எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 22 டிசம்பர், 2022

முடக்கும் கோமாவும் அடுக்கடுக்காய் எட்டுக் காரணங்களும்!

‘கோமா’?

மனித உடம்பிலுள்ள அத்தனை உணர்ச்சிகளும் முற்றிலுமாய் முடங்கிப்போய், முழு மயக்க நிலைக்கு உள்ளாவது ‘கோமா’ எனப்படும்.

இதயம் இயங்குதலும் மூச்சு விடுதலும் மட்டும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

கோமாவில் சிக்கி, படுத்தபடுக்கையாய், ஏறத்தாழ ஒரு பிணம்போல் கிடப்பதற்கு 8 காரணங்களைப் பட்டியலிடுகிறார் டாக்டர் ஜி.சுரேந்திரபாபு[திருவானைக் கோவில்] அவர்கள்.

1.உடம்பின் சர்க்கரை அளவு 30 கிராமுக்குக் குறைவாக இருத்தல்.
2.பிராண வாயு கிடைக்காமலிருத்தல்.
3.கல்லீரலும் சிறுநீரகமும் நோய்களால் பாதிக்கப்படுதல்.
4.வலிப்பு நோயின் தாக்கம்.
5.உடம்பில் மிகை அளவில் கரியமிலவாயு சேர்தல்; அதிக அளவில் கால்சியம் சேர்தல்; சோடியம் குறைதல்.
6.உயரமான இடத்திலிருந்து கீழே விழும்போதும், வாகன விபத்தில் சிக்கும்போதும் நரம்பு மண்டலம் பாதிப்படைதல்.
7. மூளையில் கட்டிகள் உருவாதல்.
8.மைய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் அளவுக்கு மருந்துகளையும் போதைப் பொருட்களையும் உட்கொள்ளுதல்.

கோமாவுக்கு முதல் ஐந்து பாதிப்புகள் காரணங்களாக இருக்குமெனில்.....

சரியான காரணத்தை அல்லது காரணங்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் கோமாவுக்கு உள்ளானவர் மீண்டெழுவதற்கு வாய்ப்புள்ளது.

சிகிச்சை அளிப்பதற்கு, ஒருவர் கோமாவில் கிடந்த கால அளவும் கருத்தில் கொள்ளப்படும்.

இவ்வாறு, கோமா குறித்து மிகத் தெளிவானதொரு விளக்கத்தைத் தந்த டாக்டர் அவர்கள், உலக அளவில், ஒருவர் 39 ஆண்டுகள் கோமாவில் கிடந்து உயிரிழந்ததாகவும், வேறொருவர் 19 ஆண்டுகள் கோமாவில் உணர்விழந்து கிடந்து, சுய உணர்வு பெற்றுச் சுகமாக வாழ்ந்தார் என்றும் கூறியிருப்பது நாம் முற்றிலும் அறியாத அரிய நிகழ்வுகள் ஆகும்!

===========================================================================

நன்றி: ‘ராணி’ வார இதழ்[25.12.2022].