வெள்ளி, 23 டிசம்பர், 2022

'கற்பழிக்கவும்’ கற்றுக்கொடுக்குமா கூகுள்[தேடுபொறி]?!?!

‘விஜயகுமார்[51] ஒரு மென்பொருள்[சாஃப்ட்வேர்] பொறியாளர்; பெங்களூருவில் மனைவி&குழந்தைகளுடன் வாழ்ந்தவர். 

இதய நோய் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாகவே மூச்சுவிடுவதில் சிரமம் இருந்திருக்கிறது.

இதற்கான சிகிச்சைகளைப் பெற்றும்கூட பிரச்சினை தீராததால், தற்கொலை செய்துகொள்வது என்று முடிவெடுத்திருக்கிறார்.

வலி ஏதுமில்லாமல் மரணத்தைத் தழுவிடல் வேண்டும் என்பது அவரின் அந்திமக்கால ஆசை.

பொது அறிவுச் சுரங்கமான கூகுளில் தேடியதில், ‘பூட்டப்பட்ட அறையில் முகத்தை மூடி, நைட்ரஜன் வாயுவை[கேஸ்] பைப் மூலமாக மூக்கில் செலுத்தினால் வலியில்லாமல் இறக்கலாம்’ என்னும் வழிமுறையை அறிந்திருக்கிறார்.

அன்றைய தினத்தில், பணி முடிந்து வீடு திரும்பும்போது உகந்த இடத்தில் காரை நிறுத்தி, கண்ணாடிகளை மூடிவிட்டு, தான் அறிந்துவைத்திருந்த முறையில் உயிரை மாய்த்துக்கொண்டார்’ என்பது இன்றைய[23.12.2022] ‘தினகரன்’ நாளிதழ்ச் செய்தி.

உடலளவில் வாழ்வே இயலாத வகையில் தாங்கொணாத வலியுடன் வாழ்பவர்கள் இந்த வகை வழிமுறையைத் தேர்வு செய்வதில் தவறில்லைதான். ஆனால், 

இத்தகையவர்கள், வலியைத் தாங்கிக்கொண்டாலும், உயிர் பிழைக்கவே வாய்ப்பில்லை என்று முடிவெடுக்க வேண்டியவர்கள் மருத்துவர்கள்தான்; சம்பந்தப்பட்ட நோயாளிகள் அல்லர். ஆனால், எந்தவொரு டாக்டரும் நோயாளி செத்துவிடுவார் என்பதை அறிந்திருந்தாலும் அதை அவர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்ல விரும்புவதில்லை.

இது குறித்த விரிவான விவாதங்களுக்குப் பிறகும், இது விசயத்தில் முடிவெடுக்க நடுவணரசு தயக்கம் காட்டுகிறது. காரணம்.....

99% நோயாளிகளுக்கு இறப்பு நிச்சயம் என்று நம்பப்படுகிற நிலையிலும், அரிதாக 1% நோயாளிகள் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவதும் உண்டு.

ஆகவே, எத்தகைய வலியாயினும் அதைத் தாங்கிக்கொண்டிருந்தால், அவர் பிழைப்பதற்கு வழி பிறக்காதா என்று உற்றார் உறவினர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

எது எவ்வாறாயினும்,

நோயாளி தன் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கண்ட வகையில் உயிர் துறப்பது அனுமதிக்கப்பட்டால், காதல் தோல்வி, கடன் தொல்லை, மனைவியுடன் கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைப்பவர்களும் மேற்கண்ட வழியைப் பின்பற்றுவார்கள் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை.

எனவே, இவ்வகை மரணம் குறித்து எளிதில் ஒரு முடிவை மேற்கொள்வது சாத்தியமில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில், வலியில்லாமல் மரணத்தைத் தழுவுவதற்குக் கூகுள் வழி சொல்லியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றே தோன்றுகிறது.

‘மாட்டிக்கொள்ளாமல் திருடுவது எப்படி?’, ‘உடலுறவில் திருப்தி பெறுவது எப்படி?’ என்பது பற்றியெல்லாம் பாடம் கற்பிக்கிற தளங்களை இது அனுமதித்திருப்பதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம்; ‘கொலை செய்வது எப்படி?’, வலியில்லாமல் தற்கொலை செய்வது எப்படி?’ என்றெல்லாம் கற்றுத்தருகிற தளங்களைக் கூகுள் அனுமதிப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவே இயலாது.

கூகுள் மேற்கொண்டுள்ள இந்நிலை நீடிக்குமேயானால், விரைவில், ‘அகப்பட்டுக்கொள்ளாமல் கற்பழிப்பது எப்படி?’ என்று பாடம் கற்பிக்கிற தளங்கள்கூட இதில் இடம்பெற வாய்ப்புள்ளது!

===========================================================================