சனி, 3 டிசம்பர், 2022

மனிதத் ‘தலைமாற்று அறுவை’ சாத்தியமா? எப்போது? விளைவுகள்?!?!

'மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளிக்கு உடலின் மற்ற அனைத்து பகுதிகளும் நன்றாகச் செயல்படும் பட்சத்தில், அவரின் தலையை நீக்கிவிட்டு, மூளை நல்ல நிலையிலுள்ள வேறொருவரின்[உடம்பு பெருமளவு செயலற்ற நிலையில் உள்ளவர்] தலையைப் பொருத்தினால் அவரை உயிர் பிழைக்கச் செய்யலாம்' என்பது இத்தாலியைச் சேர்ந்த ‘செர்ஜியோ கனாவெரோ’ என்னும் விஞ்ஞானியின் நம்பிக்கை.

இவர் இந்த அறுவைக்கான தொழிநுட்பத்தைத் தான் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். சிகிச்சை பெறுவதற்குப் பலர் முன்வந்துள்ள நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்தவரும், தண்டுவட நோய், தசைச் செயலிழப்பு என உடம்பில் பல பாதிப்புகளுக்கு உள்ளானவருமான 30 வயதான கணினி விஞ்ஞானி ‘ஸ்பிரிடோனவ்’[மூளை நல்ல நிலையிலுள்ளவர்; நல்ல நிலையிலுள்ள உடம்பில் இவரின் தலையைப் பொருத்துவது விஞ்ஞானியின் திட்டம்]] தேர்வு செய்யப்பட்டார்.

மருத்துவர்கள், செவிலியர்கள் என்று 150 பேர் இதற்குத் தயார்படுத்தப்பட்டனர்.

இந்த அறுவை மேற்கொள்ளப்பட்டால், ’ஸ்பிரிடோனவ்’ ஒருமாத காலம் கோமா நிலையில் வைக்கப்படுவார். அவருக்கு மருந்துகள் செலுத்தப்படும். புதிய உடலுக்கும் தலைக்கும் ஒத்திசைவு ஏற்படவேண்டும் என்பதே இவற்றிற்கான காரணம் என்றார் மேற்கண்ட விஞ்ஞானி.

ஆனால், மருத்துவ உலகம் இந்த அறுவைசிகிச்சை முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது, ஒருவரை 4 வாரங்கள் கோமாவில் ஆழ்த்துவதன் மூலம், ஆரோக்கியமாக வைத்திருப்பது சாத்தியமில்லை என்று கலிபோர்னியா பல்கலைக் கழக நரம்பியல் பேராசிரியர் ‘ஹாரி கோல்டுஸ்மித்’ கூறினார்.

இந்நிலையில், 

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு எலியின் தலையைத் துண்டித்து எடுத்து அதனை மற்றொரு எலியின் தலையுடன் வெற்றிகரமாக இணைத்துள்ளனர். இதன் மூலம், அந்த எலியானது பல மணி நேரங்கள் இயல்பாக உயிர் வாழ்ந்ததையும் நிரூபித்து உலகை ஆச்சரியத்தில் உறையவைத்துள்ளனர்[https://www.dailythanthi.com/News/Districts/2017/05/10131700/Head-replacement-Rehearsal-operation.vpf] என்பது செய்தி.

இந்த நிகழ்வுக்குப் பிறகு எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இச்சிகிச்சையைச் செய்வது சாத்தியப்படுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை, வெற்றிகரமாக, இந்த அறுவை செய்துமுடிக்கப்பட்டால்.....

சிகிச்சைக்கு உள்ளான உடம்புக்கும் மூளைக்கும் ‘ஒத்திசை’ சாத்தியமா?

புதிய தலை பொருத்தப்பட்டவர், அறுவைக்கு முன்பிருந்த குணங்களும் பண்புகளும் மாறாமல் இருப்பாரா?

ஓர் ஆணின் தலையை ஒரு பெண்ணுக்குப் பொருத்தினால் அவர் தனக்கிருந்த அதே குணங்களுடனும் பண்புகளுடனும் இருந்துகொண்டிருப்பாரா?

பெரியவர்களின் தலையைச் சிறுவர்களுக்குப் பொருத்தினால், சிறுவர்களின் உடம்பு ஏற்குமா?

என்றிவ்வாறான பல தவிர்க்க இயலாத சந்தேகங்களுக்கு விடை கண்டறிவது அத்தனை எளிதல்ல என்று மருத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், சிகிச்சைக்குச் சம்மதம் தெரிவித்துக் காத்திருந்த ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்பிரிடோனவ்’ திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்கும் தந்தையானார்; அறுவைக்கு இனி தான் தயாராக இல்லை என்றும் அறிவித்தார்.

அவர் இல்லையென்றாலும், அறுவைக்குத் தம்மை உட்படுத்திக்கொள்வதற்குச் சில நபர்கள் தயாராக இருப்பதாகச் சொல்லும் விஞ்ஞானி ‘செர்ஜியோ கனாவெரோ’, சீன விஞ்ஞானி ஒருவருடன் இணைந்து குரங்குகளை வைத்து இந்தச் சிகிச்சையைச் செய்ததாகத் தெரிகிறது.

இதன் பிறகு, இது விசயத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. இதை விவரிக்கும் ‘காணொலி’ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆக......

மேற்கண்ட வேறு வேறு ஆய்வு நிலைகளைக் கூட்டிக் கழித்தால், தலைமாற்று அறுவை நடப்பதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம்.

===========================================================================
***வேறு வேறு தளங்களில் சேகரித்த தகவல்களின் தொகுப்பு இப்பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக