பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 25 பிப்ரவரி, 2023

முனியாண்டி ‘சைவ’ப் பிரியாணித் திருவிழா!!!

திருமங்கலம் அருகே முனியாண்டி பிரியாணித் திருவிழா நடைபெறுவதும், ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு முனியாண்டிச் சாமிக்குப் பிரியாணி படைத்துத் தாமும் உண்டு கழிபேரின்பம் பெறுவதும் மிகப் பல ஆண்டுகளாக இடம்பெறும் நிகழ்வாகும்.

இந்த ஆண்டும்[88ஆவது ஆண்டு] இவ்விழா சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது என்பது இன்றைய ஊடகச் செய்தி[ https://tamil.news18.com/photogallery/madurai/muniandi-temple-biryani-festival-held-vadakampatti-near-thirumangalam-898734-page-14.html].

சுவாமிக்கு மாமிச விருந்து படைப்பதற்கு முன்பு அபிசேகம் ஆராதனை எல்லாம் முறைப்படி செய்யப்பட்டது.

இந்த விழாவிற்குத் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் & உள்ளுர் வெளியூர் மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் ஏதுமறியாத ஆடுகளையும்[150] கோழிகளையும் கொன்றுதான் பிரியாணி உணவு செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.

இது அசைவம் உண்ணும் எல்லாச் சாமிகளுக்கும் தெரியும்.

முனியாண்டி ஓர் அசைவச் சாமி.

கடவுள் இருப்பது உண்மையானால், முனியாண்டி போன்ற அசைவச் சாமிகள் இருப்பதும் சாத்தியமே. இருந்துவிட்டுப்போகட்டும்.

அறியாமை இருளில் நம் மக்கள் மூழ்கிக்கிடந்த காலத்தில், ஆடு, கோழி விருந்தெல்லாம் படைத்து முனியாண்டியைத் திருப்திப்படுத்தி அவருடைய அருளைப் பெறலாம் என்று நம்பியது மன்னிக்கத்தக்க குற்றம்தான். 

ஆனால், கடவுள் என்றொருவர் உண்டா என்னும் முற்றுப்பெறாத தொடர் விவாதம் நடைபெறும் இன்றைய அறிவியல் யுகத்தில், முனியாண்டி என்றொரு அசைவச் சாமி இருப்பதாக நம்புவதும், அவருக்கு அசைவப் பிரியாணி படைத்து விழாக் கொண்டாடுவதும் ஏற்புடையதாக இல்லை. 

இல்லவே இல்லை.

சாமியின் பெயரால் ஒரே ஒரு நாளில் நூற்றுக் கணக்கில் ஆடுகளையும் கோழிகளையும் கழுத்தறுத்துக் கொல்வது மனிதாபமற்ற செயல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

இதை, இன்றெல்லாமும் இந்த விழாவைக் கொண்டாடுபவர்கள் உணர்தல் வேண்டும்.

உணர்ந்து…..

முனியாண்டி சாமிக்கு அசைவம் தவிர்த்து, சைவப் பிரியாணி படைத்து வழிபடலாம்.

ஆடு கோழி அறுத்துச் செய்கின்ற அசைவப் பிரியாணியை நம்மவர்கள் மட்டுமே உண்டு மகிழலாம்.

ஆக,

இனி எதிர்வரும் ஆண்டுகளில், முனியாண்டி பிரியாணித் திருவிழா’ என்னும் பெயரைத் தவிர்த்து, ‘முனியாண்டி விலாஸ் பிரியாணித் திருவிழா’ என்னும்  பெயரில் விடுதி நடத்துவோர் விழா நடத்தலாம்.

நம் கோரிக்கையை ‘முனியாண்டி விலாஸ் பிரியாணிக் கடை’ நண்பர்கள் ஏற்பார்களா?

இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி,வில்லூர்,அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை பெற்றுச் சென்றனர்.150 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பக்தர்களுக்கு பிரியாணி செய்து வழங்கப்பட்டது.

இறைச்சியைத் துண்டிக்கும் செயலைச் சின்னஞ்சிறுசுகளின் கண்களில் படாமல், கொட்டகை அமைத்துத் தனியிடத்தில் செய்யலாமே.

====================================================================================================