***அணுக்கள், பொருள்கள், உயிர்கள், என்றிவை அனைத்தும் மாறுதலுக்கு உட்பட்டவையே. இது அறிவியல்.
உண்மை இதுவாக இருக்கையில், “மாறிக்கொண்டே இருக்கிற தன்மை வாய்ந்த அனைத்தையும் படைத்தவர் எப்போதும் மாறுதலுக்கு உட்படாத கடவுள்” என்றார்கள் ஆன்மிகவாதிகள்[கடவுள் நம்பிக்கையாளர்கள்].
அறிவியல் கோட்பாடுகளின்படி, ‘மாற்றங்களுக்கு இடம் தராத ஒன்று’ என்று எதுவுமே இல்லை.
உயிரினங்களில் மாற்றங்கள்[அணுக்கள் இணைதலும் பிரிதலும்] இடம்பெறுவதால்தான் ‘சிந்தித்தல்’ என்பதே சாத்தியமாகிறது.
கடவுள் மாறுதல்களுக்கு உள்ளாகாதவர் என்றால், அப்படியொருவர் இருப்பதும், தன்னிச்சையாய்ச் சிந்தித்து அனைத்துப் பொருள்களையும் உயிர்களையும் படைத்து இயக்குவதும் சாத்தியமே இல்லை.
***“கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர்; எதுவாகவும் இருப்பவர்” என்றார்கள்.
பாம்பு எலியை விழுங்கி உணவாக்கிக்கொள்ளும் இயற்கை நிகழ்வுகளை நாம் அறிவோம். கடவுள் எதுவாகவும் இருப்பவர் என்றால், பாம்பாக இருக்கும் அவர் எலியாகவும் இருக்கும் தன்னையே அவர் உணவாக்கிக்கொள்கிறாரா?
உயிரினங்கள் ஒன்றையொன்று தாக்கிக்கொள்வதும், உண்டு தின்று ஜீரணம் செய்வதும் பூமியெங்கும் இடம்பெறும் நிகழ்வுகளாகும்.
இதனால், கடவுள் தன்னைத்தானே தாக்கிக்கொண்டு துன்புறுத்துவதும் துன்பப்படுவதுமாக இருக்கிறார் என்பது உறுதியாகிறது.
இதன் மூலம், “தானே தன்னைத் தாக்கித் துன்புறுத்திக் கொன்று உணவாக்கி உயிர்வாழும் கிறுக்குத்தனமான வேலையை அவர் செய்துகொண்டிருக்கிறாரா?” என்று கேட்கத் தோன்றுகிறது.
ஏதோ பிரச்சினை காரணமாக நாம் ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொள்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். தாக்குதலின்போது நீங்களும் நானும்தானே வலி பொறுக்காமல் அலறுகிறோம். வலி தாங்குபவர் கடவுள் அல்லவே. இவரை எப்படிக் கருணை வடிவானவர் என்கிறார்கள். ஏனிந்த முரண்பாடு?
***“மேலான சக்தியே கடவுள்” என்றும் சொல்கிறார்கள்.
பொருள்களின்/உயிர்களின் தகவமைப்புக்கு ஏற்ப, அவற்றின் இயங்கு சக்தி கூடலாம்; குறையலாம். இது இயற்கை.
இதை மறந்து, கடவுளை ‘மேலான சக்தி’ என்கிறார்களே, சக்தியில் என்ன மேலானதும் கீழானதும்?
அவர் மேலான சக்தி படைத்தவர் என்றால், ‘மேலானது’ என்பதற்கான ‘அளவு’ என்ன?
மேலானதற்கும் மேலான சக்தி இருந்திடலாம்தானே?
“மேலானது... அதற்கும் மேலானது... மேலானதுக்கும் மேலானது...” என்றிப்படி அடுக்கிக்கொண்டே போனால், இந்தக் கேள்விக்கு விடை பெறுவது சாத்தியமா? எப்போது? எப்படி?
***“கடவுள் ஒருவரே” என்றார்கள்; என்கிறார்கள்.
அண்டவெளியில் தென்படும் பொருள்களை “ஒன்று... இரண்டு... மூன்று...” என்றெல்லாம எண்ணுகிற வேலையைச் செய்தது மனித அறிவு.
வெளி ‘வெறுமையாய்’ இருந்தபோது இந்த எண்ணிப்பார்க்கும் கணக்கெல்லாம் இல்லை. எந்தவொரு சாதனத்தைக்கொண்டும் அளந்து காண இயலாதது அது.
‘வெளி’யையே அளந்து கணக்கிடுவது சாத்தியம் இல்லை என்னும்போது, பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூலகாரணம் என்று சொல்லப்படும் கடவுளை ‘ஒன்று’ என்னும் எண்ணிக்கைக்குள் எப்படி அடக்கினார்கள்?
நம்பவைத்து நம்மில் பெரும்பாலோரை முட்டாள்கள் ஆக்கினார்கள்.
எது எப்படியோ, ஆன்மிகர்களின் அனுமானங்களின்படி.....
‘அவர்’ எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகதவராம்; எங்கும் நிறைந்து எதுவாகவும் இருப்பவராம்; மிக மேலான சக்தி வடிவானவராம்; வல்லவராம்; நல்லவராம்; அனைத்தையும் படைத்துக் காக்கும் கருணைக் கடலாம்.
கடவுளைக் கற்பித்தவர்கள் எப்படியோ, அவர்கள் சொல்வதையெல்லாம் நம்புகிறவர்களை முட்டாள்கள் என்பதோடு வேறு என்னவெல்லாம் சொல்லிச் சாடலாம்?
நீங்களே முடிவெடுங்கள்!
ஹி...ஹி...ஹி!!!
===========================================================================