திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்நாளைக் கழிப்போர் எண்னிக்கை அதிகரித்துவருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
25-29 வயதுக்குட்பட்டவர்கள்கூட, திருமணத்தில் ஆர்வம் காட்டுவதில்லை.
2011 முதல் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே திருமணமாகாத பெண்களின் சதவீதம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஆண்களிடையே 12% அதிகரித்துள்ளது.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்ட ‘மாதிரிப் பதிவு ஆய்வு அறிக்கை 2019’இன் படி, இந்தியாவில் தனியாக வாழும் ஆண்களின் சதவீதம் 1.5% ஆகவும், தனியாக வாழும் பெண்களின் சதவீதம் 5.2% ஆகவும் இருந்தன. தனியாக வாழும் பெண்கள் என்பது விவாகரத்துப் பெற்றவர்கள் அல்லது, கணவனைப் பிரிந்தவர்கள் அல்லது, மணம் புரிய விரும்பாதவர்கள் அல்லது, கைம்பெண்ணாக வாழ்பவர்களைக் குறிக்கிறது.
மணம் புரியாமல் வாழ்வதற்குப் பெண்கள் சொல்லும் காரணங்கள் மனதைப் பெரிதும் வருத்துவனவாக உள்ளன.
"சிறுவயதில் இருந்தே, என் அம்மா படும் கஷ்டங்களை நான் பார்த்திருக்கிறேன். குழந்தை பிறப்பது நம் கையில் இல்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழக்கூடாது என்று முடிவு செய்தேன். ஒருமுறைகூடத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் என் மனதில் தோன்றவில்லை. எனக்குச் சுதந்திரம் வேண்டும். நான் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தவுடன் நிம்மதியாகத் தேநீர் பருக வேண்டும்" -ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பாடம் நடத்தும் பரணி என்ற 39 வயதுப் பெண் கூறிய வார்த்தைகள் இவை.
"எனக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. என் கணவர் என்னைச் சித்ரவதை செய்தார். அந்தத் திருமணத்திலிருந்து நான் வெளியேறினேன். அன்றிலிருந்து நான் திருமணத்தில் ஆர்வம் காட்டவில்லை. என் படிப்பிலும் வேலையிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” -என்றிப்படிச் சொன்னவர் 37 வயதான ஷரோன்.
“நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி, திருமணத்தில் பெண்கள் பல வரைமுறைகளையும் நிபந்தனைகளையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. பெரிய நகரங்களில் நிலைமை மாறியிருந்தாலும், கிராமங்களில் இன்றும் இதே நிலைதான்” -இப்படி, தான் மணம் புரிந்துகொள்ளாததற்கான காரணத்தைச் சொல்பவர் ‘பரணி’ என்னும் பெண்.
இவர் மேலும், எங்களுடையது பெரிய குடும்பமாக இருந்ததால் அம்மா சரியாக ஓய்வெடுத்ததில்லை. பிரசவம் முடிந்து மறுநாள் வயிற்றில் துணி கட்டிக்கொண்டு வீட்டு வேலை செய்வார். இதையெல்லாம் பார்த்து நான் நொந்துபோனேன். நான் இளம் பருவத்தில் இருந்தபோதுகூட, திருமணம் பற்றிய எண்ணம் இருந்ததில்லை. ஒரு நாள்கூட ஆண் துணை பற்றி நான் கனவிலும் நினைத்ததில்லை" என்று சொல்லி வருந்தினார்.
“அவருக்கு மதுப் பழக்கம் இருந்தது. தினமும் இரவு என்னை அடிப்பது வழக்கம். என் குழந்தைக்கு இரண்டு வயது ஆகும்வரை ஒரு நாள் கூட என்னை அடிக்காமல் இருந்ததில்லை. என் உடம்பில் இருந்த தழும்புகள் எல்லோருக்கும் தெரியும்; அவர்கள் ஆர்வத்துடன் பார்த்தார்கள். இவையனைத்தும் எனக்கு ஏற்படுத்திய உளவியல் ரீதியான பாதிப்புடன் நான் வாழ்கிறேன்” என்றிப்படிச் சொல்பவரும் ஒரு பெண்தான்.
* * * * *
தனிமையைத் தேர்வு செய்ததற்கு, பெண்கள் சொல்லும் காரணங்கள் இவை.
திருமணத்தை வெறுக்கும் ஆண்கள் என்ன சொல்கிறார்கள்? தேடினால் காரணங்களை அறிதல் சாத்தியமாகும்.
தேடுங்கள்... தேடுவோம்!
==================================================================================
நன்றி: bbc.com