அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 29 நவம்பர், 2022

“அதென்ன தியானம்? அதைச் செய்வது எப்படி?”... ஒரு சிறு குறு ஆய்வு!

‘தியானம் என்றால் என்ன?’ என்பதற்கு ‘வலை’யில் விளக்கம் தேடியதில்.....


‘தியானம் என்பது சில நன்மைகளை உணர அல்லது மனதின் உள்ளடக்கத்தை அறியாமல் அதனை ஒப்புக்கொள்ள, அல்லது தியானத்தையே ஒரு முடிவாக நினைத்து ஒரு நபர் மனதை இயக்குதல் அல்லது பயிற்றுவித்தல், அல்லது உணர்வு நிலையைத் தூண்டுதல் மூலம் செய்யப்படும் நடைமுறையாகும்’[விக்கிப்பீடியா].

-கிடைத்த விளக்கங்களில் இதுவும் ஒன்று. இது விளக்கம் அல்ல; குழப்பம்!

‘மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும்’ -https://studybuddhism.com/ta/atippatai/enna/tiyanam-enral-enna -இது ஒரு விளக்கம்.


அதென்ன நிலைகளை மேம்படுத்துதல்? இன்னும் மேம்பட்ட, தெளிவான விளக்கம் தேவை.


‘தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுதல் ஆகும்’ -இது மற்றுமொரு விளக்கவுரை.


ஒரு பொருளின் தன்மையை அறிந்திட, ஆழ்ந்த சிந்தனை தேவை என்று சொன்னால் போதுமே.


‘தியானம்’ என்பது என்ன என்பதை அறிவது ஒருபுறம் இருக்க, ‘தியானம் செய்வது எப்படி?’ என்னும் ஒரு கேள்வியை முன்வைத்துத் தேடியதில் கிடைத்த ஒரு பதில்:


முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாகக்கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்’ -https://www.maalaimalar.com/Health/Fitness/2019/04/25110547/1238642/Meditation-doing-method.vpf


இங்கே குறிப்பிடப்பட்டுள்ள மந்திர தந்திரங்களெல்லாம் நம்பத்தக்கவை அல்லவே. அப்புறம் எப்படி அவற்றின் பொருளுணர்ந்து பாவத்துடன் உச்சரிப்பது?


தொடர்ந்து தேடியவகையில், தியானத்திற்கான இடத் தேர்வு, அமரும் முறை[ஆசனத்தில் போர்வை கம்பளியெல்லாம் விரித்து, முதுகு வளையாமல் கண்மூடி அமர்ந்து... என்றிப்படி], தியானத்தால் பெறும் பயன்[மன அமைதி கிடைக்கும்; நினைவாற்றல் பெருகும்; நோய்கள் குணமாகும்; நல்ல தூக்கம் வரும்...] பற்றியெல்லாம் அறிய முடிகிறதே தவிர, தியானம் செய்வது எப்படி?’ என்பதற்கு மன நிறைவு தரும் வகையில் பதில் ஏதும் கிடைத்திடவில்லை[போட்டி போட்டுக்கொண்டு பலரும் குழப்புவாதால்தான், தியானிக்கும் ஆசாமிகளில் பலரும் தத்தமக்குப் பிடித்த சாமிகளின் பெயர்களை முணுமுணுக்கிறார்கள்].


இக்கேள்விக்கு மிகச் சரியானதும் தெளிவானதுமான விளக்கக் குறிப்புகள் கிடைத்திடாத நிலையில், மறைந்த ‘வேதாத்திரி மகிரிஷி’ சொல்லக் கேட்டதாக, மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ‘சூரியன்’ B.E., M.I.E அவர்கள் தம் நூலில்[டென்சன், கவலை, கோபம் போக்குவது எப்படி] பட்டியலிட்டுள்ள தியான வாசகங்கள்[தேர்வு செய்யப்பட்டவை] சற்றே மனநிறைவு தருவதாக அமைந்துள்ளன.


“நான் தன்னம்பிக்கை உள்ளவன்’

”அனைவர் மீதும் அன்பு செலுத்துவேன்”

“என்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு என்றென்றும் நன்றியுடவனாக இருப்பேன்”

“உற்றார் உறவினருக்கும் நண்பர்களுக்கும் என்னாலான உதவிகள் செய்வேன்”

“எனக்குக் கெடுதி விளைவிக்கும் எதிரிகளை மனப்பூர்வமாக மன்னிப்பதை வழக்கமாக்கிக் கொள்வேன்”

“உலகெங்கிலும் உள்ள மக்களும் பிற உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ்வதை உளமார விரும்புகிறேன்”

* * * * *

சூரியன் பட்டியலிட்டுள்ள இந்த மனப் பயிற்சிகள் தனி மனிதருக்கானவையாகும். இவற்றால் அவர் மட்டுமே பயன் பெறுவார். 


‘தனி மனிதர் என்றில்லாமல் உலகிலுள்ள மக்கள் அனைவருமே இவ்வகையான பயிற்சிகளை[தியானம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்] நாள்தோறும் மேற்கொள்வார்களேயானால் எங்கும் அமைதி நிலவும்; மக்கள் மனங்களில் மகிழ்ச்சி நிரம்பி வழியும்’ என்பது வேதாத்திரி மகிரிஷி, மனநலப் பயிற்சியாளர் சூரியன் ஆகியோரின் விருப்பம் ஆகும்.


நம் விருப்பமும் இதுவே!

===========================================================================