//13,8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சிறியதாக இருந்த பிரபஞ்சம் வெப்பமாகவும், அடர்த்தியாகவும் இருந்த பெருவெடிப்பு காரணமாகப் பெரிதாகத் தொடங்கியது. ஒரு வினாடியில் பில்லியனில் ஒரு பங்கிற்கும் குறைவான நேரத்தில், அந்தச் சிறிய பிரபஞ்சம் "காஸ்மிக் இன்ஃப்ளேஷன்" எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் அதன் அசல் அளவைவிடப் பில்லியன் மடங்குக்கு மேல் விரிவடைந்தது.
பிரபஞ்சம் விரிவடையும்போது இந்தக் கருந்துளைகளும் விரிவடைவதாக ஹவாய்ப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது//[.https://www.hindutamil.in/news/life-style/944933-black-holes-may-be-the-source-of-mysterious-dark-energy-that-makes-up-most-of-the-universe.html].
* * * * *
‘பிரபஞ்சம் விரிவடைகிறது’.....
இதை மீண்டும் மீண்டும் அறிவியல் உலகம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.
‘கோள்களும் நட்சத்திரங்களும், விஞ்ஞானிகளாலும் அறியப்படாத மேலும் பலவும் இடம்கொண்டிருக்கும் இடம் அண்டவெளி’ என்பதை அறிவியல் அடிச்சுவடிகூடக் கற்காத நம்மைப் போன்ற பலரும் அறிவர்.
நீளம், அகலம், சுற்றளவு, கனபரிமாணம் என்று எந்தவொரு அளவுகோலுக்கும் உட்படாதது இந்த அண்டவெளி என்றும் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
இந்த அண்டவெளியைத்தான் விஞ்ஞானிகள் பிரபஞ்சம் என்கிறார்கள்.
இந்தப் பிரபஞ்சத்துக்கான நீளம், அகலம், சுற்றளவு ஆகியவற்றை[மையப்புள்ளி என்று எதுவும் இல்லாதது இது] விஞ்ஞானிகள் மிகத் துல்லியமாக அளந்து கணக்கிட்டுச் சொன்னதில்லை. எந்தவொரு சாதனத்தைக் கொண்டும் பிரபஞ்சத்தின் விளிம்பைக் கண்டறியவும் இல்லை.
இந்நிலையில், அது விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்று அவ்வப்போது அறிக்கை வெளியிடுகிறார்களே, எப்படி?
விளிம்பு எது என்று அறியப்படாத நிலையில், கோள்களுக்கு[+நட்சத்திரங்கள்] இடையேயான இடைவெளி அதிகரிப்பதை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஒட்டுமொத்தப் பிரபஞ்சமே விரிவடைகிறது என்று சொல்வது சரியா?
விரிவடைகிறது பிரபஞ்சம் என்றால், பின்னொரு காலத்தில் இது சுருங்குவதும் சாத்தியம்தானே?
விரிவடைதலோ சுருங்குதலோ இல்லாமல் எப்போதும் இருந்த நிலையிலேயே இருந்துகொண்டுள்ளது பிரபஞ்சம் என்றுகூடச் சொல்லலாம்தானே?
இவை நம்மைப் போன்ற சாமானியர்கள் கேட்கும் கேள்விகள்.
இதற்கெல்லாமும் நம் விஞ்ஞானிகள் விளக்கம் தந்திருக்கிறார்களா?
“ஆம்” என்றால், சொல்லிக்கொள்ளும் வகையில் அறிவியல் அறிவு பெற்ற வலைப்பதிவர் எவரேனும் விளக்கமாக ஒரு பதிவு வெளியிடுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.
==================================================================================================
***போதிய அறிவியல் அறிவு இல்லையெனினும் ஆர்வம் காரணமாக உருவான பதிவு இது. பிழை காணின் பொருட்படுத்தாதீர்! [‘அச்சுப்பிச்சு’... ‘சிறுபிள்ளைத்தனமான' என்று பொருள்கொள்க!]