வெள்ளி, 18 நவம்பர், 2022

“சபரிமலை செல்லமாட்டோம்”... சபதம் ஏற்பார்களா பெண்கள்?!?!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேல்சாந்தி என்ன கீழ் சாந்தி என்ன, குருக்கள் என்ன, ஜீயர்கள் என்ன, பூசாரிகள் என்ன, மகான்கள் என்ன, அவதாரங்கள் என்ன, ஞானிகள் என்ன இவர்களில் எவருமே பிரபஞ்ச வெளியில் எங்கோ ஒரு முடுக்கில் குடிகொண்டிருப்பதாக நம்பப்படும் கடவுளிடமிருந்து நேரடியாக இந்தப் பூமியில் வந்து குதித்தவர்கள் அல்ல.

எல்லோருமே இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களுக்குப் பிறந்தவர்கள்தான்.

உண்மையில், கண்ணுக்குத் தெரிகிற ஒரே ஒரு கடவுள் பெண் மட்டுமே. ஆணைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில் சொல்லொணாத துயரங்களை அனுவிப்பவள் அவள்தான் என்பதால்.

இந்த[பெண்]க் கடவுளைவிடவும் மேலானவர் அல்ல கற்பனை செய்யப்பட்ட அனுமானக் கடவுளான சபரிமலை ஐயப்பன்.

ஏதேதோ காரணங்களைச் சொல்லி இளம் வயதுடைய பெண்களை அங்கே அனுமதிக்க மறுப்பது, காலங்காலமாய் ஆணினம் செய்துகொண்டிருக்கும் அயோக்கியத்தனம்.

அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சாசன அமர்வு வயது வித்தியாசமின்றி அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தரிசனை செய்யலாம் என்று முன்பு தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற இளம் வயதுப் பெண்கள் தடுக்கப்பட்டனர். அவர்களும், அவர்களுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் போராட்டங்கள் நடத்த, கேரளாவில் பெரும் பதற்றமே நிலவியது.

பெண்களுக்கு அனுமதி உத்தரவு வாபஸ்

இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் அவற்றை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப ஒப்புகொண்டதாம். இந்த விசாரணை இன்றும் நிலுவையில் உள்ளதாம். அதனால், சபரிமலையில் இளம் பெண்களுக்கான அனுமதி உத்தரவைக் கேரள அரசு வாபஸ் பெற்றதாம். இப்படிச் சொல்லியிருப்பவர் சம்பந்தப்பட்ட அமைச்சர்.

பெண்களை இழிவுபடுத்தித் தொடர்ந்து அடக்கி ஆளுவதற்கு ஆண்களால் திட்டமிட்டு நடத்தப்படும் நாடகமே இதுவும் இது போன்றவையும். 

பெண்களுக்கு ஆதரவாக ‘அமர்வு’ தீர்ப்பு வழங்கினாலும், “பெண்களை[இளம் வயது] என் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது” என்று ஐயப்பனே சொல்லியிருப்பதாக, வேத புராணங்களை ஆதாரம் காட்டி இவர்கள் கதை பரப்பவும் செய்வார்கள்.

ஆகவே,

இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே வழி.....

“நீதிமன்றம்[அமர்வு] அனுமதித்தாலும், இனி இப்போது மட்டுமல்ல, எப்போதும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல மாட்டோம்” என்று பெண்கள் சபதம் ஏற்பதுதான். இதனால் பெண்ணினத்திற்கு எந்தவொரு இழப்பும் இல்லை.

செய்வார்களா நம் பெண்கள்?!

===================================================================

https://tamil.news18.com/news/national/kerala-sabarimalai-girls-allowed-announcement-was-with-drawn-by-kerala-govt-839308.html