ஞாயிறு, 27 நவம்பர், 2022

எங்கும் பசியும் பட்டினியும்! அழிவின் பிடியிலிருந்து ஆப்கானிஸ்தான் மீளுமா?!?!

கீழ்க்காண்பது சில மணி நேரங்களுக்கு முன்னரான ‘பிபிசி’[https://www.bbc.com/tamil/articles/c1verg14v5go] செய்தி.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள், ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு வெளிநாட்டு நிதியுதவி முடக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானவர்கள் வேலை வாய்ப்பை இழந்தார்கள்; கடும் பஞ்ச காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் உடல் உறுப்புகளை விற்று வறுமையைச் சமாளித்துத் தங்கள் பிள்ளைகளை உயிர் பிழைத்திருக்க வைத்திருப்பதாகக் கூறுபவர்களும் அங்கு உள்ளார்கள்.


“எங்களுக்கு உணவு இல்லை. எங்கள் குழந்தைகள் தூங்கவில்லை, அழுதுகொண்டே இருக்கிறார்கள். ஆகையால், நாங்கள் மருந்தகத்திற்குச் சென்று, மயக்கமாக உணர வைக்கும் மாத்திரைகளை வாங்கி எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறோம். அதனால் அவர்கள் தூங்குகிறார்கள்” என்று மக்களில் பலரும் சொல்லும் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் வறுமைப் பேய் தலைவிரித்தாடுகிறது.

 

தொடர்ந்து நடைபெற்ற போராலும், இயற்கைப் பேரிடர்களாலும் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சிறிய மண் வீடுகளில் வசிக்கிறார்கள்.

 

”ஓர் உள்ளூர் மருந்தகத்தில் 10 ஆப்கனிஸ் (இந்திய மதிப்பில் சுமார் 9.22 ரூபாய்) அல்லது ஒரு துண்டு ரொட்டியின் விலையில் ஐந்து மாத்திரைகளை வாங்க முடிகிறது” என்று மக்கள் சொல்வதிலிருந்து, பசியின் பிடியிலிருந்து  மீள வழியில்லாமல் செத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதை உணர முடியும்.


ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான ரீதியிலான ஒரு “பேரழிவு” இப்போது நிகழ்வதாக ஐநா கூறியுள்ளது.

 

“ஒரு நாள் இரவு சாப்பிட்டால் அடுத்த நாள் சாப்பிட முடியாது. என் சிறுநீரகத்தை விற்ற பிறகு நான் பாதி ஆளாக உணர்கிறேன். எனக்கிருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது. வாழ்க்கை இப்படியே தொடர்ந்தால் நான் செத்துவிடுவேன் போல் இருக்கிறது” என்கிறார் அந்நாட்டுக் குடிமகன் ஒருவர்.

 

”எங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாவிட்டால் மகள்களை அவர்களிடம் கொடுக்குமாறு கேட்டுத் தினமும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். எங்கள் நிலைமையை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன். சில நேரங்களில் இப்படி வாழ்வதைவிட இறப்பதே மேல் எனத் தோன்றுகிறது” என்கிறார் மற்றொருவர்.


தாலிபன் அரசாங்கத்தாலும் சர்வதேச சமூகத்தாலும் தாங்கள் கைவிடப்பட்டதாகவும், தங்களின் கண்ணியமான வாழ்க்கையைப் பசி உடைத்துவிட்டதாகவும் பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள்.


இன்னும் பல சோகச் செய்திகளின் தொகுப்பான ‘பிபிசி’ கட்டுரை கீழ்க்காணும் வகையில் முடிவடைகிறது.


‘பட்டினி ஓர் அமைதியான கொலையாளி. அதன் விளைவுகள் எப்போதும் உடனடியாகத் தெரிவதில்லை. உலகின் கவனத்திலிருந்து விலகியிருக்கும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் உண்மையான அளவு வெளிச்சத்திற்கு வராமலேகூடப் போகலாம். ஏனென்றால், யாரும் அதைப் பற்றிச் சிந்திக்கவில்லை.’

 ஆப்கானிஸ்தான்

===========================================================================

*****கட்டுரை சுருக்கப்பட்டு, ‘கருத்துத் திரிபு’ ஏற்படாத வகையில் அதன் வடிவம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.