புதன், 21 டிசம்பர், 2022

உயிரும் மயிரும்!!!

தோன்றுவதும் அழிவதுமாகப்  பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். இந்நிலையில், நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோமே, அது ஏன் என்று எண்ணி எண்ணி மயங்கி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை.....

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் இன்றியமையாத் தேவைகளாகும்.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி, குறிப்பாக, மனித உயிர்களின் உருவாக்கம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ‘உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, இயங்குவதற்குரிய ஓர் உடம்பைப் பெற்றுப்[இதைத்தான் உயிர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்] பின்னர் இந்த உடம்பு அழியும்போது, அதன் உள்ளே இருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் உயிரும் இல்லாமல்போகிறது.

ஆக, அணுக்களால் ‘உயிர்’ எனப்படும் ‘உடம்பு’ உருவாகிப் பின்னர் அழிவதென்பது, ஏறத்தாழ அணுக்களால் ஒரு மயிர் உருவாகி அழிவதைப் போன்றதுதான்.

எனவே, உடம்பைத் தவிர்த்து, உடம்புக்குள் உயிர் என்றோ, ஆன்மா என்றோ எந்தவொன்றும் இல்லை என்று உறுதிபடச் சொல்லலாம்!
=========================================================================