புதன், 30 நவம்பர், 2022

நடுவணரசுக்குக் கேள்வி... “இது வெறியா, திமிரா, ஆணவமா, அகங்காரமா?!?!?"

'தள முகடு’[Blog Header]வில் இடம்பெற்றுள்ள படத்தை உற்றுநோக்குங்கள்.

ஏதும் புரிகிறதா?

ஆங்கிலம் தெரிந்தவனுக்கும் புரியாது. தமிழ் தெரிந்தவனுக்கும் புரியாது.

இந்தி தெரிகிறவனுக்கு மட்டுமே மேற்காணும் இந்திச் சொல்லுக்குக்கான பொருள் ‘தகவல்[சேவை] மையம்’[இன்ஃபர்மேசன் சென்டர்] என்பது புரியும்.

இந்த அறிவிக்கை வைக்கப்பட்டுள்ள இடம் திருப்பூர் ரயில் நிலையம்.

திருப்பூர் தமிழ்நாட்டிலுள்ள ஓர் இடம்.

தமிழர்கள் பெரும்பான்மை வாழ்கிற ஓர் ஊரில் அவர்களில் பெரும்பான்மையோர்க்குப் புரிகிற வகையில் தமிழிலோ, கணிசமானவர்களுக்குப் புரிகிற வகையில் ஆங்கிலத்திலோ அறிவிப்புச் செய்யாமல், வயிற்றுப் பிழைப்புக்காக வந்துபோகிற ஒரு சிறு கூட்டத்துக்காக, இதைச் செய்கிறார்கள் என்றால், அதற்கான காரணம்.....

இந்தி வெறியேறிய அதிகாரிகளின் கைங்கரியமா, நடுவண் ஆட்சியாளர்களின் தூண்டுதலா, தமிழர்களால் தட்டிக்கேட்க முடியாது என்னும் திமிரா, அதிகாரம் தங்கள் கையில் என்பதால் உருவான ஆணவமா, பெரும்பான்மையோர் என்பதால் உண்டான அகங்காரமா?

இந்தியாவை ‘இந்தி’யா ஆக்க நினைக்கும் இவர்களுக்கு, இந்தி ஆளும் மாநிலங்களிலிருந்து ‘இந்தி’யர்கள் வயிற்றுப்பாட்டுக்காகக் கூட்டம் கூட்டமாகத் தமிழ் மண்ணைத் தேடி வருவது தெரியாதா? தெரியாதது போல நடிக்கிறார்களா?

அல்லது, தமிழ்நாட்டில் இந்தியைத் திணி திணி திணி என்று திணித்து வைத்தால், இங்கே அண்டிப் பிழைக்க வந்த ‘இந்தி’யர்களே பின்னொரு நாளில் இந்த மாநிலத்தை ஆளும் வாய்ப்பு வரும் என்று கனவு காணுகிறார்களா?

கனவை நனவாக்கும் முயற்சியில் இனியும் ஈடுபட வேண்டாம் என்பதே இவர்களுக்கு நாம் செய்யும் அறிவுறுத்தல்; வழங்கும் அறிவுரை.....

”உங்களைத் தமிழர்கள் நிந்திக்கும் வகையில் நடந்துகொள்வதைத் தவிர்த்து, இனியேனும் சிந்திக்கக் கற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்” என்பதுதான்!

=========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக