழிபேருவகை பெறுகிறார்களா?


சிறப்பாகச் சிந்திக்கும் அறிவு இருப்பதால்தான் வணிகத்தில் நிறையவே சம்பாதித்தீர்கள்; சம்பாதிக்கிறீர்கள். எந்த வகையிலும் கடவுள்களுக்குப் பயன்படாத செயல்களை நீங்கள் செய்வது குறித்துச் சிந்திக்கும் வழக்கம் உங்களுக்குக் கொஞ்சமும் இல்லாமல்போனது ஏன்?


அந்தக் காலம் முதல் இந்தக் காலம்வரை, பக்தி மனமும் கொடையுள்ளமும் கொண்டவர்கள் கோயில்களுக்கு வழங்கிய ஐம்பொன் சிலைகளும், பொன் நகைகளும், பொருளும் பிறவும் திருடர்களாலும், சுயநலவாதிகளான நிர்வாகிகளாலும் கொள்ளையடிக்கப்பட்டதை நீங்கள் அறியாமல்போனது ஏன்?


இனியேனும், இம்மாதிரி ஏமாளித்தனமான செயல்களில் ஈடுபடாதீர்கள்.


தானதருமம் செய்வது உங்களின் குருதியில் ஊறிய குணம் என்றால், ஏழை எளியவர்களுக்கு, அன்னதானம் செய்தல், திருமணங்கள் செய்வித்தல், மருத்துவமனைகள் நடத்திப் பிறர் உடல்நலம் பேணுதல் என்று நேரடியாக அதைச் செய்யுங்கள்.


அவற்றின் பலன்களை நீங்கள் உடனுக்குடன் பெறுவீர்கள்; உங்களின் கண்ணெதிரே உங்களால் பயனடைந்தவர்களின் மனம் நிறைந்த பாராட்டுதலைப் பெறுவீர்கள். கோடி கோடி கோடியாய்க் கோயிலுக்கு வாரி வழங்கினாலும் எந்தவொரு கடவுளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாழ்த்துவது இல்லை என்பதை நம்புங்கள்.


கடவுளே அனைத்தையும் படைத்ததாகச் சொல்கிறார்கள். அவ்வாறாயின், நீங்கள் கோயிலுக்கு வழங்கிய பிரம்மாண்டமான வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி ரதம், காமதேனு கற்பகவிருட்சம்,  பிச்சாண்டவர் வாகனம் போன்றவையும் அவருக்குச் சொந்தமானவைதான்.


அவருக்கு உரியவற்றைப் பக்தியின் பெயரால் அவருக்கே திருப்பித் தருவது பைத்தியகாரத்தனமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?


அன்புகொண்டு இனியேனும் சிந்தித்துச் செயல்படுங்கள்.


இந்த வேண்டுகோள், நாட்டுக்கோட்டை நகரத்தார்க்கு மட்டுமல்ல, தர்ம சிந்தனை கொண்ட ஏனையோருக்கும்தான்!

========================================================================