திங்கள், 7 நவம்பர், 2022

விலைபோகாத விலைமாதர்கள்!!!

 'புதுச்சேரி ரெட்டியார்பாளையம் திருநகர் சந்திப்பில் நேற்று 2 பெண்கள் நின்றுகொண்டு, அவ்வழியாகச் சென்ற ஆண்களை விபச்சாரத்திற்கு அழைப்பதாக ரெட்டியார்பாளையம் போலீசுக்குத் தகவல் வர, அவர்கள் அங்கு விரைந்து செல்லவும் ஒருத்தி தப்பி ஓடினாள்; மற்றொருத்தியைக் காவலர்கள் கைது செய்தனர்' என்பது இன்றையச் செய்தி https://www.dailythanthi.com/news/puducherry/woman-called-for-prostitution-arrested-787068

'சதை வணிகம்' என்பது மிகவும் பழைமையானதொரு தொழிலாகும்.


கி.மு 2400இல் தெற்கு மெஸபடோமியாவில்(இன்றைய ஈராக்) பணத்துக்காக அல்லாமல் மதச் சடங்காகவும், கோயில்களுக்குச் செய்யும் சேவையாகவும் விபச்சாரம் கருதப்பட்டது.


பண்டையக் கிரேக்கத்தில், கல்வி கற்றவர்களாவும், சொகுசாக வாழ்பவர்களாகவும் விலைமாதர்கள் இருந்திருக்கிறார்கள். அடிமைகளாக வாழ்ந்த பெண்களும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிக்கத் தெருத் தெருவாக அலைந்த அபலைகளும் இருந்திருக்கிறார்கள்.


செய்வது 'சதை வணிகம்'தான் என்றாலும் இதைச் செய்பவர்களுக்குள் ஏராள ஏற்றத் தாழ்வுகள் இருந்தன; இருக்கின்றன.


இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே, தேடிவரும் வாடிக்கையளரிடம், ஒரு மணி நேரத்திற்குப் பல ஆயிரம், லட்சம் என்று கறாராய் வசூல் செய்து கோடிகளில் புரளும் பேரழகிகள் ஒருபுறம்.


விரும்பியோ விரும்பாமலோ, கௌரவமாய் வாழ வகையில்லாமல் இதில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் நடுத்தர வர்க்கப் பெண்கள் இன்னொருபுறம்.


அழகியோ அல்லவோ, வயிற்றுப்பாட்டுக்காகச் சாலையோரங்களில் கால்கடுக்க நின்று வடிக்கையாளர்களுக்கு வலை வீசுபவர்கள் இன்னுமொருபுறம்.


இவர்களெல்லாம் பலராலும் அறியப்பட்டவர்கள்தான்.


கோடிகளில் புரளும் விலைமாதரை அணுகுவதோ, வழக்குத் தொடுத்து நீதியரசர்கள் முன் நிறுத்துவதோ உயர்மட்டக் காவல்துறை அதிகாரிகளுக்கே எளிதில் சாத்தியப்படாத ஒன்று.


இரண்டாம் தரத்தவர் அடிக்கடி வழக்குகளில் சிக்கினாலும் அவர்களை மீட்டெடுத்துப் பாதுகாக்க, ஓரளவுக்கேனும் செல்வமும் செல்வாக்கும் உள்ளவர்கள் இருப்பார்கள்.


வாலிபர்கள், கிழவர்கள் என்னும் வேறுபாடு பாராமல், வருவோர் போவோரிடம், "வர்றியா?" என்று இதமாக அழைப்பவர்கள்தான் நம் அனுதாபத்திற்குரியவர்கள்.


இவர்களுக்காக, காவல்துறை அதிகாரிகளிடம் நாம் அன்புடன் வேண்டுவது.....


இவர்களுக்கான அற்ப வருமானம்தான், இவர்களை நம்பியிருக்கும் சிறுசுகள், கிழவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் போன்றவர்களின் பசி போக்குகிறது. இவர்களைப் பிடித்து 'உள்ளே' தள்ளிவிட்டால் அந்தச் சிறுசுகளும், பெருசுகளும், இவர்களைச் சார்ந்திருப்போரும் முழுப் பட்டினி கிடக்க நேரிடும்.


ஆகவே, கவல்துறை அதிகாரிகளே, இனியேனும் இவர்களைக் கைது செய்வதைத் தவிருங்கள்.


விரும்பினால், இவர்களின் பசி தணிக்க, அருகிலுள்ள கடைக்கு அழைத்துச்சென்று தேனீருடன் வறுக்கியோ, வடையோ, வேறு நொறுக்குத் தீனியோ வாங்கிக் கொடுங்கள்.


இதனால் உங்களுக்கு ரொம்பவே புண்ணியம் சேரும்!


கொசுறு:


*உலகம் முழுக்க 4 கோடிப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.


*22 உலக நாடுகள் விபச்சாரத்தைச் சட்டபூர்வமாக அனுமதித்திருக்கின்றன.


*உலக அளவில், பத்துப்பேருக்கு ஓர் ஆண், விபச்சாரியிடம் போகிறார்.


*உலகில் 25 லட்சம் பெண்கள் விபச்சாரத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.


-இதெல்லாம் பழைய புள்ளிவிவரம்!

==========================================================================