வியாழன், 1 டிசம்பர், 2022

"கடவுள் சிலையும் கோபுரச் சிற்பமும் ஒன்றல்ல அண்ணாமலையாரே!!!”

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கண்காணிப்புக் படக்கருவி(கேமரா) பொருத்துவதற்காகக் கோயில் கோபுரத்திலிருந்த தெய்வத்தின் திருமேனியை(பொம்மை)த் தி.மு.க. ஆட்கள். சிதைத்துவிட்டார்கள் என்று தமிழ்நாடு 'பாஜக' தலைவர் 'அண்ணாமலை' ஓங்காரக் குரல் எழுப்பியிருக்கிறார்[ஊடகச் செய்தி].

கோபுரத்திலிருக்கும் சிற்பங்களும்[பொம்மைகள்] கோயிலுக்குள் இருக்கும் சாமி சிலைகளும் ஒன்றல்ல என்பதை அறியாத ‘அண்ணாமலை' தி.மு.க. அரசைத் தாக்கு தாக்கென்று தாக்கியிருப்பது நகைப்புக்குரியது.

கல்லிலோ உலோகத்திலோ வடிக்கப்படும் சிலைகள், அவை வடிவமைக்கப்பட்டவுடனே வழிபாட்டுக்கு உரிய சிலைகளாக ஆகிவிடுவதில்லை. அவ்வாறு ஆவதற்குப் பல்வேறு ஆன்மிக வழிமுறைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்ட பிறகு, வேத மந்திரம் எல்லாம் சொல்லி முடித்தால்தான் அவற்றுள் கடவுள்கள் குடியேறுவதாகவும் கூறுகிறார்கள்.

அத்தகைய சிலைகளைத்தான் திருமேனிகள்[கடவுளர், முனிவர்கள், யோகிகள், தவசிகள் போன்றோரின் உடம்பைக் குறிப்பிடும்போது திருமேனி, அதாவது, தெய்வீகம் நிரம்பிய மேன்மையான சரீரம் என்று சொல்வார்கள்]என்பார்கள்.

கோபுரங்களில் வடிவமைக்கப்படும் சிற்பங்களெல்லாம் கடவுள்கள் குறித்த கற்பனைக் கதைகளில் கணிசமானவற்றைக் காட்சிப்படுத்துபவை. அவற்றைத் திருமேனிகள் என்று ஆன்மிகர் எவரும் சொல்வதில்லை.

‘அண்ணாமலை’ அவர்களின் கருத்துப்படி பார்த்தால் கோபுரத்தில் உள்ள அம்மணச் சிற்பங்களும், கொக்கோகம் கற்பிக்கிற அசிங்கப் பொம்மைகளும்கூடத் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்றாகிறது.

கோயில் சிற்பங்களைத் தவிர்த்துக் காலியாக உள்ள இடங்களைத் தேவையான அளவுக்கு இடித்து, அங்கே கண்காணிப்புக் கேமரா பொருத்தலாமே என்றால், வேத விற்பன்னர்களின் கருத்துப்படி அதுவும் தவறுதான். காரணம்.....

கோபுரங்கள் புனிதமானவையாம்[‘கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம்’]. 

ஆக, கோபுரத்தில் கண்காணிப்புக் கருவி பொருத்த முடியாது என்றால், அதை வேறு எங்குதான் பொருத்துவது[சாமிகள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளாததால்தான். அவற்றின் பாதுகாப்புக்கு இம்மாதிரிக் கருவிகள் தேவைப்படுகின்றன] என்னும் கேள்வி எழுகிறது.

இம்மாதிரியான கேள்விகள் எழாமல் தவிர்ப்பது ‘அண்ணாமலை’ போன்ற ஒரிஜினல் பக்திமான்களால் முடியும்.

எப்படி?

கோபுரத்துக்குக் கிஞ்சித்தும் பங்கம் விளைவிக்காமல், அதற்குச் சற்று மேலே அந்தரத்தில்[வெட்டவெளியில்] பொருத்துவது அண்ணாமலைக் கடவுளின் பூரண அருளைப் பெற்றிருக்கும் பக்தரான இவருக்குச் சாத்தியமே. 

இந்தவொரு அதிசயத்தை இவர் நிகழ்த்துவாரேயானால் அகில உலகமும் இவரை மெய்சிலிர்த்துப் புகழ்ந்து போற்றும் என்பது உறுதி. ===========================================================================