அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 8 நவம்பர், 2022

நீதிமன்றத் தீர்ப்புகளில் 'பெரும்பான்மை-சிறுபான்மை' பார்ப்பது ஏற்புடையதா?!

ழக்குகளை விசாரித்து, எது நீதி, எது அநீதி என்று கண்டறிந்து தீர்ப்பு வழங்குவதால், வழக்கு விசாரிக்கப்படும் இடம் நீதிமன்றம் என்று பெயர் பெற்றது. விசாரிப்பவர் நீதிபதி ஆவார். 

எது நீதி, எது அநீதி என்று முடிவெடுப்பதற்கு, ஏற்கனவே இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சட்ட விதிமுறைகளை அவர்கள் நன்கு அறிந்திருப்பது அவசியம்.

100% சட்ட விதிமுறைகளை ஒரு நீதிபதி அறிந்திருப்பது சாத்தியமில்லை.

அவருக்குள்ள சட்ட அறிவைப் பொருத்து, அரிதாகச் சில நேரங்களில் மிகச் சரியான தீர்ப்பை அவரால் வழங்க முடியாமல் போகலாம்.

இக்குறைபாட்டை மனதில் கொண்டுதான். நீதித் துறையில், மாவட்ட நீதிமன்றம்[செசன்ஸ்], உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்றெல்லாம் மேல் முறையீட்டுக்கு இடம்தரும் வகையில்  பல படிநிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தனி நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளில் மனநிறைவு கிட்டாத தருணங்களில், குறிப்பிட்ட சில வழக்குகளை ஒருவருக்கும் மேற்பட்ட நீதிபதிகள் விசாரிப்பது நடைமுறையில் உள்ளது.

ஆனால், இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்காமல் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்குவதும் உண்டு.

இவ்வாறு முரண்பாடுகள் நேரும்போது, அது நேர்ந்தது எவ்வாறு என்று சட்டம் தொடர்பான விதிகளை மிக நுணுகி ஆராய்ந்து, மிகச் சரியான 'ஒருமித்த' தீர்ப்பை அரிதின் முயன்றேனும் கண்டறிந்து வழங்குவது நீதிபதிகளின் கடமையாகும்.

ஒருமித்த கருத்தைப் பெறுவதற்குக் கால அவகாசம்[கூடக்குறைய அமையக்கூடும்] தேவைப்படலாம்.


அது ஒரு பொருட்டல்ல; வழக்குகளுக்கு ஏற்புடைய தீர்ப்புகள் வழங்கப்படுவதே முக்கியம்.

நீதிமன்றங்களின் தீர்ப்பு அனுமானங்களின் அடிப்படையிலோ, நீதிபதிகளுடைய விருப்பு வெறுப்புகளுக்கு இணங்கவோ அமைதல் கூடாது; அமைவதும் இல்லை என்று உறுதிபடச் சொல்லலாம்.

ஆட்சி அமைப்பதில் பெரும்பான்மை சிறுபான்மை பார்க்கலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளை அங்கீகரிப்பதிலோ வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குவதிலோ  அதைப் பின்பற்றுதல் கூடாதுதானே?[பெரும்பான்மையோர் வழங்கும் தீர்ப்பு தவறானதாகவும், சிறுபான்மையோர் தீர்ப்பு சரியானதாகவும் அமைய வாய்ப்புள்ளது. சில விஞ்ஞானிகள் சொல்வது தவறாகவும், ஒருவர் சொல்வது சரியானதாகவும் இருந்திடலாம்].

இந்தக் கேள்வி எனக்குள்ள அறியாமை காரணமாக முன்வைக்கப்பட்டதே தவிர, 10% இடஒதுக்கீடு வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிப்பதற்காக அல்ல.

அல்லவே அல்ல!

===========================================================================